சென்னை: பாரதிய மகிளா வங்கியின், தமிழகத்தின் முதல் கிளை, சென்னையில் நேற்று துவங்கப்பட்டது. மும்பையில், பாரதிய மகிளா வங்கியை,பிரதமர் மன்மோகன் சிங் துவங்கிய, அதே நேரத்தில், சென்னையிலும், அந்த வங்கியின் கிளை திறக்கப்பட்டது.
மத்திய நிதித்துறையின் கூடுதல் செயலர் ஸ்ரீநேகா ஸ்ரீவத்சவா கிளையைத் திறந்து வைத்து, ஐந்து பெண்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்கியதற்கான கணக்கு புத்தகத்தையும், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் கல்லூரி மாணவியருக்கு, கடன் வழங்குவதற்கான அனுமதி கடிதங்களையும் வழங்கினார்.
அவர் பேசியதாவது:
"மத்திய அரசின் நிறுவனமாக, பாரதிய மகிளா வங்கி துவங்கப்படும்' என, பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், நிதி அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி, ஒன்பது மாதங்களில், மகிளா வங்கி, 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டுள்ளது. துவங்கும்போதே, அரசு நிறுவனமாக துவங்கப்படும் வங்கி என்ற பெருமையை, பாரதிய மகிளா வங்கி பெறுகிறது. தற்போதுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும், தனியாரிடமிருந்து அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள். பெண் கல்வி, சுய தொழில் போன்றவைக்கு, மகிளா வங்கி முக்கியத்துவம் அளிக்கும். இந்தியாவில், வங்கியைப் பயன்படுத்தும் பெண்களின் சதவீதம் மிகக் குறைவு. உலகளவிலும் இந்த நிலை தான் நிலவுகிறது. தற்போது துவங்கப்பட்டுள்ள மகிளா வங்கி மூலம், பெண்கள் அதிகளவில், வங்கியைப் பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதனால், பெண்களின் முன்னேற்றத்துக்கு, இந்த வங்கி உறுதுணையாக இருக்கும். இவ்வாறு, நிதித்துறை கூடுதல் செயலர் பேசினார். இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ரிசர்வ வங்கி அதிகாரிகள், ஊழியர்கள், தொழில் அதிபர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர், திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
சென்னையில் துவங்கப்பட்டுள்ள கிளை குறித்து, மகிளா வங்கி துணைப் பொதுமேலாளர் நளினி கூறியதாவது; சென்னை அண்ணாசாலையில், டி.வி.எஸ்., பஸ் நிறுத்தம் அருகே உள்ள, ஓவர்சீஸ் டவர்சின் தரைத் தளத்தில், சென்னை மகிளா வங்கி கிளை துவங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் வங்கி செயல்பட துவங்கியுள்ளது. பிற வர்த்தக வங்கிகளைப் போல, மகிளா வங்கியும், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படும். இதில், மேலாளர் மற்றும் ஏழு ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், மேலாளர் மற்றும் ஆறு ஊழியர் பெண்கள். ஒருவர் மட்டும் ஆண். பிற வர்த்தக வங்கிகளின் செயல்பாடுகள் அனைத்தையும் பின்பற்றி, மகிளா வங்கி செயல்படும். ஆனால், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், புதிய திட்டங்கள், குறைந்த வட்டி விகிதம் ஆகியவை, விரைவில் அறிவிக்கப்படும். இதற்கான, பணிகளை வங்கித் தலைமை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, பெண்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய நிர்வாக பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது, ஏ.டி.எம்., வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்டர்நெட் பேக்கிங் உள்ளிட்ட பிற வசதிகள் உருவாக்கப்படும். இவ்வாறு, நளினி கூறினார்.
மும்பையில் முதல் வங்கி:
நாட்டின், முதல் பெண்கள் வங்கியை, மும்பை நரிமன் பாயின்டில், நேற்று பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், காங்., தலைவர் சோனியா, மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம், விவசாய அமைச்சர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்றனர்."வீடியோ கான்பரன்சிங்' மூலம், சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, கவுகாத்தி ஆமதாபாத்தில் உள்ள கிளைகளையும் துவங்கி வைத்தார். டில்லி மற்றும் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரிலும் இந்த வங்கிக் கிளைகளை திறக்க தி"ட்டமிடப்பட்டிருந்தது. இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அங்கு பின்னர் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE