மும்பை : வரும் லோக்சபா தேர்தலில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தை கையில் எடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த யோசனையை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் வழங்கி உள்ளார்.
சரத் பவார் யோசனை :
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கையில் எடுக்க இதுவே சரியான சமயம் எனவும், அது லோக்சபா தேர்தலின் போக்கையே மாற்றி அமைக்கும் எனவும் காங்கிரசிற்கு யோசனை கூறி உள்ளது. இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும் பேசி உள்ளார். லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு வரும் குளிர்கால கூட்டத்தொடர் அல்லது பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் வாக்காளர்களின் நம்பிக்கையை திரும்பப் பெற முடியும் எனவும் சரத் பவார் தெரிவித்துள்ளார். சரத் பவாரின் இந்த யோசனையை பிரதமரும், சோனியாவும் ஏற்றுக் கொண்டு வரும் பார்லி., கூட்டத்தொடரிலேயே இதனை நிறைவேற்றவும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
பவார் வாக்குறுதி :
கட்சியின் இளம்பெண்கள் அணியின் கூட்டத்தில் பேசிய சரத் பவார், லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தேசியவாத காங்கிரஸ் ஆரம்பம் முதலே ஆதரித்து வருகிறது; அதனை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி அளித்துள்ளது; இதன் முன்னோட்டமாகவே மகளிர் வங்கிகளையும் மத்திய அரசு அமைத்துள்ளது; பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பெண்கள் தலைமையிலேயே இயங்கி வருகின்றன; ஆனால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவாக லோக்சபாவில் இதுவரை ஓட்டுக்கள் கிடைக்கவில்லை; இது தொடர்பாக மகளிர் வங்கி திறப்பு விழாவிற்காக டில்லி சென்றிருந்த போது பிரதமரிமும், சோனியாவிடமும் பேசி உள்ளேன்; அவர்களும் மசோதாவை உடனே நிறைவேற்ற ஒப்புக் கொண்டுள்ளனர். இவ்வாறு சரத்பவார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூகம் :
மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் லோக்சபா தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும், இந்த மசோதாவை எதிர்ப்பவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள் எனவும் சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகள் குறித்து பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சார செய்து வரும் வேளையில், மக்களின் எண்ணங்களை திசை திருப்புவதற்காக பவார் இந்த யோசனையை தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மசோதாவிற்கு ஆதரவு :
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தவிர பா.ஜ., இடதுசாரி கட்சிகள், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே இந்த மோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியன எதிர்த்துள்ளன. அதே வேளையில் சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாதி ஆதரவும், பாதி எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் 2010ம் ஆண்டு மார்ச் 9ம் தேதியே நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.