ஐதராபாத்: ஆந்திராவை 2 ஆக பிரிக்கும் நடவடிக்கையால் மாநிலத்தில் பெரும் சட்டம் ஒழுங்கு சவால்களை சந்திக்க நேரிடும் என உளவு துறை தலைமை இயக்குனர் ஆசீப்இப்ராகீம் கடுமையாக எச்சரித்துள்ளார்.
டில்லியில் நடந்த டி.ஜி.பி.,மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார். ஆந்திராவில் தெலுங்கானா பிரிப்பு நடைமுறைக்கு வரும் போது, தேசிய அளவில் அது ஒரு பெரும் சவாலாக இருக்கும். பாதுகாப்பு மற்றும் போலீஸ் படையினருக்கு சிரமத்தை கொடுக்கும். இந்த சூழல் மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது. இது உளவுத்துறையினருக்கும் பளுவை அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூட சமீபத்தில் பாதுகாப்பு விஷயம் கேள்விக்குறியாகும், நக்சல்கள் நடமாட்டம் அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவை தனித்தெலுங்கானா பிரிப்பதற்கு கடந்த அக்டோபரில் மத்திய அமைச்சரவை, அனுமதி அளித்தது. தொடர்ந்து ஷிண்டே தலைமையில், ஒரு அமைச்சர் குழு அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை குழு வரும் 27ம் தேதி கூடி முக்கிய முடிவுகள் எடுக்கிறது.
'பல விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசித்துள்ளோம், இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வரும் பார்லி., கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேறும்,' . என உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
தனி மாநிலம் தொடர்பான ஒரு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இவர் அந்த மாநில சட்டசபைக்கு அனுப்பி வைப்பார். அங்கு தீர்மானம் நிறைவேற்றப்படும்.