சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 10வது சுற்று டிரா ஆனது. இதன் மூலம், நார்வேயின் கார்ல்சன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். சொந்த மண்ணில் ஆனந்த் ஏமாற்றம் அடைந்தார்.
சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. "நடப்பு சாம்பியன்' இந்தியாவின் ஆனந்த், 43, நார்வேயின் இளம் வீரர் கார்ல்சன், 22, இதில் பலப்பரீட்சை நடத்தினர். மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின், ஒன்பது சுற்று முடிவில் கார்ல்சன் 6 புள்ளிகள், ஆனந்த் 3 புள்ளிகள் பெற்று இருந்தனர். இன்று 10வது சுற்று நடந்தது. இதில் ஆனந்த் கறுப்பு காய்களுடன் விளையாடினார். வெள்ளைக் காய்களுடன் களம் கண்ட கார்ல்சன் தனது ராஜாவுக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார்.
ஆனந்த் தனது மந்திரிக்கு முன்னால் இருந்த சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தினார். 14வது நகர்த்தலில் கார்ல்சன் தனது குதிரையை வைத்து, ஆனந்த் மந்திரியை காலி செய்தார். இதற்கு பதிலடியாக, ஆனந்த் தனது ராணியால், கார்ல்சன் குதிரையை வெளியேற்றினார். 34வது நகர்த்தலில் கார்ல்சன் தனது ராணியை வைத்து, ஆனந்த் ராணியை வெட்டினார். பதிலடியாக, ஆனந்த் தனது குதிரையால், கார்ல்சனின் ராணியை வெளியேற்றினார். 65வது நகர்த்தலில் போட்டியை "டிரா' செய்ய இரு வீரர்களும் சம்மதித்தனர்.
இதன் மூலம், 10வது சுற்று முடிவில், கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார். ஆனந்த் 3.5 புள்ளிகள் மட்டும் பெற்றார். இதனால் மீதமுள்ள 2 சுற்று போட்டிகள் நடக்காது. இதன் மூலம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையை கார்ல்சன் பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.8.40 கோடி பரிசாக வழங்கப்படும்.ஆனந்துக்கு ரூ.5.60 கோடி வழங்கப்படும்.
ஓய்வெடுக்க முடிவு- ஆன்ந்த்: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை கார்ல்சனிடம் பறிகொடுத்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன் பின்னர் ஆனந்த் கூறுகையில், 5வது சுற்று ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது. 5வது சுற்று ஆட்டம் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பாக அமைந்தது. நகர்த்தல்களில் தவறுகள் செய்ததால் வெற்றி பறிபோனது. இந்த தொடரில் எனது ஆட்டம் திருப்தியளிக்கவில்லை. இந்த தோல்வி ஏமாற்றமளிக்கிறது. சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என கூறினார்.
கடுமையான போராட்டத்துக்கு பலன்- கார்ல்சன்: பட்டம் வென்ற கார்ல்சன் கூறுகையில், பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. நீண்ட கால உலக செஸ் சாம்பியன் கனவு தற்போது நினைவானது. தனது கடுமையான போராட்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது. இந்தியாவில் செஸ் ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது என கூறினார்.