புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட, ஊழல் புகாரில் சிக்கிய, 144 அரசு அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையமான, சி.வி.சி., தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில், தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, சி.வி.சி., வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பரில், அரசுத் துறையின் பல்வேறு அதிகாரிகளுக்கு எதிராக, 2,940 ஊழல் புகார்கள் வந்தன. இந்த புகார்களை, முறையாக விசாரித்து, நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பாக, 144 அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்களில், அதிகபட்சமாக, 55 பேர், மத்திய கலால் மற்றும் சுங்கத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள். 11 பேர், ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள். ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள அதிகாரிகளில், 79 அதிகாரிகளுக்கு, அதிகபட்ச அபராதம் விதிக்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த, 79 பேரில், வருமான வரித் துறை தலைமை கமிஷனரும் அடக்கம். மேலும், 14 அதிகாரிகள் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர், தமிழகத்தை சேர்ந்த, கூடுதல் டி.ஜி.பி., இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.