இதுவா வெற்றி? எல்.முருகராஜ், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்

Updated : நவ 24, 2013 | Added : நவ 24, 2013 | கருத்துகள் (53) | |
Advertisement
மிக அபூர்வமாய், நம் ஊர், 'டிவி'யில் நல்ல நிகழ்ச்சிகள் வருவது உண்டு. அவற்றில் ஒன்று இந்தி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் அமீர் கான் தொகுத்து வழங்கிய, 'சத்யமேவ ஜெயதே' என்ற அரட்டை நிகழ்ச்சி. பெண் கருக்கொலை, பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுவர், சிறுமியர், மருத்துவ முறைகேடு என்று, சமூகத்தில் நிலவும் அவலங்களை அலசி ஆராய்ந்து, அவற்றை தொகுத்தளிப்பார்.'சில பிரச்னைகளை
இதுவா வெற்றி? எல்.முருகராஜ், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்

மிக அபூர்வமாய், நம் ஊர், 'டிவி'யில் நல்ல நிகழ்ச்சிகள் வருவது உண்டு. அவற்றில் ஒன்று இந்தி நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் அமீர் கான் தொகுத்து வழங்கிய, 'சத்யமேவ ஜெயதே' என்ற அரட்டை நிகழ்ச்சி. பெண் கருக்கொலை, பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுவர், சிறுமியர், மருத்துவ முறைகேடு என்று, சமூகத்தில் நிலவும் அவலங்களை அலசி ஆராய்ந்து, அவற்றை தொகுத்தளிப்பார்.

'சில பிரச்னைகளை எடுத்து பேசும் போது, 'இதையெல்லாமா பிரச்னையாக பேசுவது?' என்று கேட்கின்றனர். ஏன், இதையெல்லாம் பேசக்கூடாதா?' என்று சொல்லிவிட்டுதான், நிகழ்ச்சியையே அவர் ஆரம்பிப்பார்.அது போலத் தான், இங்கே ஒரு விஷயம் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது அது 'மங்கள்யான் ராக்கெட்' பிரச்னை.'அது தான் பிரமாதமாப் பறந்துவிட்டதே, அப்புறம் என்ன, அதைப்பத்தி பேசறதுக்கு இருக்கு? அது நாட்டோட பெருமை, விஞ்ஞானிகளின் பிரமிக்கத்தக்க வெற்றி' என்றெல்லாம், நீங்கள் சொல்வதில், எந்தவித மாற்று கருத்தும் சொல்லப்போவது இல்லை.ஆனால், காலம் காலமாய் ராக்கெட்டை மேலேயும், கடலுக்கு உள்ளேயும் விட்டதால் கிடைத்த பலன் என்ன? தொலைத்த பணம் எவ்வளவு?இது போல ராக்கெட் பறக்கவிடும் போது, நாட்டின் ஏழ்மையையே, மொத்தமாக மூட்டை கட்டி, மேலே அனுப்பியது போல, ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ஆனந்தப்படுவதும், பிரதமர் துவங்கி ஜனாதிபதி வரை, வாழ்த்து வழங்குவதும், பின் கல்லுாரி, பல்கலைக்கழகங்களில், இந்த ராக்கெட் புராணம் பாடியபடி வலம்வருவதும், கூப்பிடும் பல்கலைக்கழகங்களின் சக்திக்கேற்ற, டாக்டர் பட்டம் பெற்றுக்கொள்வதும், அனைத்து, 'டிவி'களிலும் யாரும் பார்க்காத, அதிகாலை சிறப்பு விருந்தினர் பகுதியில், இடம் பெற்று பேசுவதும் தான் நடக்கும்.இது அடுத்த செயற்கைக்கோள் பறக்கும் வரை தொடரும். அடுத்த செயற்கைக்கோள் பறக்கவிடப்பட்டதும், இதே பல்லவிகள், மீண்டும் ஆரம்பிக்கும். இந்த முறை, திட்ட இயக்குனர் மாறியிருக்கலாம் அல்லது இஸ்ரோ தலைவரே ஓய்வுபெற்றிருக்கலாம்.

ஒரு செயற்கைக்கோள் பறக்கவிட்டதால், மக்களுக்கு கிடைத்த, கிடைக்கும் கண்கண்ட பலன் என்ன என்பது தான், இப்போதைய கேள்வி.கடந்த 1969ம் ஆண்டு, ஜூலை, 20ம் தேதி (கிட்டத்தட்ட 43 ஆண்டு) அமெரிக்கா விட்ட ராக்கெட்டில் போய், சந்திரனில் கால்வைத்த ஆம்ஸ்ட்ராங் கொண்டுவந்த கல்லைதான், இன்னமும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். இதைத்தாண்டி என்ன நடந்தது என்பதை, எந்த பாமரனும் அறிந்திலன்.இந்த, 'மங்கள்யான்' பறப்பதற்கு மட்டும், 450 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருக்கிறது. இதுவரை பறந்த, பறக்க முடியாமல் போன, ராக்கெட்டுகளுக்கான செலவை எண்ணிப் பார்க்கும் போது எத்தனை பூஜ்யம் போடுவது என்பதே, தெரியாத அளவிற்கு கண் கட்டுகிறது.'மங்கள்யான்' செயற்கைக்கோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., எக்ஸ்.எல்.,சி25 ராக்கெட் 250 கி.மீ., பயணித்து, புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, பின், 23,500 கி.மீ., பயணித்து, நீள்வட்ட பாதையிலும், பின், 10 மாதகாலம், 30 கோடி கி.மீ., பயணித்து, செவ்வாய்கிரக சுற்றுப்பாதையையும் அடையுமாம்.அதன்பின், 'அங்கு தண்ணீர், கனிம வளம், பருவநிலை பற்றி ஆராய்ந்து, அப்படியே அங்கே மனிதர்கள் வாழும் சூழல் உள்ளதா?' என்றும் கண்டுபிடிக்குமாம். கண்டுபிடித்து பூமியில் இருந்து, 30 கோடி கி.மீ., தூரத்தில் உள்ள செவ்வாயில் கொண்டு போய், ஆட்களை குடியமர்த்த போகிறார்களா... தெரியவில்லை.குடும்பத்தை காப்பாற்ற, ஆண்டு முழுவதும் மழையிலும், வெயிலிலும் கிடந்து வாடி, தீபாவளி போன்ற நல்ல நாளில் கூட, ஆண்டிற்கு ஒரு முறை, தன் சொந்தங்களை பார்க்க, ரத்த சம்பந்தங்களை சந்திக்க, சொந்த ஊருக்கு ரயிலில் பயணம் செய்து போகமுடியவில்லை. பதினாறு மணி நேரம் என்றாலும், 'அனைத்தையும்' அடக்கி, முன்பதிவு இல்லாத பெட்டியில், பாத்ரூம் வாடையை சகித்து, படிக்கட்டு கதவுகளில் தொங்கி, பயணம் செய்தாக வேண்டிய அவலம். கூடுதலாக ரயில் விடவேண்டாம்; கூடுதலாக பெட்டியை கூட சேர்க்கமுடியாத அளவிற்கு, ரயில்வேக்கு பட்ஜெட் பிரச்னை.

உயிர்காக்கும் மாத்திரை, மருந்துகளை வெளியே வாங்க, வசதியில்லாத ஏழை நோயாளிகள். அரசு மருத்துவமனையின் நீளமான வரிசையில், மணிக்கணக்கில் காத்திருந்து நகர்ந்தபடியும், ஊர்ந்தபடியும் மாத்திரை கவுன்டரை அடையும் போது, 'இந்த வாரமும், மாத்திரை வரலை போய்ட்டு, அடுத்த வாரம் வா பார்ப்போம்' என்று, விரட்டியடிக்காத குறையாக விரட்டும் நிதி நிலையில், அரசு மருத்துவமனைகள்.இன்றைக்கும், மலைவாழ் மக்களை பிரசவ நேரத்தில், மூங்கில் குச்சியில் தொட்டில் கட்டி தூக்கிய படி ஓடி வருகின்றனர்.அவர்கள் பள்ளத்தில் விழுந்து, எழுந்து அடிவாரத்திற்கு ஓடி வருவதற்குள், இரண்டு உயிர்களுக்கும் உத்தரவாதமில்லை. இவர்களுக்கான ஆரம்ப சுகாதார நிலையத்தை, மலையில் அமைக்காவிட்டாலும் பரவாயில்லை; அவர்களை, பத்திரமாக கீழே கொண்டுவர, ஒரு லகுவான ஸ்ட்ரெச்சர் கூட இன்னும் வாங்கமுடியவில்லை; காரணம் துட்டு இல்லை.கடைசி காலத்திலாவது பசி, பட்டினி இல்லாமல், கவுரவமாய் வாழ, முதியோர் உதவித்தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகங்களில், பஞ்சடைத்த கண்களுடனும், பரிதாபமான உடைகளுடனும், பஸ்சுக்கு கூட காசு இல்லாமல், ஆண்டுக்கணக்கில், கம்பை ஊன்றியே, நடந்தபடி வந்து போகும் முதியோர்கள், 'அப்புறம் பார்க்கலாம்' என்று, ஒற்றைவரியில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். காரணம் நிதி இல்லை.

ஊரில் உள்ள ஆயிரத்தெட்டு அரசு அலுவலகங்களின், படிக்கட்டுகளில் ஏறமுடியாமல், அல்லல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு சாய்வு தளம் அமைப்பதற்கு கூட காசு இல்லை; மேலிடத்திற்கு எழுதி அனுப்பிக்கொண்டே இருக்கின்றனர். என்றாவது ஒரு நாள், பட்ஜெட்டில் சாய்வுதளம் கட்ட, பணம் ஒதுக்குவர் என்ற நம்பிக்கையுடன், காரணம் அதற்கும் பட்ஜெட் இல்லை.கோவைக்குள், ஒரு பாலம் இருக்கிறது. அதை சீரமைத்தோம் என்று சொல்லி, அந்த பாலம் வழியாக பயணம் செய்யும் வாகனங்களிடம், 'பத்தை கொடு, இருபதை கொடு' என, கடந்த கால் நுாற்றாண்டாக வசூல் செய்தபடி இருக்கின்றனர், அப்படியும், அந்த சிறிய பாலத்தை சீரமைத்த செலவை, எடுக்க முடியவில்லையாம். இன்னும், ஒரு அரை நுாற்றாண்டுக்கு, அங்கே வழிப்பறி போல, வசூல் செய்து கொண்டுதான் இருக்கப்போகின்றனர். பொதுமக்களை வாட்டி எடுத்துக்கொண்டுதான் இருக்கப்போகின்றனர். 'வாங்கினது வரை போதும், இனி பாலத்தில் இலவசமாக போய்க் கொள்ளுங்கள்' என்று சொல்ல, இன்னும் வாய்வரவில்லை; காரணம் பட்ஜெட் இல்லை.இதையெல்லாம் முடித்துவிட்டு பின், 450 கோடி செலவில், ராக்கெட் விட்டாலும், 4,500 கோடி ரூபாய் செலவில், ராக்கெட் விட்டாலும் யார் கேட்கப்போகின்றனர்.

'இதையும், அதையும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்?' இது நாட்டின் கவுரவம், விண்வெளியில் நமக்கு கிடைத்த வெற்றி. மூக்கு உள்ளமட்டிலும், சளி என்பது போல நமக்கு ஏழைகள், அவர்களை திருப்தி செய்யமுடியாது; என்றே பலரும் சொல்வர்.அவர்களுக்கு, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தந்த பதிலைத்தான் தரவேண்டியிருக்கிறது. 'டெலிமெடிசின், டெலி எஜுகேசன், கிராம வள ஆதார மையங்களை மையப்படுத்தும், திட்டங்களை நிறுத்திவிட்டு, 2007ல் போட்ட திட்டத்தை, இப்போது செயல்படுத்துவதில் என்ன பிரயோஜனம்?செயற்கைக்கோளின், பிரதான உபயோகமான டிரான்ஸ்பாண்டர்களில், கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது அதை சரி செய்யும் திட்டமேதும் இல்லை. எனவே, செவ்வாய் கிரகத்திட்டம் என்னைப்பொறுத்தவரை, தவறான முன்னுரிமை கொடுத்து, செயல்படுத்தப்பட்டு உள்ளது' இவ்வாறு, அவர் சொல்லி உள்ளார்.இவருக்கு செவ்வாய் செயற்கைக்கோள் ஆர்வலர்கள், என்ன பதில் தரப்போகின்றனர். நாட்டின் கவுரவம் என்பது, ராக்கெட் விடுவதில் இல்லை. நாட்டில் உள்ள ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரங்களை பெருக்கி, அவர்களை மகிழ்ச்சியும், திருப்தியும்படுத்துவதில்தான் இருக்கிறது.இவர்கள் மாட மாளிகைகள், பளிங்கு ரோடுகள் கேட்கவில்லை. படித்த படிப்பிற்காக இல்லாவிட்டாலும், கவுரவமாய் சாப்பிடுவதற்காக, ஒரு சம்பாத்தியம், ஆரோக்கிய குறைவு ஏற்படும் போது, மொத்த சொத்தையும் எழுதிக்கேட்காத, தரமான மருத்துவம், சுகாதாரமான சுற்றுப்புற சூழல், பயமுறுத்தாத, பாதுகாப்பான போக்குவரத்து. எளிமையான, இனிமையான வாழ்க்கை இல்லாதவருக்கும், இயலாதவருக்கும் முன்னுரிமை. இதெல்லாம் செய்துகொடுத்துவிட்டு, எத்தனை ராக்கெட் விட்டாலும், யார் கேட்கப்போகின்றனர்.
இமெயில்: murugaraj2006@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (53)

Manian - Chennai,இந்தியா
06-டிச-201305:56:54 IST Report Abuse
Manian ஒரு நாட்டின் முன்னேற்றம் அது செய்யும் ஆராச்சியின் படியே நடக்கும். ஒரேஒரு புதிய கண்டுபிடிப்பால் புதிய தொழில்கள் , அநேக வேலை வாய்ப்புக்கள், அரசாங்கத்திற்கு வரிப்பணம், புதிய கண்டுபிடிப்பு சார்ந்த இதர தொழில்கள் என்று ஒரு நீண்ட பட்டியலே உள்ளது. அமெரிக்கா, யூரொப்ப நாடுகள், சீன , ஜப்பான் போன்ற நாடுகளில் முனெற்றம் வர அவர்களது ஆராய்ச்சியே காரணம். இன்று புதிய மெட்ரோவிற்க்கு ரயில் பெட்டிகள் வாங்க நம்மிடம் ஏன் தொழிற்சாலைகள் இல்லை. வெறும் உணவு, நீர், இருப்பிடம் மட்டும் போதாது. அவை சார்ந்த ஆராய்ச்சிகளும் உடன் வேணடும் இந்த மாதிரி ஆராச்சிகள் பயன் தர நீண்ட நாளாகும். கீ மு 3ம் ஆண்டில் சாணக்கியன் அரசியல், பொருளாதாரம், வாணிபம் என்று செய்த கண்டு பிடிப்பால் காந்த குப்தன் அவருக்குப்பின் வந்த அரசர்களும் மக்களும் பயன் அடைந்தார்கள். ஆராய்ச்சிக்காக மன்னன் தலை சிறந்த அறிஞ்கர்கலை ஆதரித்தார்கள். இதையே இப்போது அமெரிக்காவில் எம்.ஐ.ட்டி, ச்லன்போ~ர்டு, போன்ற தனியார்கள் செய்கிறார்கள். அவற்றின் பயனாக அவை உலக்கில் உள்ள அறிவில் சிறந்த மாணவர்களை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்கிறார்கள். நம் நாட்டில் நடுத்தர வாழ்வு போதும் என்று இருப்பவர்கள் அதிகம். லஞ்சம், பொறாமை போன்ற குணம் கொண்டவர்கள் ஆராச்சி செய்ய விரும்புவர்களை நாட்டை விட்டு விரட்டுகிறார்கள். நமது எண்ணம் என்ன என்பது முக்கியம் இல்லை, தன முடிவு எப்படி இருக்கும் என்பதே திரிந்து கொள்ளாமல் ஆராச்சி வீண் என்பது வருந்தத்தக்கது. சந்திரன், செவ்வாய் போன்ற கிரஹங்களை அமெரிக்கா, சீன போன்ற வர்கள் சென்றுவிட்டால் , நம்மை அங்கே வர வேதா மாட்டர்கள். அங்குள்ள உலோஹங்கள் ஒரு நாளும் நமக்கு கிடைக்காது. அப்போது, நமது நிலை என்னவாகும் என்று சிந்திக்கவேணடும். மக்கள் தேவைகள் எல்லாம் ஆராச்சிகளை நிறுத்தினால் நிறையாது. திரு முக ராஜின் மன வருத்தம் பொது நலம் எண்ணம் கொண்டது, ஆனால் அவரது சிந்தனையின் முடிவு எப்படி நாட்டிற்கு நன்மை செய்யும் என்பதை புள்ளி விவரங்களுடன் அவர் தரவேண்டும். இல்லையேல் அரசியல் அரங்கில் பிறரின் கொள்ளைக்கு வித்திடும்.
Rate this:
Cancel
P.GOWRI - Chennai,இந்தியா
02-டிச-201314:56:44 IST Report Abuse
P.GOWRI அறிவியலுக்காக செலவு செய்வதை தப்பாக பேசாதிர்கள் ப்ளீஸ். அறிவியல் வளர்ச்சி நாட்டுக்கு தேவை.எத்தனை ஊழல் நம்மை சுற்றி நடந்து கொண்டு இருக்கிறது . அதை பார்க்கும் போது இது ஒன்றுமே இல்லை .
Rate this:
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
01-டிச-201312:58:51 IST Report Abuse
Mohandhas அமெரிக்காவிலும் நம்மை விட மோசம்மான நிலையில் ஏழைகள் உள்ளனர்.. ஹோட்டலில் சாப்பிட்ட எஞ்சிய சாப்பாட்டு பொருட்ட்களை ஒரு மேனேஜர்(அமெரிக்கர்)மூட்டை கட்டியதாக என் நண்பர் கூறினார்... அங்கும் ஏழ்மை உள்ளது..ஏன் நாம் இன்னும் ஏழையாக உள்ளோம் ... மக்களின், அரசு, அரசியலின் தவறே தவிர இஸ்ரோ வை குறை கூற தேவை இல்லை ..அவர்களாவது கொடுக்கும் பணத்துக்கு கொஞ்சமாவது உழைக்கிறார்கள் ..ஆனா பஸ் , ரயில், ஹெலிகாப்டர் எல்லாம் வெளிநாட்டிலிருந்து தான் வங்கி கிட்டு இருக்கோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X