வளமான இந்தியாவை உருவாக்குவோம்!| Dinamalar

வளமான இந்தியாவை உருவாக்குவோம்!

Updated : நவ 25, 2013 | Added : நவ 24, 2013 | கருத்துகள் (1)
வளமான இந்தியாவை உருவாக்குவோம்!

தனக்கு ஒப்புமை அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது. பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகளில் போதிய திறனோடு செய்ய முடியாமல் அரசாங்கம் அடைந்த தோல்விகள் ஏராளம். அதற்கு இணையான அல்லது அதைவிட பெரிய தோல்வியும் ஒன்று உண்டு. அது, அரசாங்கம் செய்யாமல் விட்ட காரியங்களால் ஏற்பட்ட தோல்வி. நீதிமன்ற அமைப்பின் செயல்பாட்டை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.


ஆட்சிமுறை அமைப்பின் அங்கங்களாக இருப்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்ற அமைப்பு ஆகியவை. சட்டங்களை இயற்ற சட்டமன்றமும், சட்டங்களை செயல்படுத்த அதிகாரவர்க்கத்தை உள்ளடக்கியதாக நிர்வாகமும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களும் உள்ளன. இப்போது இருக்கும் நீதிமன்ற அமைப்பின் குறைபாட்டுப் புள்ளிவிவரங்கள் நிலைதடுமாற வைப்பவை. இருபதாயிரத்துக்கும் மேலான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30 லட்சம் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், மனத்தை மரத்துப் போகச் செய்யும் அளவில் சுமார் 2 கோடியே 20 லட்சம் வழக்குகள் மீதியுள்ள நீதிமன்றகளிலும் நிலுவையில் உள்ளன. இவ்வளவு ஏன், உயர்நீதிமன்றங்களில் 1950ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்கூட இன்றும் உள்ளன. தாமதாக நீதி கிடைப்பது நீதி மறுக்கப்பட்டதற்குச் சமம் என்ற ஆழமான கவலை ஒருபுறம் என்றாலும், வழக்குகளின் தேக்கம் வியாபாரத் துறையின் மீதும் கேடான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாதபோது, நடந்தேறும் ஆற்றல் உள்ள வர்த்தகங்கள் நடைபெறாமல் போகின்றன. அதனால் நாட்டின் பொருளாதாரம் பெருத்த நஷ்டம் அடைகிறது.


பொருளாதார விடுதலை:

நாட்டின் பொருளாதாரத்தை சோஷலிச கட்டுபாட்டுத் தளைகள் சிலவற்றில் இருந்து விடுவித்த குறைந்தளவு தாராளமயமாக்கம், நமக்கு 7 முதல் 9 சதவிகிதம் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி பெறும் நிலையைக் கடந்த 20 வருடங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவசியத் தேவையாக இன்னும் கூடுதலான தாராளமயமாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் பொருளாதார ஆட்சிமுறைகளில் முன்னேற்றம் காணாமல், முழு தாரளமயமாக்கம்கூட வளர்ச்சியை நீடிக்கப் போதுமானதாக இருக்காது. அப்படி ஒருவேளை வளர்ச்சி நீடிக்காது போனால், நீண்ட காலமாக வறுமையில் சிக்கித் தவிக்கும் பல கோடி மக்களுக்கு பொருளாதார விடுதலைப் பெற ஒரு நியாயமான வாய்ப்பு என்றுமே கிடைக்காது.
இந்தப் புத்தகத்தில், பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவே முற்பட்டுள்ளேன்: ஏன் இந்தியா ஏழைமையில் உள்ளது? இந்தியாவை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவின் மாற்றத்தை கொண்டு வர நாம் என்ன செய்ய முடியும்? 'இது போன்ற கேள்விகளில் அடங்கியுள்ள மக்கள் நலனுக்கான விளைவுகள் மனத்தை உலுக்கக் கூடியவை. இவற்றை ஒருமுறை சிந்தித்துவிட்டால் பிறகு வேறு எதைப் பற்றியும் சிந்திப்பது கடினமாகவே இருக்கும்.' என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் லூகாஸ் கூறியது நினைவுக்கு வருகிறது.


ஆணி வேரின் தன்மை:

இந்தியாவின் பிரச்னைகளின் ஆணிவேராக இருப்பது அரசாங்கம் என்ற வாதம் சரியானது என்றால், அவற்றுக்கான தீர்வுக்கு அரசாங்கத்தின் குறிக்கோள்களை மாற்றி அதன் மூலம் விளைவுகளை மாற்ற வேண்டும். தற்போதைய அரசாங்க முறையின் குறிக்கோளான 'வளங்களை உறிஞ்சி சுரண்டுவது' ஆங்கிலேயர்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட ஒன்று. அது மாறாத வரை, இந்தியா வறுமையாலும், குறைபட்ட முன்னேற்றத்தாலும் பாதிக்கப்பட்டே இருக்கப் போகிறது.
இந்தியாவின் பிரச்னை வெறும் பொருளாதாரப் பிரச்னை அல்ல, அது அரசியல் பிரச்னை. இப்போதைக்குப் பிரச்னையைத் தீர்க்க நமக்கு இருக்கும் சிறந்த வாய்ப்பு அரசியல் சார்ந்தது. நாம் நமக்கு இருக்கும் சக்தியைக் கூட்டாகப் பயன்படுத்தி, பொறுப்புள்ள பதவிகளுக்கு நல்ல மக்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்தியர்கள் அவ்வளவு எளிதாக் கிளர்ச்சியடைந்து, செயலில் இறங்கக்கூடியவர்கள் அல்ல. சகிக்க முடியாத விஷயங்களைக்கூட மனமுவந்து சகித்துக்கொள்கின்றனர். ஆனால் இந்தியர்களின் இத்தகையை சகிப்புத்தன்மையை இந்தியாவின் அனுகூலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பால் ஜான்சன், ஃபோர்ப்ஸ் இதழில் 2004ம் ஆண்டு 'வளம் பெற வேண்டுமா? சகித்துக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில், 'பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மிகச் சிறந்த பண்பு சகிப்புத்தன்மை. ஹிந்து மதத்தின் இயல்பு சகிப்புத்தன்மையுடன் இருப்பது, (மற்றும்) அதற்கே உரிய அபூர்வமான ஒரு முறையில் இடங்கொடுக்கும் விதமாகவும் இருப்பது. ஜாவாஹர்லால் நேரு மற்றும் அவரின் குடும்ப வம்சாவளி வந்தவர்களின் சோஷலிச ஆட்சியின் கீழ் அரசாங்கம் சகிப்புத்தன்மை அற்றதாக, கட்டுப்பாடுகள் உடையதாக, விபரீதமான அதிகாரவர்க்கம் கொண்டதாக இருந்தது. அது பெருமளவு மாறிவிட்டது (இருப்பினும் பெரும்பாலான அதிகார வர்க்கம் இன்னும் உள்ளது). ஹிந்துக்களின் இயல்பான சகிப்புத்தன்மை வாய்ந்த மனநிலை அரைமார்க்ஸிச இறுக்கத்தை மாற்றியுள்ளது.


இந்தியர்களின் முன்னேற்றம்:

அவர்கள் போக்கில் விடப்படும்போது இந்தியர்கள் (சீனர்களைப் போல்), எப்போதும் வளமான ஒரு சமூகமாக ஆகிறார்கள். கொடுங்கோலன் இடி அமினால் துரத்தப்பட்டு, சகிப்புத்தன்மை கொண்ட பிரிட்டன் சமுதாயத்தில் வரவேற்கப்பட்ட உகாண்டாவின் இந்திய மக்கள்தொகையை (வம்சாவளியினரை) உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். சமீப காலத்தில் பிரிட்டனில் குடியேறிய சமூகங்களில் இந்த சமூகமே வேறெந்த சமூகங்களையும் விட அதிக கோடீஸ்வரர்களைக் கொண்டதாக உள்ளது. கடின உழைப்பு, வலுவான குடும்ப உறவுகள், கல்வியின் மீது உள்ள பற்று ஆகியவை உடைமைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட மக்களை எவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரும் என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளனர்.'என்று குறிப்பிட்டுள்ளார்
ஹிந்து என்ற வார்த்தை சம்பந்தப்பட்ட எந்த ஒரு விஷயத்திலும் இருந்து தன்னை தூரப்படுத்திக் கொள்வதில் பெரும் அக்கறை காட்டிய நேருவின் பைத்தியக்கார சோஷலிச முறையின் கீழ் இந்தியா அடைந்து வந்த கொடுமையான பொருளாதார வளர்ச்சி 'ஹிந்து வளர்ச்சி விகிதம்' என்று பெயரிடப்பட்டதைக் கண்டு எப்போதுமே வியந்துள்ளேன். அதை 'நேருவின் வளர்ச்சி விகிதம்' என்று பெயர்மாற்றம் செய்வது பொருத்தமாக இருக்கும்.


நாம் என்ன செய்யப் போகிறோம்?

இந்தியாவின் மாற்றம் எளிதாக இருக்கப் போவதில்லை. ஆனால் சாத்தியமற்றதாகவும் இருக்கப் போவதில்லை. இந்தியா அந்த மாற்றத்தை உடனடியாக வேண்டி நிற்கிறது. இரண்டு தலைமுறை மக்கள் நமது பெற்றோர்களும், பாட்டன்மார்களும் நேருவின் சோஷலிச பாதையில் இந்தியா சென்றதால் படாதபாடு பட்டனர். நாம் ஒரு மாற்றுப் புள்ளியில் நிற்கிறோம். நம்மால் ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியும். நம் பெற்றோர் அனுபவித்த அதே தலைவிதிதான் நமது குழந்தைகளுக்குமா என்பதை நம் செயல்களே தீர்மானிக்கப் போகின்றன.
'உங்களுக்கு தேசம் மேன்மேலும் வறுமையிலும் ஊழலிலும் சரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து இருந்தது. அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?' என்று நம்மை பார்த்து யாராவது கேள்வி கேட்கும் நாள் வரலாம். அது உங்கள் மகனாக அல்லது மகளாக்கூட இருக்கலாம். அப்போது அவர்களைப் பார்த்து, அவர்களுடைய கண்களை தைரியமாக நோக்கி, 'நான் என்னால் முடிந்த அளவு செய்தேன், ஒரு மாற்றத்தை உருவாக்க முற்பட்டேன்' என்று சொல்ல உங்களால் முடியவேண்டும்.
இந்தியாவை உண்மையான விடுதலை பெற்ற நாடாக மாற்றமடையச் செய்வதுதான் நமக்கு இருக்கும் சவால். நாம் அந்த காரியத்தைக் கையில் எடுக்கவில்லை என்றால், யார் செய்யப் போகிறார்கள்? இப்போது செய்யவில்லை என்றால் பின் எப்போது?

நாளைய இந்தியா நிறைவு பெறுகிறது


அத்தானு தே, தமிழில் : செ. கிருஷ்ணமூர்த்தி

கிழக்கு பதிப்பகம்

200 பக்கம், விலை ரூ.150

இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-702-2.html


ஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X