புதுடில்லி : நாடே 2014 லோக்சபா தேர்தலுக்காக தயாராகி வரும் வேளையில் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. தேர்தல் கமிஷனில் கடந்த 2 மாதங்களில் 142 புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான கட்சிகள் நிதி மோசடி குற்றங்களில் தொடர்புடையவை என தேர்தல் குழு கண்டுபிடித்துள்ளது.
புதிய கட்சிகள் :
நடப்பு ஆண்டின் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1,392 ஆக இருந்துள்ளது. ஆனால் நவம்பர் மாத மத்தியில் கட்சிகளின் எண்ணிக்கை 1,534 ஆக அதிகரித்துள்ளது. சாமியார்கள், கட்டிட கான்ட்ராக்டர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர்களால் இந்த புதிய கட்சிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகள் அரசியலுக்காக இல்லாமல் வியாபார நோக்கத்துடன் துவங்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் கருதுகிறது. 11 உறுப்பினர்கள் இருந்தாலே கட்சி ஆரம்பித்து, அதற்கு முறைப்படி அங்கீகாரம் பெற முடியும் என்பதால் அரசியல் கட்சி துவங்குவது நாட்டில் மிகவும் சுலபமாகி உள்ளது. இந்த புதிய அரசியல் கட்சிகள் தங்களின் தொழில்கள் மூலம் கிடைக்கும் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது, ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்ய அரசியலை பயன்படுத்தி வருகின்றன.
அரசியல் வியாபாரம் :
சமீபத்தில் பாலியல் சர்ச்சைக்குள்ளாகி தற்போது சிறையில் இருந்து வரும் சாமியார் ஆசாராமின் மகன் நாராயண், குஜராத்தில் ஓஜஸ்வி என்ற கட்சியை துவக்கி உள்ளார். டில்லியில் முன்னாள் பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவர் பகுஜன் சமாஜ்வாதி (பாபா சாகிப்) என்ற கட்சியை துவக்கி அதன் தலைவராகவும் உள்ளார். மும்பையில் கட்டிட கான்ட்ராக்டர் ஒருவர் இந்திய லோக் கட்சி என்ற கட்சியை துவக்கி உள்ளார்.வடக்கு டில்லியில் ரியல் எஸ்டேட் தரகராக இருந்த மகேஷ் தியாகி தனது பாரத் விகாஸ் கட்சியில் 4000 உறுப்பினர்களை சேர்த்துள்ளார். லோக்சபா தேர்தலில் உ.பி.,யில் 10 இடங்களில் போட்டியிடவும் இவர் திட்டமிட்டுள்ளார். இவருக்கு அருகில் பணம் எண்ணும் இயந்திரத்துடன் ஒருவர் எப்போதும் இருக்கிறார். அரசியல் தனது தொழிலுக்கு மிகுந்த உதவியாக இருப்பதாகவும், தனது தொழிலை விட அரசியலில் நிறைய ஆதாயம் கிடைப்பதாகவும் தியாகி தெரிவித்துள்ளார்.
தேர்தல் கமிஷன் ஆய்வு :
தேர்தல் கமிஷன் நடத்திய ஆய்வில், இந்த புதிய அரசியல் கட்சிகள் கடந்த 2009 முதல் 2012 வரை எந்தவொரு அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடவோ, அரசியல் நோக்குடன் பணம் செலவு செய்யவோ இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பங்கேற்ற 1250 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 1150 கட்சிகள் மொத்தம் ஒரு சதவீதம் ஓட்டுக்கள் மட்டுமே பெற்றுள்ளன. ஒருவேளை அக்கட்சிகள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அக்கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சிகள் முளைத்து வருவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. 16 சதவீதம் அரசியல் கட்சிகள் மட்டுமே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இவைகளில் பெரும்பாலானவை தங்களின் தொழில் லாபத்தை பங்குச் சந்தை உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்யவும், கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றவுமே கட்சி நடத்துவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
கட்சி நிதி :
இந்த அரசியல் கட்சிகளில் பெரும்பாலனவைகள் பெறும் கட்சி நிதிகள் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றம் நிறுவனங்கள் மூலம் பெறுவதும் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான நிதி தொகை எங்கிருந்து பெறப்படுகிறது என்பதே அறிய முடியவில்லை. 2012ம் ஆண்டில் காசிதாபாத்தை சேர்ந்த இந்திய இளைஞர் கட்சி அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூ.15 லட்சம் நிதி பெற்றுள்ளது. ராஷ்டிரிய விகாஸ் கட்சி, கடந்த 2 மாதங்களில் நிறுவனம் ஒன்றிடம் இருந்து ரூ.1.25 கோடியை கட்சி நிதியாக பெற்றுள்ளது. மற்றொரு கட்சி, கட்சி நிதியாக தங்கம் மற்றும் வைர நகைகளை பெற்றுள்ளது. இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் கமிஷ்னர் எஸ்.ஓய்.குரேஷி கூறுகையில், சில அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து அதன் மூலம் சொத்துக்களையும் நகைகளையும் வாங்கி வருவதாகவும் அதற்கு உரிய ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய கட்சிகளை நிதி மோசடி மசோதாவின் கீழ் உட்படுத்தி விசாரிப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் கமிஷனின் இந்த கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE