சென்னை : தமிழக விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் கெய்ல் நிறுவன திட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐகோர்ட் உத்தரவு :
கொச்சியில் இருந்து மங்களூருவிற்கு தமிழகம் வழியாக குழாய் மூலம் எரிவாயு அனுப்ப கெய்ல் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த எரிவாயு குழாய் தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக செல்ல உள்ளது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் எனவும், அதனால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தமிழக விவசாயிகளின் கோரிக்கை மற்றும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் கெய்ல் நிறுவனத்தின் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்த கெய்ல் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டதற்கு, அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கெய்ல் நிறுவனம் தெரிவித்திருந்தது. எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மாற்று வழியாக செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், தமிழக அரசின் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளனர். மேலும் கெய்ல் நிறுவனம் தமிழக விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.
விவசாயிகள் அதிர்ச்சி :
சென்னை ஐகோர்ட் உத்தரவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்புக் குழுவின் தலைவர் நாகராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக விவசாயிகளுக்கு எதிராக ஐகோர்ட், எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.மேலும் சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE