மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பலர் மனுக்களை வழங்கினர். அவற்றை அதிகாரிகளிடம் வழங்கிய அமைச்சர் அழகிரி, அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.புதுக்குளம் வேலுச்சாமிநகரில் குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாக தெரிவித்தனர். அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடந்தது. இன்று முதல் தண்ணீர் வழங்கப்பட உள்ளது.மேலமாத்தூர் நாடார் தெருவில் பஸ்நிறுத்தம் செய்யப்படும். மேலும் தாராபட்டியில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. துவரிமானில் புதிய ரேஷன் கடை இன்று துவக்கப்பட உள்ளது. கொடிமங்கலம் கிராமத்தில் திருமண மண்டபம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனே அதற்கு இடம் தேர்வுசெய்யும் பணியில் மூர்த்தி எம்.எல்.ஏ., ஒன்றிய தி.மு.க., செயலாளர் கார்த்தி உட்பட பலர் ஈடுபட்டனர். இதுதவிர பல தனிநபர்களின் கோரிக்கைகளுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.மண்டபங்கள் ஆய்வு: மதுரை திருப்பாலையில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டப பணிகளை மு.க.அழகிரி ஆய்வு செய்தார். உத்தங்குடியில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு கூடுதல் வசதிகளை செய்து தரும்படி உத்தரவிட்டார்.
அவர் கூறியதாவது: மதுரை நகரில் பசுமலை, அண்ணாநகர், திடீர்நகர், சுப்ரமணியபுரம், கரும்பாலை, எஸ்.எம்.பி.காலனி உள்பட 15 இடங்களில் மக்களின் நலனுக்காக உப்புத் தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக மாற்ற, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் நிதி வழங்கப்பட்டுள்ளது. குலமங்கலத்தில் கூடுதல் பள்ளிக் கட்டடத்திற்கு 5 லட்சம் ரூபாய், சமுதாயக் கூடத்திற்கு 5 லட்சம் ரூபாய், டி.வி.எஸ்., நகர் பூங்கா மேம்பாட்டுக்காக 40 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் பொதுமக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.