புதுடில்லி : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வின் ஆதரவு இல்லாமல் 3வது அணி என்பது உருவாக முடியாது என லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
காங்கிரசிற்கு ஆதரவு :
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : எங்கள் கட்சியின் கூட்டணி எப்போதும் மதசார்பற்றதாகவே இருக்கும்; அதன் அடிப்படையில் பா.ஜ.,வை விட காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பதையே விரும்புகிறோம்; காங்கிரசுடனான கூட்டணியையே தொடர லோக் ஜனசக்தி கட்சி விரும்புகிறது; 2014 தேர்தல் கூட்டணி குறித்து தற்போதைய கூட்டணி கட்சிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம்; தொடர்ந்து காங்கிரசிற்கு ஆதரவு தர லோக் ஜனசக்தி விரும்பினாலும், கூட்டணி கட்சிகளின் முடிவை பொறுத்தே எதிர்கால கூட்டணி அமையும்; ராஷ்டிரிய ஜனதா தள கட்சியுடன் இணைந்தே இதுவரை செயலாற்றி வருகிறோம்; ஆனால் அக்கட்சியின் தலைவர் லாலு தற்போது சிறையில் இருந்து வருகிறார்; தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., மீது குற்றச்சாட்டு :
பா.ஜ., உடன் கூட்டணி வைப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாஸ்வான், பா.ஜ.,வில் இருந்து வெளியேறியது வெளியேறியது தான்; பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தை வைத்து பா.ஜ., ஓட்டுக்களை பெற நினைக்கிறது; அதனைக் கொண்டு பா.ஜ., ஆட்சிக்கு வர நினைக்கிறது; இதனை மதசார்பற்ற கொள்கை கொண்ட லோக் ஜனசக்தியால் ஏற்றுக் கொள்ள முடியாது; புதிய கூட்டணி குறித்து முதலில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; அதற்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
காங்கிரசிற்குள் பிரிவினை :
காங்கிரசிற்குள் 3 தரப்பான மக்கள் இருப்பதாகவும், அவர்களில் ஒருதரப்பினர் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் எனவும், மற்றொரு தரப்பினர் காங்கிரஸ், லோக் ஜனசக்தி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து போட்டியிட வேண்டும் எனவும், 3வது தரப்பினர் காங்கிரஸ், லோக் ஜனசக்தி மற்றம் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியன இணைந்து செயல்பட வேண்டும் எனவும் நினைப்பதாக பாஸ்வான் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பின் காங்கிரஸ் இதுகுறித்து தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் மதவாதத்தை கடைபிடிப்பவர் என குற்றம்சாட்டிய பாஸ்வான், 2002ல் குஜராத் கலவரத்தின் போது இருவரம் அமைச்சர்களாக இருந்த போது குஜராத் கலவரம் தொடர்பாக தான் பதவி விலகி போதும், நிதிஷ்குமார் பதவி விலகாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE