புதுடில்லி : தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அறிய காங்கிரசும், பா.ஜ.,வும் மிகுந்த ஆர்வமுடன் உள்ளன. சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே லோக்சபா தேர்தலின் முடிவுகள் அமையும் என காங்கிரசும், பா.ஜ.,வும் நம்புவதே இதற்கு காரணம்.
கட்சிகளின் நிலைப்பாடு :
சட்டமன்ற தேர்தல் முடிவுகள், லோக்சபா தேர்தலின் முன்னோட்டமாக இருக்காது என காங்கிரசும், பா.ஜ.,வும் தெரிவித்து வந்தாலும், சட்டமன்ற தேர்தலுக்காக அக்கட்சிகள் செய்த வரும் ஏற்பாடுகள், பிரச்சார பேச்சுக்கள், எதிர்அணி மீதான தொடர் தாக்குதல்கள் இவை அனைத்தும் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அக்கட்சிகளின் ஆர்வத்தையே வெளிப்படுத்துவதாக அமைகிறது. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டில்லி மற்றும் ராஜஸ்தான் தேர்தல்கள் மினி பொதுத் தேர்தல் என்பதை காங்கிரசும், பா.ஜ.,வும் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளன. ஏதாவது ஒரு மாநிலத்தில் பெறும் வெற்றியோ தோல்வியோ 2014 தேர்தலில் அக்கட்சியின் நிலையை அறிய சாத்திய கூறுகளை ஏற்படுத்தி தரும்.
சாத்திய கூறுகள் :
பா.ஜ., ஆட்சி செய்யும் மாநிலங்களை அது தக்கவைத்துக் கொண்டாலோ, ராஜஸ்தான் மற்றும் டில்லியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலோ அது பா.ஜ.,வின் லோக்சபா தேர்தல் வெற்றியை உறுதி செய்யும். மேலும், பணவீக்கம் மற்றும் ஊழல் உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும், கோபத்தையும் அது வெளிகாட்டுவதாக அமையும். இதனால் 2014ல் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழக்கும். மாறாக, சட்டசபை தேர்தலில் டில்லி மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்து, மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரை பா.ஜ., தக்கவைத்து கொண்டால், காங்கிரசிற்கு பெரும் சவாலாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பலம் பலனளிக்காமல் போகும்.
தலைவர்கள் கருத்து :
தங்களின் முடிவு அல்லது கட்சியின் எதிர்காலம் குறித்து அறிய காங்கிரஸ் கட்சி 2014 தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பா.ஜ.,விற்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபித்து கூடுதல் பலம் பெறுவதற்கு முக்கியமான ஒன்றாகும். 2014 தேர்தலில் மோடி தோற்றால், அதன் பிறகு அவர் மீதான மாயை குமிழ் காணாமல் போகும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அதே சமயம் பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மோடியின் செல்வாக்கை நிர்ணயிக்காது என தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த பேச்சுக்கள், காங்கிரசும் பா.ஜ.,வும் தங்களை பாதுகாத்து கொள்வதில் கவனம் காட்டுவதையே வெளிப்படுத்துகிறது. சட்டமன்ற தேர்தல், லோக்சபா தேர்தலின் அரையிறுதி சுற்று என்ற கூற்றை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீனல் அப்சலும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஒவ்வொரு தேர்தலும் இறுதி கட்ட நிலையை பொருத்தே அதன் முடிவுகள் அமையும் எனவும், அந்தந்த மாநிலம் சார்ந்த உள்ளூர் பிரச்னைகளும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் எனவும் பொதுவான கருத்தும் கூறப்படுகிறது.
சாதக,பாதகங்கள் :
பா.ஜ., கணிப்பின் படி மோடியின் செல்வாக்கும், அவர் மீதான மக்களின் நம்பிக்கையும் வாக்காளர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் 72 லோக்சபா தொகுதிகளில் பெரும்பாலான இடங்களை பா.ஜ., கைப்பற்றும். அப்போது காங்கிரசால் பா.ஜ., மற்றும் மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பலனில்லாமல் போகும். 2014 தேர்தல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக அதிகாரம் பெறும். அப்போது மோடி அலை காணாமல் போனால் பா.ஜ.,விற்கு நெருக்கடிகளும், புதிய பிரச்னைகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது பா.ஜ.,வின் பேச்சுக்களை பொய்யாக்குவதுடன், ராகுலின் செல்வாக்கை அதிகரித்து, அவரை சிறந்த பிரச்சார தலைவராகவும் உருவாக்கும். ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பா.ஜ.,வும். டில்லியில் காங்கிரசும் வெற்றி பெற்றால் 3 மாநிலங்களை கைப்பற்றுவது பா.ஜ.,வின் பலத்தை அதிகரிக்கும். தலைநகர் டில்லி, காங்கிரஸ் கட்டுப்பாட்டுக்கள் சென்றால் தலைநகர மக்களின் நிலை பா.ஜ.,விற்கு 2014 தேர்தலில் சவாலாக அமையும். ம.பி., ராஜஸ்தானில் பா.ஜ.,வும், டில்லி மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசும் வெற்றி பெற்றால் இருகட்சி தலைவர்களிடையே கடும் போட்டியை ஏற்படுத்தும். அப்போதும் மோடியா, ராகுலா என்ற கேள்வி மிகப் பெரியதாக விஸ்வரூபம் எடுக்கும். அத்தகைய நிலையில் பா.ஜ.,வின் லோக்சபா தேர்தல் வெற்றி எளிதாகி விட வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE