சிவ்கர் : இலவசங்களை கொடுத்து தங்களை பிச்சைக்காரர்கள் ஆக்க வேண்டாம் எனவும், தங்களுக்கு உதவிகள் வேண்டாம்... உரிமைகள் தான் வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவின் தொகுதியான ராய்பெர்லி பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் பிரசாரம் :
காங்கிரஸ் தலைவர் சோனியாவும், காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் அரசு வழங்கிய மானியங்கள், இலவசங்களை கூறி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். சோனியா மட்டும் அல்ல, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் காலத்தில் வடமாநிலங்கள் கடுமையான பேரழிவை சந்தித்த நேரத்தில் வாக்காளர்களின் தேவைகளாக இருந்த மின்சாரம், மருத்துவமனை, சாலை வசதி, குறைந்த விலையில் உணவு வழங்குவது உள்ளிட்டவைகளை கூறி ஓட்டுக் கேட்டு வெற்றி பெற்றார். அதற்கு பின் வந்த தேர்தலிலும் இதே பாணியை கையாண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. இன்று வரை இதே நிலை தொடர்ந்து வருகிறது.ஏழை மக்களை கவருவதற்காக 21 பில்லியன் டாலர் செலவிலான மானிய விலை உணவு திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை கூறி காங்கிரஸ் தற்போது ஓட்டு சேகரித்து வருகிறது.
விவசாயிகள் குமுறல் :
காங்கிரசின் பிரசாரம் குறித்து ராய்பெர்லி தொகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறியதாவது : எங்களுக்கு தேவை மானிய விலை உணவு இல்லை; நாங்கள் நன்கொடைகளோ, தொண்டு நிறுவனம் போன்று உதவியோ கேட்கவில்லை; இலவசங்களை கொடுத்து எங்களை பிச்சைக்காரர்களை போன்று ஆக்காதீர்கள்; எங்களுக்கு தேவை டாக்டர்களை கொண்ட மருத்துவமனைகள், சாலை வசதிகள், மின்சார வசதி, பணவீக்கத்தை சமாளிக்க ஏதாவது வழி; அதற்கு சிறந்த ஒரு தலைவர் தேவை; எங்கள் பகுதி மக்கள் முதல் முறையாக காங்கிரசிற்கு மாற்றாக மற்றொரு தலைவரை பற்றி மக்கள் பேசுகிறார்கள்; அவர் நரேந்திர மோடி; அவர் குஜராத்தில் ஏற்படுத்தி உள்ள வளர்ச்சி, மக்கள் வளர்ச்சி மற்றும் முதலீடுகள் குறித்து அவர் அளிக்கும் வாக்குறுதிகள் அப்பகுதி மக்களை கவர்ந்துள்ளது; மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் மக்களின் உண்மையான வேதனைகளும், பிரச்னைகளும் தெரிய வில்லை; அவர்களின் கொள்கைகள் ஏழைகளின் நிலையை மாற்ற உதவவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உ.பி.,ல் மக்களின் நிலை :
மற்ற மாநிலங்களை விட அதிகபட்சமாக உ.பி.,யில் இருந்து 80 உறுப்பினர்கள் டில்லிக்கு சென்று பார்லி.,யில் இடம்பெற்றுள்ளனர். 2009ம் ஆண்டு தேர்தலில் உ.பி.,ல் காங்கிரஸ் 21 இடங்களிலும், பா.ஜ., 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய தேர்தல் கருத்து கணிப்பில் வரும் தேர்தலில் பா.ஜ., 27 இடங்களிலும், காங்கிரஸ் வெறும் 12 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.
அரசு புள்ளிவிபரம் :
2004-05 ம் ஆண்டில் இருந்த 41.8 சதவீதத்தில் இருந்து 2011-12ல் ஆண்டில் ஏழைகளின் விகிதம் 25.7 சதவீதமாக குறைந்துள்ளதாக காங்கிரஸ் அரசு தெரிவிக்கிறது. மாதத்திற்கு ஒரு நபருக்கு ரூ.816 போதுமானது எனவும் தெரிவித்துள்ளது. காங்கிரசின் கூற்றுப்படி ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டால், இன்னும் மின்சார வசதி, அடிப்படை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெறாத பகுதிகளும், ஏராளமான மக்களும் இருந்து வருவது ஏன்? உணவு மானியத்திற்கும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கும் கோடிக் கணக்கான பணத்தை செலவிட்டு வருகிறது. இருந்தும் நாட்டில் இன்னும் பட்டினி சாவுகளும், வேலையில்லாத திண்டாட்டங்களும் இருந்து வருகிறது. இந்த திட்டங்களால் மக்கள் பயனடையவில்லை என்பதே உண்மை நிலை. அனைத்து துறைகளிலும் நிறைந்திரக்கும் ஊழலே இதற்கு காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் ஆக்ராவில் மோடி பேசிய கூட்டத்தில் 100,000 மக்கள் பங்கேற்றனர்; அவர் பிரமரானால் நாட்டின் நிலை நிச்சயம் மாறும்; அவர் நாட்டின் வளர்ச்சியை பற்றி மட்டுமே பேசினார் என கூட்டத்தில் கலந்து கொண்ட ராய்பெர்லி விவசாயி ராஜன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE