புதுடில்லி: தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். பிரசாரத்தின் போது தலைவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள மதிய உணவாக சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். சில முக்கிய தலைவர்கள் பிரசாரத்தின் போது எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், தனக்கான உணவை வீட்டில் இருந்தே எடுத்து வந்துவிடுகிறார். மதிய உணவிற்கு பருப்பு, சப்ஜி, நெய் உடனான சப்பாத்தியும், சிற்றுண்டியாக வேகவைத்த சுண்டலும் கொண்டு வருகிறார். குடிதண்ணீர் தவிர மற்ற எந்த பானங்களும் அவர் எடுத்துக் கொள்வதில்லை.
மத்திய இணையமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இரவு தங்குவதாக இருந்தால் மட்டுமே உணவை தன்னுடன் எடுத்துச் செல்கிறார். தனது உணவில் எப்போது சீசனுக்கு விளையும் காய்கறிகள் மற்றும் மீன் வகைகளை அவசியம் சேர்த்துக் கொள்கிறார். பயணம் செய்யும் போது எளிமையாக கொஞ்சம் சப்ஜி உடன் ரொட்டி ஆகியவற்றை எடுத்துக் கொள்கிறார். களைப்பு போவதற்கு எலுமிச்சை ஜூஸ் எடுத்துக் கொள்கிறார்.
பா.ஜ., தலைவர் வசுந்தரா ராஜே, தன்னுடன் எப்போதும் வீட்டு சாப்பாட்டை வைத்துள்ளார். வேகவைத்த காய்கறிகளை மட்டுமே வசுந்தரா எடுத்துக் கொள்கிறார். உடலில் அதிக கலோரிகள் சேர்வதை தவிர்க்க எண்ணெய் மற்றும் இனிப்பு பதார்த்தங்களை அவர் சாப்பிடுவதில்லை. நேரம் இருந்தால் மட்டுமே மதிய உணவை சாப்பிடுகிறார். பிரசாரத்தில் பிஸியாக இருந்தால் இருக்கும் நாட்களில் அவர் மதிய உணவு சாப்பிடுவதில்லையாம்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் ஜெலட், தனது மதிய உணவில் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வதை வழக்கமாக கடைபிடித்து வருகிறார். சப்ஜி, பருப்பு, சப்பாத்தி, கொஞ்சம் இனிப்பு ஆகியவற்றை மதிய உணவாக எடுத்துக் கொள்கிறார். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது எளிமையான சிற்றுண்டிகளையும் எடுத்துக் கொள்கிறார். குளிர்பானங்கள் எடுத்துக் கொள்வதை கட்டாயமாக தவிர்த்து வருகிறார் அசோக் ஜெலட். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை மட்டுமே அவர் அருந்துகிறார்.
சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், தனக்காக பிரத்யேக சமையல்காரர் ஒருவரை எப்போதும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். தான் சுறுசுறுப்பாக பணியாற்றுவதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் க்ரீன் டீ தர வேண்டும் என தனது சமையல்காரருக்கு இவர் உத்தரவு போட்டுள்ளார். பாதாம், சத்துமாவு, இனிப்ப கலந்த பாலை ஒரு நாளைக்கு 3 முறை அருந்துகிறார். டீ மற்றும் காபி சாப்பிடுவதை இவர் தவிர்க்கிறார்.
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, என்ன சாப்பிடுவார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிகிறது. பொதுவாக அவர் குஜராத்தி உணவுகளையே விரும்பு சாப்பிடுவாராம். கிச்சடி அவருக்கு மிகவும் பிடித்த உணவாம். அது கிடைக்காத சமயங்களில் மற்ற இந்திய உணவுகளையும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்கிறார். தனக்காக பிரத்யேக சமையல்காரர் யாரையும் மோடி உடன் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் பாதுகாப்பு கருதி மோடி சாப்பிடுவதற்கு முன் அவரது உணவை சரிபார்ப்பதற்காக காவலாளிகள் சிலர் எப்போதும் மோடி உடன் வருகிறார்கள். உடல் நலத்தை பேணுவதற்கு ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே மோடி சாப்பிடுகிறார். அதுதவிர உடல் பலத்திற்காக சூடான தண்ணீரை அதிகம் எடுத்துக் கொள்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE