'செஸ்' சில சிந்தனைகள்: பி.சுபாஷ் சந்திரபோஸ்| Dinamalar

'செஸ்' சில சிந்தனைகள்: பி.சுபாஷ் சந்திரபோஸ்

Added : டிச 01, 2013 | கருத்துகள் (1)
'செஸ்' சில சிந்தனைகள்:  பி.சுபாஷ் சந்திரபோஸ்

ஒரு வேளாண் பொருள், எந்த பகுதியில் அதிகமாக விளைகிறதோ, அந்த பொருளை விளைவிக்கும் விவசாயிக்கு நன்மை பயக்கும் விதத்தில், குறிப்பிடப்பட்ட அந்தப் பகுதியில் அந்த வேளாண் பொருள் அறிவிக்கை செய்யப்பட்டு, அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் உரிய சேவை செய்யப்பட்டு, அப்பொருளின் விற்பனையின் போது, அதற்கான சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுவதே, 'செஸ்' கட்டணம்.
மார்க்கெட் செஸ் கட்டணம், தமிழ்நாடு வேளாண் விளை பொருள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 1987ன் கீழ் அமல்படுத்தப்படுகிறது.அன்னியர்கள் நம்மை ஆண்டபோது, நம் நாட்டில் விளைந்த உயர்தர பருத்தி வகைகளை, இங்கிலாந்திலுள்ள ஆலைகளுக்கு கொண்டு செல்ல, மொத்தமாக கொள்முதல் செய்தனர். இங்கு விளையும் விளைபொருளை கொள்முதல் செய்ய, பல்வேறு இடங்களுக்கு தேடி அலைந்து வாங்காமல், ஒரே இடத்தில் அப்பொருள் கொள்முதல் செய்வதற்காகவும், அவர்களின் விளைபொருளை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் போது, அவர்கள் யாராலும் ஏமாற்றப்படாமல் சரியான விலையை இடைத்தரகர் இன்றி பெறுவதற்காகவும், விற்பனை கூடங்கள் (மார்க்கெட்) நிறுவப்பட்டன.இதற்காக, 'பாம்பே காட்டன் ஆக்ட்' என்ற சட்டம், 1927ல் இயற்றப்பட்டது. பின், 1928ல் அமையப்பெற்ற, ராயல் கமிஷன் அறிக்கையை அடு்த்து, 'மதராஸ் கமர்ஷியல் கிராப் சட்டம்' என்ற ஒன்றை, 1933ல் நிறைவேற்றினர்.முதலில் பருத்தி, மணிலா, புகையிலை போன்றவற்றோடு, மேலும் சில விவசாய விளைபொருட்களை அறிவிக்கை செய்து, மேற்படி பொருட்கள் அதிகளவில் உற்பத்தியாகும், மாவட்டங்களில் தேவையான ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை நிறுவினர். அங்கு பொருட்களை, விற்பனைக்காக கொண்டு வரும் விவசாயிகளுக்கும், அவற்றை கொள்முதல் செய்ய வரும் வணிகர்களுக்கும் தேவைப்படும் வசதிகளை செய்து கொடுத்து, அவ்வாறு ஆற்றப்படும் சேவைகளுக்காக, கொள்முதல் செய்யும் வணிகர்களிடம் விற்பனைக் கட்டணம் (செஸ்) வசூலிக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது.
நாடு விடுதலைக்கு பின், 1959ல், மதராஸ் விவசாய விளைபொருள் விற்பனைச் சட்டம் என்ற, புதிய சட்டம் இயற்றப்பட்டது. பின், 1959ல், சட்டம் ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1987 என்ற பெயரில், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது.தமிழகத்தை பொறுத்தவரை, நாளடைவில் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதன் நோக்கங்கள் புறந்தள்ளப்பட்டன. சேவைக்குத் தான் விற்பனைக் கட்டணம் என்ற அடிப்படையை தகர்த்தெறிந்து விட்டு, விற்பனைக் கட்டணம் என்ற பெயரில், செஸ் வசூல் செய்யும் பணி மட்டுமே, அனேக விற்பனை கூடங்களில் வணிக வரித்துறையினரால் செய்யப்பட்டு வருகிறது. 75 ஆண்டுகள் கடந்தும், சொந்த இடத்தில் தேவையான நிரந்தர வசதிகளுடன், விற்பனை கூடங்கள் அமைக்க ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்கள் எதுவும் ஏற்படுத்த, கால நிர்ணயம் கூட துறையினரால் செய்யப்படவில்லை.நேரடி வேளாண் பொருட்களுக்கு மட்டுமில்லாமல் அவற்றிலிருந்து ஆலைகள் மூலம் தயாரிக்கப்படும் உருமாற்றுப் பொருட்களுக்கும், செஸ் கட்டணம் விதிக்க வகை செய்யப்பட்டது. இம்முறைகளினால் அதிகாரிகளின் கெடுபிடியும், மிரட்டலும் அதிகரித்து ஊழல் செழிக்க வழி கோலியது.தங்கள் வணிகத்தை போட்டு விட்டு குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு, களவு, கொலை, விபசாரக் குற்றவாளிகளோடு (பெண் வணிகர்கள் உட்பட) நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவர். எனவே, இந்தச் சட்டம் இயற்றப்பட்டதின் உயரிய நோக்கங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. கட்டண வசூலிப்பு ஒன்றை மட்டுமே, ஒரே குறிக்கோளாக கொண்டு இந்த துறை இயங்கி வருகிறது.
தமிழகத்தில் தற்போது, 21 விற்பனைக் குழுக்களும் (மார்க்கெட் கமிட்டி) 277 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும் உள்ளன.இவற்றில், பெரும்பாலான விற்பனைக்கூடங்கள் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல், வெறும் வசூல் மையங்களாக மட்டும் செயல்பட்டு வருகின்றன. அந்தந்த பகுதியில் விளையும் வேளாண் விளைபொருட்களை அந்தந்தப் பகுதிகளில் அமைந்துள்ள விற்பனைக் கூடத்திற்குள்ளே கொண்டு வந்து, தரம் பிரித்து, சரியாக எடை போட்டு, ஏல முறையில் விற்க வேண்டும். அன்றைய தேதியில் சரியான விலை கிடைக்கவில்லை என்றால், சரக்குகளை பாதுகாப்பாக வைத்து, பின், நல்ல விலை கிடைக்கும் போது விற்க அல்லது விற்பனை கூட கிடங்குகளில் உரிய பாதுகாப்புடன் எந்தவித சேதாரமின்றி சேமித்து வைக்க, எந்த வசதியும் இல்லை.தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களில், மிகப்பிரமாண்டமான நிலப்பரப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய, மார்க்கெட் கமிட்டி விற்பனை கூடங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. அவர்கள் மார்க்கெட் வளாகத்திற்கு கொண்டு வரும் சரக்குகளை ஏல முறையில் விற்று, அதற்கான பணத்தையும் வணிகர்களிடமிருந்து பெற்று, விவசாயிகளுக்கு நல்ல முறையில் கிடைக்கச் செய்கின்றனர். எனவே, அங்கு நடைபெறும் வணிகத்தின் போது, செஸ் கட்டணம் செலுத்துவது என்பது, யாருக்கும் ஒரு பிரச்னையாக இல்லை.
ஆனால் தமிழகத்தில், 75 ஆண்டுகள் கடந்தும், இவ்வாறு ஒரு விற்பனைகூடம் கூட, முழுமையாக அமையப்பட்டு இயங்கவில்லை.சென்னை மாவட்டத்திற்கு மட்டும், இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு உண்டு. அங்கு வேளாண் உணவுப்பொருட்கள் வணிகம் எத்தனை மடங்குகள் கூடுதலாக நடைபெற்றாலும், இங்கு விவசாயிகள் இல்லை. விவசாயமும் இல்லை என்ற அடிப்படையில், செஸ் கட்டண வசூலிப்பு கிடையாது.பயறு, பருப்பு உள்ளிட்ட பெரும்பாலான உணவு பொருட்களுக்கு தமிழகம், பிற மாநிலங்களையும், வெளிநாடுகளையும் சார்ந்துள்ள மாநிலம்.வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பயறு, பருப்பு போன்ற வேளாண் பொருட்கள், சென்னை துறைமுகத்திற்கு வந்தால், செஸ் கட்டணம் கிடையாது. அதே சமயம், உப்பளத்திற்கு பிரசித்தி பெற்ற துாத்துக்குடி துறைமுகத்திற்கு அந்த கப்பல் வந்து, சரக்குகள் இறங்கினால், 'நாங்கள் அறிவிக்கை செய்திருக்கிறோம்' என, கூறி அந்த வேளாண் பொருட்களுக்கு, மார்க்கெட் கமிட்டியினரின் சேவை என்பது, ஒரு சிறு துளி அளவு கூட இல்லாத நிலையில், செஸ் கட்டணம் செலுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.ஒரு பொருளை குறிப்பிட்ட பகுதிக்கு, அங்கு விளைந்தாலும், விளையாவிட்டாலும் பிற மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து கொண்டு வரப்பட்டாலும், அதற்கும் செஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது, நீதிக்கு புறம்பானது என்பதை சட்டம் படிக்காத பாமரன் கூட சொல்வார்.மாநில தேவைக்கேற்ப உணவு பொருட்கள் உற்பத்தி இல்லாத காரணத்தால், நமது அண்டை மாநிலமான கேரளாவில், இந்த சட்டமே அமலில் இல்லை. நமது மாநிலமும் பற்றாக்குறை மாநிலமே. எனவே, இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்யலாம். அரசுக்கு வெறும், 76 கோடி ரூபாயே வருவாய் கிடைக்கிறது. இந்த சட்டத்தை காட்டி மிரட்டி, பல நூறு கோடிகள் லஞ்சமாக புழங்குவதே உண்மை.
பிற மாநிலங்களைப் போல, நல்ல கட்டமைப்புடன் கூடிய, பெரிய வணிக வளாகங்களை தோற்றுவித்து, விளைகின்ற வேளாண் பொருட்கள் குன்றிமணி அளவு கூட சேதாரம் அடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயிகள் உரிய விலை கிடைக்கப் பெறவும், வணிகம் கொள்முதல் செய்ய வரும் வணிகர்களுக்கும் உரிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுத்து, வளாகத்திற்குள் நடைபெறும் அனைத்து வணிகத்திற்கும் சேவைக்கட்டணம் (செஸ்) வசூலிக்கலாம்.வேளாண் விளை பொருட்களை மூலப்பொருட்களாக வைத்து, அவற்றின் மூலம் ஆலைகளில் பெறப்படும், உருமாற்றம் செய்த பொருட்களுக்கு செஸ் கட்டண விதிப்பு கூடாது.நமது பற்றாக்குறை உணவுத்தேவையை பூர்த்தி செய்ய வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்படும் விவசாய விளை பொருட்களுக்கு செஸ் விதிப்பு கூடாது.ஆண்டுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வணிக வரித்துறையில், பொருட்கள் போக்குவரத்திற்கு 'பெர்மிட்' முறை கிடையாது. வெறும், 76 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மார்க்கெட் கமிட்டியில், விவசாய விளைபொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல புகுத்தப்பட்டுள்ள லஞ்ச லாவண்யங்களுக்கு வழி வகுக்கும், பெர்மிட் முறை அறவே ரத்து செய்யப்பட வேண்டும்.மேற்படி ஆலோசனைகளை அமல்படுத்தினால், இந்த சட்டம் இயற்றப்பட்டதின் உண்மையான நோக்கம் முழுமையாக நிறைவேறும். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய பாதுகாப்பும், நல்ல விலையும் கிடைக்கும். அவர்களும் வளம் பெறுவர்; அரசுக்கும் வருவாய் பல நூறு கோடிகள் உயர்வாக கிடைக்கும்.இ-மெயில்: subash_p42@hotmail.com
பி.சுபாஷ் சந்திரபோஸ் -தமிழ்நாடு உணவுப்பொருள் வர்த்தகர்கள் சங்கத் துணைத்தலைவர்We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X