திண்டுக்கல்: திண்டுக்கல்லில், பஸ்கள் மீது ஆணிகளை கொண்ட பைப்களை வீசி, பொது சொத்தை சேதப்படுத்தி, பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 பேரை, மதுரை, திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் பகுதியில், டி.எஸ்.பி.,ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்தனர். இதில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; எட்டு பேர் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அகில உலக இஸ்லாமிய கழகத் தலைவர் முபாரக், 34, ஜாபர்அலி, 35, கணவா சையது, 29, யாசிக், 28, சேக்பரித், 23, அபிபுல்லா, 28, என, தெரிந்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யவும், பொது சொத்துக்கு சேதப்படுத்தவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்.
மதுரையிலும் கைது:
மதுரையிலும் 4 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷேக்முகமது,19, கல்லூரி மாணவர் தாகா முகமது, 20, தெற்குவாசல் மீன்வியாபாரி நசீர்,22, நெல்பேட்டை மீன்வியாபாரி சம்சுதீன், 25, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று திண்டுக்கல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்ல முடிவு செய்திருந்தனர். செல்லும் வழியில், திண்டுக்கல் நகர் பகுதியில், மக்கள் கூடும் இடங்களில், பஸ் ஓட்டி வரும் டிரைவர்கள் மீது ஆணிகளை கொண்ட "பைப்' களை வீசி, விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு முடியாதபட்சத்தில், மதுரை அவனியாபுரம் "ரிங்' ரோட்டில் திட்டத்தை நிறைவேற்ற இருந்தனர். காரணம், மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சம்பவம் நடந்தது போல், போலீஸ் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.