துணைவேந்தர்களும் ஊழல்களும்! பேரா.ச.முத்துக்குமரன், முன்னாள் துணைவேந்தர்| Dinamalar

துணைவேந்தர்களும் ஊழல்களும்! பேரா.ச.முத்துக்குமரன், முன்னாள் துணைவேந்தர்

Added : டிச 15, 2013 | கருத்துகள் (10)
தமிழக பல்கலைக் கழக துணைவேந்தர்கள் பலர் மீது, அவர்கள் பதவி முடியும் தறுவாயில் அல்லது பதவிக்காலம் முடிந்ததும், உடனடியாக ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்பும், ஓரிருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்ற துணைவேந்தர் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்து வருகிறது.பதவியில் இருக்கும் சிலர் மீது,
துணைவேந்தர்களும் ஊழல்களும்!  பேரா.ச.முத்துக்குமரன், முன்னாள் துணைவேந்தர்

தமிழக பல்கலைக் கழக துணைவேந்தர்கள் பலர் மீது, அவர்கள் பதவி முடியும் தறுவாயில் அல்லது பதவிக்காலம் முடிந்ததும், உடனடியாக ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்பும், ஓரிருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்போது இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்ற துணைவேந்தர் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்து வருகிறது.

பதவியில் இருக்கும் சிலர் மீது, பொருட்கள் வாங்குவது, ஆசிரியர், ஆசிரியர் அல்லாதார், பணி நியமனம், மாணவர் சேர்க்கை, பல்கலைக்கழக தேர்வுகள் போன்றவற்றில், துணைவேந்தரே ஊழலில் ஈடுபட்டதாக, கிசு கிசுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது மிகுந்த மன சஞ்சலத்தைத் தருகிறது. துணைவேந்தர் பதவி என்பது மிக உயர்ந்த ஒன்று என்பதோடு, அவர் கல்வி நிலையத்தின் தலைவர் என்பதால், சாதாரணமான அரசு துறை அலுவலர்கள் மேல் எழும் இத்தகைய குற்றச்சாட்டுகளையும், துணைவேந்தர் மேல் எழுவதையும் ஒன்றாகக் கருத முடியாது. துணைவேந்தர், கல்வி நிலையத்தின் தலைவர் என்பதால், அவர் ஒரு சிறு குற்றம் புரிவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. துணைவேந்தர், தான் தலைமையேற்றுள்ள பல்கலைக்கழகம் உயர்வதற்கான எல்லாவற்றையும், குற்றம் இல்லாது செய்ய வேண்டும்.நம் நாட்டில், ஒவ்வொரு மாணவனும், தன் ஆசிரியரை மிக உயர்ந்த நிலையில் வைத்து போற்ற வேண்டும் என்று நம்பப்படுகிறது. 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்கிறது வெற்றி வேற்கை. துணைவேந்தர், பல்கலைக் கழகத்தின் உறுப்பினர்களின் தலைவர் என்பதால், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு எல்லாம் அவரே தலைவர். ஆகவே, பல்கலைக் கழகத்திலும், அதனுடன் இணைந்த கல்லுாரிகளிலும் பயிலும் அனைத்து மாணவர்களும், அவரை பெருமதிப்புடன் நோக்க வேண்டும். நோக்குவர்.

பல்கலைக் கழக பட்டம் பெற்ற ஒவ்வொருவரும், அவரது பல்கலைக் கழகம் குறித்து பெருமை கொள்ள வேண்டும். பல்கலைக் கழகம் பெருமை பெற்றால், அப்பல்கலைக் கழகத்தில், பட்டம் பெற்ற ஒவ்வொருவரும் பெருமை பெறுவர். அவருக்கு பட்டத்தை வழங்கியவரை, அவர் பெருமையுடன் நோக்க வேண்டும். அவருக்கும், பல்கலைக் கழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.இச்சூழலில், பல்லாயிரம் இளைஞர்களுக்கும், பட்டம் வழங்கியவர் ஊழல் பழிக்கு உள்ளானார் என்றால், அம்மாணவர் எத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாவார்? அத்துணைவேந்தர் அளித்த பட்டம் பெற்றவர்கள், பணி தேடிச் செல்லும் போது, அவ்விளைஞர்களைத் தேர்ந்து எடுப்பவர் என்ன நினைப்பார்? அப்பட்டங்களுக்கு என்ன மரியாதை தருவார்? அதுவும், அந்தத் துணைவேந்தர், பல்கலைக் கழகத்தேர்வு, துறை செயல்பாடுகளிலும், ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர் கையெழுத்திட்ட பட்டச் சான்றிதழ்களுக்கு, அவை அச்சடிக்கப்பட்ட காகிதத்தின் மதிப்பு கூட இருக்குமா? என்பது ஐயமே.அதாவது, ஒரு துணைவேந்தரின் ஊழல், அம்மாநில இளைஞர்கள் பல லட்சம் பேருடைய எதிர்காலத்தையே பாதிக்கும். ஆகவே தான், ஒரு துணைவேந்தரின் மீதான குற்றச்சாட்டையும், அவர் நிலைக்கு நிகரான, ஓர் அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டையும், ஒன்றாக எடைபோட முடியாது.

ஆகவே, மாநில அரசு, பல்கலைக் கழகங்களுக்கு, துணைவேந்தரை நியமிக்கும் பொறுப்பு உடைய பல்கலைக் கழக வேந்தர் இது குறித்து கவலை கொள்ள வேண்டும். ஏன் இந்த நிலை வந்தது? எங்கே தவறு நேர்ந்தது? நேர்கிறது? என்று ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.மேலும், தகுதி இல்லாத 'ஊழலில் திளைப்பவர்' துணைவேந்தராக நியமிக்கப்பட்டால், அவர் பல்கலைக் கழக அமைப்பையே ஊழலில் ஆழ்த்த முடியும். ஊழல் துணைவேந்தரின் செயல்களின் விளைவுகள், அவர் பதவிக் காலத்திற்குப் பின் பலகாலம் நீடிக்கலாம். அல்லது அது பெருகவும் கூடும்.ஒரே ஓர் ஊழல் துணைவேந்தரின் செயல்களின் விளைவுகளை எண்ணினாலே, அச்சமாக இருக்கிறது. இவ்வாறு, பல துணைவேந்தர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தால், அவர்களின் ஒரு சிலராவது உண்மையில் ஊழல் புரிந்திருக்கக்கூடும் என்பதால், இப்பதவியில் எவரையும் நியமிப்பதில் நேர்மை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை, யாவரும் உணர வேண்டும்.பல்கலைக்கழகத்தில் முக்கிய உறுப்பினர்களான, பல்கலைக் கழக ஆசிரியர்கள் அப்பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லுாரி ஆசிரியர்கள் ஆகியோர், துணைவேந்தர் நியமனம் குறித்த விழிப்புணர்வைத் தங்களிடையேயும், மக்கள் மத்தியிலும் உருவாக்க வேண்டியது கடமை.மாசு மருவற்ற, மேன்மை பொருந்திய, நுால்கள் பல கற்று தேர்ந்த, தன் கருத்துகளை மற்றவர் எளிதில் உணருமாறு சொல்லும் வன்மை படைத்த, நாடறிந்த கல்வியாளர், பல்கலைக் கழகத்தை முன்னேற்றும் பேரார்வம் உடைய ஒருவரைத் துணை வேந்தராக நியமிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இத்தகைய நிலை உருவாக்க, இதுவே தருணம்.குற்றம் இலராய்க்குடி செய்து வாழ்வாரைசுற்றமாச் சுற்றும் உலகு (குறள் 1025)
'இ-மெயில்'-muthukumaran28531@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X