"சுத்தியலால் அடித்து மண்டையை பிளந்து... அரிவாளால் வயிற்றை கிழித்து... கோவை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை நடக்கிறது...' என்றால், நம்புவதற்கு கடினமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம்; ஆனால், அதுதான் உண்மை.
கோவை நகரின் மையப்பகுதியில், 18.5 ஏக்கர் பரப்பிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 92 வார்டுகள், 25க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ பிரிவுகள் உள்ளன. கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் ஏழை மக்கள், உயர் சிகிச்சை பெறும் இடமாக, இந்த மருத்துவமனை உள்ளது. சென்னையை அடுத்து, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு பிரிவுகள் இங்கு உள்ளன. தினமும் வெளிநோயாளிகள் 6,000 பேரும், உள்நோயாளிகள் 1,200 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். சாலை விபத்துகளில் இறந்தவர்கள், தீ விபத்து, மின் விபத்து மற்றும் நீரில் மூழ்கி இறந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள், இறப்பில் சந்தேகமுள்ளவர்களின் உடல்கள் என, தினமும் சராசரியாக 15 உடல்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
அபாய எச்சரிக்கை: இங்குள்ள பிணவறை, கடந்த 1950ல் கட்டப்பட்டு, 1952 முதல் செயல்படுகிறது.
பிணவறையின் தரைதளம் யாரும் நுழைய முடியாத அளவுக்கு பாழடைந்துள்ளது. அந்த
அறை மழைகாலத்தில், தண்ணீர் தேங்கும் குளமாக மாறி விடுகிறது. பயன்பாட்டில்
உள்ள முதல் தளத்தில் பிரேத பிரிசோதனை நடக்கிறது. அனாதை பிணங்களை வைக்கும்
குளிர்பதன வசதியுள்ள பெட்டிகளில் 25 பிரேதங்களை அடுக்கி வைக்க வசதியுள்ளது.
வெளி அறையில் ஆறு பிரேதங்கள் வைக்க இடமுள்ளது. பிணவறை கட்டடம் 20
ஆண்டுகளுக்கு முன்பே உறுதி தன்மையை இழந்து விட்டதாக பொதுப்பணித்துறை சான்று
கொடுத்து, கட்டடத்தை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது.
கொடூர பரிசோதனை: வேறு கட்டடம் இல்லாததால், உறுதித்தன்மை இழந்து, உருக்குலைந்த கட்டடத்திலேயே பிரேத பரிசோதனை நடக்கிறது. இங்கு, மருத்துவஉபகரணங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சுத்தியலால் அடித்து மண்டையை பிளந்தும், அரிவாளால் வயிற்றை கிழித்தும் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது. பிணவறை கட்டடங்களுக்கு மிக அருகிலேயே புதுப்பிக்கப்பட்ட "கேசுவாலிட்டி' வார்டு செயல்படுகிறது. விபத்து மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும் இந்த வார்டுக்கு கொண்டு வரப்பட்டு, முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்ட பின்னரே வார்டுகளுக்கு மாற்றப்படுகின்றனர். இந்த வார்டின் அருகிலேயே பராமரிப்பில்லாத பிணவறை
இருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது.சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து நவீன மருத்துவ வசதிகளும், சிறப்பு மருத்துவ
பிரிவுகளும் கோவை அரசு மருத்துவமனையில் இருந்தாலும், அபாய நிலையிலுள்ள
பிணவறை அனைத்து பெருமையையும் பாழ்படுத்துகிறது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ""மார்ச்சுவரிக்கான
புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்ட, தற்போது
சட்டம் சார்ந்த மருத் துவ துறை செயல்பட்டு வரும் இடம், பழைய ஆர்.எம்.ஓ.,
குடியிருப்பு ஆகிய இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய கட்டடம்
கட்டுவதற்கான இடம் தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்துவருவதால் கட்டுமானப்பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது'' என்றனர்.
1.82 கோடியில் புதிய பிணவறை கட்டடம்: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைகண்காணிப்பாளர் ஐசக் மோசஸ் கூறியதாவது:பழுதடைந்த பிணவறை கட்டடத்தை இடித்து, அங்கு நவீன வசதிகளுடன் பிணவறை கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அரசு 1.82 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2,500 சதுர அடியில் மூன்று அடுக்கு கட்டடம் கட்டப்படுகிறது. மொத்தம் 50 பிரேதங்கள் வைக்க வசதி செய்யப்படும். நவீன மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர், லிப்ட் வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது. வரும் மார்ச்க்குள் புதிய கட்டடங்களுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
செய்தி: கு.பிரசாத்
படங்கள்: ச.சதீஷ்குமார்