அரசியல் ஆதிக்கத்தால் நல்லரசு பாதிக்கப்படுகிறது:மாஜி நீதிபதி கருத்து| Good governance suffering due to political dominance: ex-SC | Dinamalar

அரசியல் ஆதிக்கத்தால் நல்லரசு பாதிக்கப்படுகிறது:மாஜி நீதிபதி கருத்து

Updated : டிச 18, 2013 | Added : டிச 18, 2013 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி : நாட்டில் அரசியல் ஆதிக்கம் காரணமாகவும், அதிகாரத்துவத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் காரணமாகவும் பல ஆண்டுகளாக நல்லரசு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார். டில்லியில் நடைபெற்ற 7வது வி.எம்.தர்குண்டே நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட் முன்னாள்
Good governance suffering due to political dominance: ex-SC, அரசியல் ஆதிக்கத்தால் நல்லரசு பாதிக்கப்படுகிறது:மாஜி நீதிபதி கருத்து

புதுடில்லி : நாட்டில் அரசியல் ஆதிக்கம் காரணமாகவும், அதிகாரத்துவத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் காரணமாகவும் பல ஆண்டுகளாக நல்லரசு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற 7வது வி.எம்.தர்குண்டே நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, நல்ல அரசு நல்ல ஜனநாயகம் உருவாக அடிப்படை தேவை என்ன என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : நல்லரசு அமைவதற்கு முதலும், மிகப் பெரிய இடையூராக உள்ளது ஊழல். ஊழல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டுச் செயல்; பேராசையின் வெளிப்பாடு; ஊழல் செய்வதில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் போல் இணைந்து செயல்படுகின்றனர்; எங்கும் மக்கள் பிரதிநிதிகளின் அரசியல் ஆதிக்கங்கள் நிறைந்திருப்பதால் அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய முடியாமல் போகிறது; இந்த அரசியல் ஆதிக்கத்தையும், தலையீடுகளையும் அதிகாரிகளால் எதிர்க்கவோ, தடுக்கவோ முடியவில்லை; மாறாக ஏராளமான அதிகாரிகள் தங்கள் விருப்பத்துடனோ அல்லது வேறு வழியில்லாமலோ அரசியல் ஆதிக்கத்திற்கு உட்பட்டு நடக்கின்றனர்; இதனால் நல்லதொரு அரசு நடைபெற முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், நமது அரசியலமைப்பு முறை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்படுமானால் அரசியல் ஊழல்கள் மற்றும் எதிர்மறையான குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பே இல்லை; நல்லரசு பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என நன்றாக தெரிந்தும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்ஒன்று சேர்ந்து ஊழலில் ஈடுபடுகின்றனர்; இரட்டை பிறவிகளை போன்று செயல்படும் இவர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிக்கின்றனர்; ஒருவேளை பிரதமர் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டால் அதையும் நான் நம்பித்தான் ஆக வேண்டும்; ஏனெனில் ஊழல்கள் அனைத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டினாலேயே நடைபெறுகின்றன. இவ்வாறு சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.

முன்னாள் நீதிபதியான ஹெக்டே, கர்நாடகா லோக்ஆயுக்தா கோர்ட்டிலும் நீதிபதியாக இருந்துள்ளார். அரசு அதிகாரிகள் நினைத்தால் மட்டுமே நல்ல அரசு அமைய முடியும் என தெரிவித்த ஹெக்டே, தாங்கள் மக்களின் எஜமானர்கள் அல்ல எனவும், மக்களுக்கு சேவை செய்தற்காக மட்டுமே தாங்கள் இருப்பதை புரிந்து கொண்டு அதிகாரிகள் மக்களுக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமையை முறையாக செய்தாலே ஊழல் குறைந்து நல்லதொரு அரசு அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி ஹெக்டேவுடன், முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி ஜெ சொராப்ஜியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X