பெரிய கோவில் விழாவில் கண்டு கொள்ளாத கலைக்கூடம் : பொலிவிழந்து காணப்படும் அவலம்| Dinamalar

தமிழ்நாடு

பெரிய கோவில் விழாவில் கண்டு கொள்ளாத கலைக்கூடம் : பொலிவிழந்து காணப்படும் அவலம்

Added : செப் 18, 2010
Share

தஞ்சாவூர்: தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடம் மிகவும் பொலிவிழந்து, மராமத்துப்பணிகள் செய்யப்படாமல் காணப்படுகிறது.

கடந்த 1951ம் ஆண்டின் முற்பகுதியில் கொல்கத்தாவைச் சேர்ந்த புதை பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தஞ்சை வந்தார். தஞ்சை கரந்தை வடவாற்றின் வடகரையில் கவனிப்பாரற்று கிடந்த பிரம்மா சிலையை கண்டு, அதன் அழகில் லயித்து கொல்கத்தாவில் உள்ள கண்காட்சியகத்துக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதை அறிந்த அப்போதைய தஞ்சை கலெக்டர் பழனியப்பன் அச்சிலையை பார்வையிட்டார். அங்குள்ள மக்கள் அச்சிலையை கொல்கத்தா கொண்டு செல்ல மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். தஞ்சையில் ஓரிடத்தில் அச்சிலையை வைத்து பாதுகாக்க மக்கள் விரும்பினர்.

அதன்படி, அச்சிலையை தஞ்சை அரண்மனைக்கு கொண்டு வந்து பாதுகாக்க கலெக்டர் பழனியப்பன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இம்மாவட்டப்பகுதியில் பல இடங்கள், கோவில்கள் போன்றவைகளில் கவனிப்பாரற்று கடந்த பல சிலைகள் பலரால் சேகரிக்கப்பட்டு அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.

உடன், கலெக்டர் பழனியப்பன், அச்சிலைகளை சேகரிக்க ஒரு கலைக்கூடம் ஏற்படுத்தலாம் என எண்ணி இக்கலைக்கூடத்தை உருவாக்கினார். பாழடைந்து கிடந்த இவ்விடத்தை சீரமைக்க, கலைக்கூடம் அமைக்க முறையாக அரசிடம் அனுமதி பெற்று, கல் சிலை, செப்பு சிலை என ஒழுங்குபடுத்தி 1951 டிசம்பர் ஒன்பதாம் தேதி இக்கலைக்கூடம் துவங்கப்பட்டது.

நுழைவு வாயிலில் உள்ள பூஜா மண்டபம், கோபுரத்தின் அடி மண்டபம், தர்பார் கொலு மண்டபம், விரிவாக்கப்பகுதி என நான்கு பிரிவாக்கி கி.பி., 7ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த சிலைகள் பாதுகாக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு செயல்படும் இக்கலை கூடம் 1995க்கு முன் இடிந்து விழும் நிலையில் இருந்தது. உலகத்தமிழ் மாநாட்டின்போது இக்கலைக்கூடம் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மூலம் முழுமையாக மராமத்து செய்யப்பட்டு, பழமை மாறாமல் வர்ணம் பூசப்பட்டு பொலிவு பெற்றது.

கடந்த 15 ஆண்டாக பெரிய அளவில் இங்கு எந்தப்பணியும் நடக்காமல், பாதுகாக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இக்கலைக்கூடத்தை, தஞ்சை பெரிய கோவிலின் 1,000வது ஆண்டு விழாவை முன்னிட்டு புதுப்பிக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது, இக்கலைக்கூடத்தின் மணி மண்டபம் (கண்காணிப்பு கோபுரம்), பெரிய கோவில் வடிவம் கொண்ட ஆயுதக்கோபுரம் ஆகியவை பாசி படிந்து, கறுமை நிறமாக பொலிவிழந்து காணப்படுகிறது. கலைக்கூடம் சீரமைக்கப்பட்டால் அரண்மனை வளாகமே வெளிச்சம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி, கலெக்டர் சண்முகம் கூறுகையில், ""பெரிய கோவில் விழாவுடன் அவசர, அவசரமாக கலைக்கூடத்தில் பணி செய்ய இயலாது. இந்திய தொல்லியல் துறை உதவியுடன் ஆயுதக்கோபுரம், கண்காணிப்பு கோபுரத்தில் உள்ள பாசி அகற்றி, கெமிக்கல் முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும். ஆயுதக்கோபுரம் சிவப்பு, மஞ்சள், நீலம் நிலம் கலந்த வண்ணத்தில் அழகு வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை மாற்றாமல், பழமை தன்மையுடன் பணி மேற்கொள்ள வேண்டும். இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பெரிய கோவில் விழாவின் தொடர்ச்சியாக இப்பணி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X