அரையிறுதி ஆட்டம் முடிந்து விட்டது. இனி, மே 2014ல், லோக்சபா தேர்தல் என்னும் இறுதி ஆட்டம், துவங்க உள்ளது. நான்கு மாநில தேர்தல் முடிவுகளை கண்ட காங்கிரஸ் கட்சியின், அஸ்திவாரம், இப்போதே ஆடத் துவங்கிவிட்டது.தன் மகனுக்கு, காங்கிரஸ் இளைய தளபதியாக மகுடம் சூட்டி மகிழ்ந்த சோனியா, ராஜஸ்தானில் இப்படி படுதோல்வி கிடைக்கும் என்று எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்.
உயர்ந்து வரும் பணவீக்கம், நாள்தோறும் புற்றீசல் போல் தோன்றும் ஊழல்கள் - ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல், '2ஜி' ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மருமகனின் ஊழல் என்று, ஊழலில், புது உலக சாதனையை புரிந்து விட்டது, சோனியா வழியில் செல்லும் மன்மோகன் அரசு. கடந்த, 10 ஆண்டு கால ஆட்சியில், ஊழலை தவிர, வேறு எதையும் மக்கள் கண்டதில்லை.ஒரு வேளை, நான்கு மாநில தேர்தல் முடிந்த பின், பா.ஜ., கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருந்தால், பா.ஜ.,வுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து இருக்குமா என்று சொல்ல முடியாது. காரணம், காங்கிரசின் எதிர்ப்பு அலை என்பது, பா.ஜ.,வுக்கு ஆதரவு அலையாக மாறவில்லை. மாறாக, நரேந்திர மோடியின் ஆதரவு அலையாக மட்டுமே மாறியுள்ளது. இது, பா.ஜ., தலைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டது. இதை, பா.ஜ., கட்சி, சரியாக வழி நடத்தி சென்றால், வரும் லோக்சபா தேர்தலில், கட்டாயம், பா.ஜ.,விற்கு தனிப்பெரும்பான்மை பெறும் வாய்ப்பு உள்ளது.
கடந்த, 1975ல் இந்திரா நெருக்கடி பிரகடனம் செய்தபோது, அவருடன் இருந்து, ஆட்சி சுகத்தை அனுபவித்து விட்டு, 1977ல், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், இந்திராவை, அம்போ என, விட்டு விட்டு ஜனதா கட்சியில், பல காங்கிரஸ் தலைவர்கள் இணைந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள், ஜெகஜீவன்ராம், எச்.என்.பகுகுணா போன்ற தலைவர்கள். அதுபோல, காங்கிரஸ் தற்போது ராகுல் தலைமையை ஏற்க விரும்பாத பல தலைவர்கள், பா.ஜ., கட்சியில் இணைய வருவர்.இவர்களை, பா.ஜ., கட்சியில் சேர்த்து கொள்ள கூடாது. காரணம், நரேந்திர மோடியின் தலைமையில் அமைய போகும் ஊழலற்ற ஆட்சிக்கு, இவர்கள் பெரும் தடை கற்களாக இருப்பர்.
அது போல, நான்கு மாநில தேர்தல் வெற்றியால், பாஜ., கட்சியுடன் இணைய பல, மாநில கட்சிகள் மதில் மேல் பூனை போல் காத்துக் கிடக்கின்றன.'மணிமேகலையின் அட்சய பாத்திரத்தால், காய சண்டிகையின் பசி தீர்ந்தது. ஆனால், ஊழல் என்னும் அட்சய பாத்திரத்தை தூக்கி நிற்கும் மணிமேகலையுடன் கூட்டு வைத்துள்ள கருணாநிதியின் ஆட்சி அதிகார பசி தீரவில்லை. அடுத்து எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால், எந்த பதவி கிடைக்கும் என்று, விஞ்ஞான ரீதியாக, அரசியல் விவசாயம் செய்ய, கருணாநிதி காயை நகர்த்த ஆரம்பித்து விட்டார். அவர் வலையில், பா.ஜ., கட்சி வீழ்ந்து விட கூடாது.மத்தியில் யார் ஆண்டாலும், அமைச்சரவையில் மட்டும் இடம் பெறும் கட்சி ஒன்று இந்தியாவில் உள்ளது என்றால், அது, தி.மு.க., தான். 1977ல், ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானவுடன், குஜ்ரால் அமைச்சரவையில் உள்ள, தி.மு.க., அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று, வெளியில் இருந்து ஆதரவு தந்த காங்கிரஸ் கோரியது. அதை ஏற்க மறுத்த, ஐ.கே.குஜ்ரால் பிரதமர் பதவியை துறந்தார்.ஆனால், அதே, தி.மு.க., இன்று காங்கிரசுடன் இணைந்து, '2ஜி' ஊழல் புரிந்துள்ளது. தி.மு.க., போன்ற சந்தர்ப்பவாத கூட்டணிகளை, பா.ஜ., தவிர்க்க வேண்டும். நேர்மையான, பிரிவினைவாதம் இல்லாத, மாநில கட்சிகளுடன், பா.ஜ., கூட்டணி அமைக்க வேண்டும். இல்லையென்றால், குதிரை கீழே தள்ளி விட்டது மட்டுமின்றி, குழி பறித்த கதையாக போய் விடும்.
மதவாதம் என்ற கோஷத்தை, மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. நான்கு மாநில தேர்தல் முடிவுகள், இதை தெளிவாகக் காட்டுகின்றன. சிறுபான்மையினரை திருப்திபடுத்துவது தான், மதச்சார்பின்மை எனும் போலி சம சார்பின்மையை, மக்கள் ஒழிக்க தயாராகி விட்டனர்.பர்மாவில் புத்த மதம், இலங்கையில் புத்த மதம், பாகிஸ்தான் உட்பட, 60க்கும் மேற்பட்ட நாடுகளில், இஸ்லாமிய மதம், ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ மதம் எனும் நிலை உள்ள போது, இந்தியாவில் மட்டும், சிறுபான்மையினருக்கு ஆதரவு தரும் கட்சி தான், பெரும்பான்மை பெறும் எனும் நிலையை மாற்றி விட வேண்டும்.காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை நீங்கி விட்டாலே, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறைந்து விடும்.குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்கள், பாகிஸ்தான் எல்லையில் உள்ளன. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீர் வழி மட்டும் ஏன் ஊடுருவி வருகின்றனர் என்றால், அதற்கு காரணம் காஷ்மீருக்கு உள்ள, தனி அந்தஸ்து என்று தான் சொல்ல வேண்டும்.
குஜராத் கலவரத்தை மட்டும் பேசும் கட்சிகள், காஷ்மீரில் பண்டிட்டுகள், தங்களது உடமைகளை இழந்து அகதிகளாக வாழ்வதை ஏன் பேசுவது இல்லை? காரணம், சிறுபான்மையினரை திருப்திப்படுத்த வேண்டிய போலி மதச்சார்பின்மை. சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட, காந்திஜி கூறியதை அதன் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியோ காந்திஜி அன்று சொன்னதை, இன்று சோனியா செய்கிறார் என்பதோடு நின்று விடாமல், ஊழலற்ற ஆட்சியை குஜராத்தில் நரேந்திர மோடி தந்தது போல், ஒரு உன்னத ஆட்சியை மத்தியில் தர வேண்டும்.asussusi@gmail.com