சென்னை:''தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சிக்காத நிலையில், கூட்டணி பற்றி, அக்கட்சி கூறும் கருத்துகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,'' என, பா.ஜ., மாநிலத் தலைவர்,
பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி:
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தமிழக பா.ஜ.,வோ, கட்சியின் அகில இந்திய தலைமையோ, இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என, தி.மு.க.,
கூறுவதற்கு, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
'மோடியை பிரதமராக ஏற்கும், கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்' என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனவே, அதன் அடிப்படையில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவெடுக்கப் படும்.
இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாராயணன், ஐக்கிய ஜனதா தளம் பொது செயலர், தர்மன் யாதவ், 28 பாதிரியார், 50 வழக்கறிஞர் மற்றும், 75 கல்லுாரி மாணவர்கள் ஆகியோர் பொன்.ராதாகிருஷ்ணன்
முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.