புதுடில்லி : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போன்ற இயக்கங்கள் தான் ஜனநாயகத்தில் புதிய பரிமானத்தை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற சமூக இயக்கங்கள் தான் ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுவதாகவும், ஆனால் நாடு இவர்களை தவறாக புரிந்து கொண்டு புறக்கணிப்பதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜனநாயகம் குறித்து வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : ஒரு அரசியல் துறை சார்ந்த மாணவன் என்ற முறையில் எனது கருத்து என்னவென்றால், அன்னா ஹசாரே போன்றோரின் போராட்டங்கள் நமது ஜனநாயகத்தில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி உள்ளது; அத்தகைய போராட்டங்கள் குறித்து நாம் பேசி வேண்டும்; 10 ஆண்டுகளுக்கு முன் சமூக ஆர்வலர்கள், அரசு சாரா அமைப்புக்கள் குறித்து யாரும் சிந்திக்கவில்லை; அவர்கள் ஒரு பகுதி மக்களை மட்டும் பாதுகாப்பதற்காக சட்டம் இயற்றச் சொல்லி கோரிக்கை வைக்கவில்லை; அவர்கள் மக்களின் பிரச்னைகளையும், தேவைகளையும் உணர்ந்துள்ளனர்; அவர்களை மாதிரியாக கொண்டு சமூக பிரச்னைகளை அணுக வலியுறுத்துகின்றனர்; அவர்களின் கோரிக்கையை புறந்தள்ள முடியாது. இவ்வாறு பிரணாப் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையிலிருந்து விலகி பேசிய பிரணாப், பார்லி.,யில் லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டதன் அவசியம் என்ன என்பது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். தகவல் அறியும் உரிமை கழகம் மற்றும் அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆகியன மக்களிடையே ஒரு சமூக மாற்றியத்தை ஏற்படுத்தியதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாகவும் பிரணாப் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு பிரணாப், மத்திய நிதியமைச்சராக இருந்த போது அமைச்சர்கள் குழுவின் தலைவராக சென்று ஹசாரே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உலக நாடுகள் பனிப்போர்களை புறக்கணித்ததன் பயனாக சர்வதேச பயங்கரவாதம், இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்த பிரணாப், இன்றைய வளர்ந்து வரும் உலகில் சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு தற்போதைய வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பங்களும் ஒரு காரணமாக அமைகின்றன எனவும் தெரிவித்துள்ளார். சமூக இணையதளங்கள் சமூகத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுவதாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE