சின்னமனூர் : சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தொழில் வரி செலுத்துமாறு 20 ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உள்ளாட்சியமைப்புகளின் எல்லைக்குள் அமைந்துள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அந்தந்த உள்ளாட்சியமைப்பிற்கு தொழில்வரி செலுத்த வேண்டும். அவர்கள் வாங்கும் சம்பளத்தை அடிப்படையாக கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையோ இந்த வரி வசூலிக்கப்படும். சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட எல்லையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய அரசு அலுவலகங்கள் இருந்தன.
அவற்றில் மின்சார வாரியத்தில் உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், உதவி கணக்கு அலுவலகம், செயற்பொறியாளர்-கட்டுமானம், உதவி மின் பொறியாளர் அலுவலகம், கணக்கு ஆய்வாளர் அலுவலகம், கல்வித்துறையில் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, உதவி தொடக்ககல்வி அலுவலகம் ஆகியற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிந்துள்ளனர். இவர்களுக்கான தொழில் வரியினை அப்போதே வசூலித்திருக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் 1989 முதல் இந்த அலுவலக ஊழியர்களிடம் வசூலிக்கவில்லை எனவும், அதற்கான தொகை இரண்டு லட்ச ரூபாய் எனவும் கணக்கு காட்டியுள்ளது. அந்த தொகையை செலுத்தக்கூறி அவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு பதிலாக இந்த அலுவலகங்களின் தற்போது பணிபுரிபவர்கள், "20 ஆண்டுகளுக்கு முன் பணிபுரிந்தவர்கள் இங்கு பணிபுரியவில்லை. இது நகராட்சியின் தவறு. எனவே இந்த தொகை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்' என பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். சின்னமனூர் நகராட்சியின் மெத்தனத்தால் 2 லட்சம் ரூபாய் நகராட்சி வருவாய் வீணாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE