ஏற்காடு இடைத்தேர்தலில், எதிர்பார்த்தபடியே, ஆளும் கட்சி வென்றிருக்கிறது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில், 90 சதவீதம் ஓட்டுப் பதிவு என்ற சாதனையும் படைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இடைத்தேர்தலில், தமிழகத்தில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்ற, எழுதப்படாத சட்டம், 14வது முறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட மகத்தான சாதனைகளைப் பட்டியலிடும்போது, மனதில் ஏதோவொரு, முள் நெருடிக்கொண்டிருக்கிறதே அதுதான், 'திருமங்கலம் பார்முலா' என்ற அவமானச் சொல். திருமங்கலத்தில், 2006ல் துவங்கி இன்று வரை, தமிழகத்தில் ஓட்டு சேகரிக்கும் வழி, தமிழகத்தையே, அகில இந்தியாவிற்கும் அறிமுகப்படுத்திய இந்தத் தனிவழி, ஏற்காட்டிலும், இதுவே வென்றிருக்கிறது என்பதைப் பல செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.கட்சிகள் ஓட்டளிப்பதற்காகக் கொடுத்த பரிசுச் சீட்டை, அதற்காக ஒதுக்கப்பட்ட கடையில் காட்டி, அதற்குரிய அன்பளிப்பைப் பெறும், ஒரு தம்பதியின் போட்டோ, 'தினமலர்' நாளிதழில் வெளிவந்தது. ஓரிரு நாட்கள் கழித்து, 'அன்பளிப்பு'த் தொகையான, 2,000 ரூபாயை மொபைல் போன் வாங்க, வெட்டிச் செலவு செய்த கணவனின், ஊதாரித்தனத்தால் வெறுத்துப்போன ஒரு பெண், தன் குழந்தையையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டாள். முன்பு, மதுரை மாவட்டத்தில், ஒரு இடைத்தேர்தலின்போது, ஒரு ஊரில் மக்கள், கட்சித் தொண்டர்களைத் தடுத்தனர் என்ற செய்தி கண்டு, பண வினியோகம் நடக்காமல் செய்ய, வாக்காளர்கள் முனைந்தனர் என்று எண்ணினேன்.
ஆனால், ஆளும் கட்சியினர் கொடுப்பதைத் தடுத்த எதிர்க்கட்சியினரின் தவறைக் கண்டிக்கவே, மறியல் செய்தனர் என்ற செய்தி, அதிர்ச்சி அளித்தது. இவ்வாறு, ஓட்டுக்குக் காசு என்ற பெயரில், கொடுப்பதைக் கண்டிக்காமல், 'அவர்கள் உங்கள் பணத்தைத்தானே திரும்பக் கொடுக்கின்றனர், பெற்றுக் கொண்டு ஓட்டுகளை மட்டும் எங்களுக்கு அளியுங்கள்' என்று திருவாக்கு மலர்ந்தருளினார் ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதி. உங்கள் பையிலிருந்து, நுாறு ரூபாய் எடுத்த திருடன், நீங்கள் அலறுவதைக் கேட்டு, 'இந்தா இதை வைத்துக் கொண்டு, வாயை மூடிக் கொண்டிரு' என்று, உங்களிடம் ஒரு ரூபாயைக் கொடுத்தால், சும்மாயிருப்பீர்களா என்ன?'நான் ஓட்டளிக்க 1,000 ரூபாய் பெற்றுக் கொண்டேன். அதனால் என் மனசாட்சி சொல்படி, அந்தக் கட்சிக்கே ஓட்டளித்தேன்' என்று சொல்லிய, அரசு வேலையிலிருந்து ரிடையர் ஆகிக் கணிசமாய்ப் பென்ஷன் பெறும் ஒருவரைப் பற்றி, என் நண்பர் சொன்னார். என்னே, அந்தத் தூய உள்ளம், என்னே அவர்தம் நேர்மை! ஓட்டளிக்கப் பணம் பெறும்போது மட்டும், அந்த மனசாட்சி தூங்கிவிட்டது போலும்.
ஒரு பத்திரிகையாளர் தந்த தகவல் இது. மதுரையில் இவருக்குத் தெரிந்த ஒரு ஒழுக்கமான, சமூகப் பிரக்ஞையுள்ள பேராசிரியரும், முன்பு ஒரு தேர்தலில் இப்படிக் கொடுக்கப்பட்ட பணத்தை வாங்கி இருக்கிறார். 'நீரே வாங்கலாமா?' என்று கேட்டதற்கு, 'வாங்காதவர்களைக் கட்சியின் அடியாட்கள் குறித்து வைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பின்னால் தொந்தரவு செய்யும் ஆபத்து இருக்கிறது. எனவே, பணத்தை வாங்கிக் கொண்டு, கோவில் உண்டியலில் போட்டு விட்டேன். அவர்களுக்கு ஓட்டு முக்கியம். எனக்கு என் குடும்பத்தாரின் உயிர் முக்கியம்' என்றார். வாக்காளர் ஓட்டில், வேட்பாளர் உயிர் இருக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்; வாக்காளர் உயிரும் அதில்தான் இருக்கிறது.ஒரு ஊரில், பணம் கொடுத்த கட்சியினர், தம் எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் என்று கருதிய சில வீடுகளில், பணம் பட்டுவாடா செய்யவில்லை. ஆனால், இதையறிந்த அவ்வீட்டுச் சொந்தங்கள், இவர்களை அணுகி, 'எமக்கு மனசாட்சி என்று ஒன்றிருக்கிறது. எங்களுக்கும் பணம் கிடைத்தால் மனசாட்சிப்படி உங்களுக்குத்தான் ஓட்டளிப்போம். நீங்கள் பயப்படத் தேவை இல்லை' என்று, உறுதிமொழி கூறிப் பணம் பெற்றுக் கொண்டன.
தமிழகத்தில், தமக்களிக்கப்பட்ட இலவச 'டிவி' மூலமாக, மக்கள் எப்படிப்பட்ட பயனை அடைந்திருக்கின்றனர் என்று தெள்ளத் தெளிவாகக் காட்டியது, இன்னொரு சம்பவம். எங்கெங்கே, ஓட்டுக்குப் பணம் குறைவாகக் கொடுக்கின்றனர் என்று சந்தேகித்தனரோ, அங்கே கட்சியினர் முன் மக்கள் வைத்த கேள்வி, '1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சுருட்டினீர்களே, ஓட்டுக்கு 1,000, 2,000 மட்டும் கொடுத்து, எங்களை ஏமாற்றுகிறீர்களா? மேலும், 'போட்டு' கொடுத்தால் மட்டுமே எங்கள் வோட்டு, உங்களுக்குக் கிடைக்கும்!' இந்த செய்தியைப் படித்த எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தவரும், இலவச 'டிவி' திட்டத்தைக் குறைகூறவோ, அதற்கு எதிராய் வழக்குத் தொடுக்கவோ விழைய மாட்டார்கள். ஏனெனில், இலவச 'டிவி' மூலம் இந்த விஷயத்தில், மக்கள் அறிவு வளரும், வளர்ந்திருக்கிறது என்ற வாதம் உண்மையானது என்பது கண்கூடு.மக்களுக்கு, 'நன்மை' செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நண்பர், 'இனி 1,000, 2,000 ரூபாய் கொடுத்தால் வாங்காதீர்கள், ஏலம் விட்டு, எவர் அதிகமாய்ப் பணம் தர ஒப்புக்கொள்கிறார்களோ, அவர்களுக்கே எங்கள் ஓட்டு என்று ஒரு வரைமுறை வந்தால், வாக்காளர் ஓட்டுகளுக்கு, சந்தை விலை கிடைக்கும்' என்றார்.ஓட்டுச் சேகரிக்க இந்தப் புதிய முறை, விரைவில் அமல்படுத்தப்படுமாயின், மற்ற மாநிலங்களுக்கும், ஏன் ஜனநாயக உலகுக்குமே, தமிழகம் முன்னோடியாகத் திகழும் என்பதில், யாதொரு ஐயமும் இல்லை. பின், எக்காலத்திலும் தமிழன் தலைகுனிந்தே நிற்க வேண்டியிருக்கும் அல்லது உலகத்திலேயே, இதற்காகவாவது நமக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறதே என்று, மகிழ்ந்து தலைநிமிர்ந்து நிற்போமோ?கெஜ்ரிவாலைப் பின்பற்றும் சில தமிழர்கள், இங்கேயும் அவர் கட்சி போட்டியிட வேண்டும் என்று, முனைந்திருந்தினராம். அவர்களுக்கு நான் சொல்வது, 'ஏன் ஐயா! தமிழர்களை முட்டாள்கள் என்றா நினைத்தீர்? மாங்காய் மனிதன் கட்சி (ஆம் ஆத்மி) ஓட்டுக்குப் பணமும் கொடுக்க இயலாதவர்கள் கூட்டம் ஆயிற்றே! பணம் கொடுத்து ஓட்டு சேகரிப்பதில், உலகமெங்கும் சிறந்த நாடு என்று தலைகுனிந்து நிற்கும் எங்களை, தலைநிமிரச் செய்யும் எந்த முயற்சியையும் முறியடிப்போம். நாங்கள் எந்நாளும் தலைகுனிந்தே நிற்போம்!'வாழ்க தமிழகம்!
இ-மெயில்: gopalaswamin@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE