அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை, தி.மு.க., தான் முடிவு செய்யும் என, தி.மு.க.,வின் கொள்கை பரப்புச் செயலர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவும், முன்னாள் எம்.பி., சிவாவும் பேசினர்.
திருச்சியில் நடக்கவுள்ள, 10வது, தி.மு.க., மாநாட்டை நடத்துவதற்கான, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட, தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், சமீபத்தில் திருச்சி கலைஞர், அறிவாலயத்தில் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலருமான, ராஜா பேசியதாவது:
படபடப்பு இல்லை எதிரும், புதிருமான அரசியல் சூழலில், தி.மு.க., மாநாடு நடக்கிறது.
என்னை 2ஜி வழக்கில் கைது செய்தபோது, எனக்கு பி.பி., நார்மலாக இருந்தது. ஆனால், என்னை கைது செய்த அதிகாரிக்கு அதிகம் இருந்தது. நீதி தவறாததால், எனக்கு எந்த படபடப்பும் வரவில்லை.
ஒன்றுமில்லாத வழக்கை, ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் தான் ஊதி பெரிதுபடுத்துகின்றன. மதவாத பிரச்னையால், காங்கிரஸ் கட்சிக்கு, தி.மு.க., ஆதரவளித்தது. ஆனால், 2ஜி இலங்கை தமிழர் பிரச்னையில், அது, தி.மு.க.,வை பழி வாங்கி விட்டது. மாநில கட்சிகளை, மீண்டும் மத்தியில் ஆட்சி புரிய வைக்கும் முயற்சியில், தி.மு.க., வெற்றி பெறும். தேர்தல் கணிப்புகளில் கூட, பா.ஜ.,வுக்கு, 180, காங்கிரஸ் கட்சிக்கு, 100 இடம் தான் கிடைக்கும் என, தெரிகிறது. ஆகையால், மாநில கட்சிகள் தான், இந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும். தேர்தலுக்கு பின், இடதுசாரிகள் கூட, கோபாலபுரத்துக்கும், அண்ணா அறிவாலயத்துக்கும் வருவர். இந்தியாவில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்துக்கு, திருச்சி மாநாடு துணை நிற்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
மற்றொரு கொள்கை பரப்பு செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான, சிவா பேசியதாவது: மாநாடு என்றாலே எழுச்சி என்பது, தி.மு.க.,வின் தனிச்சிறப்பு. சிவப்பு விளக்கு இல்லையென்றால், அடையாளம் தெரியாதவர்கள் தான், இன்றைக்கு தமிழக அமைச்சர்களாக உள்ளனர். தி.மு.க., தான் ஆளுங்கட்சி போல் உள்ளது. இனி, இப்படி ஒரு மாநாட்டை நடத்திட முடியாது எனும் அளவுக்கு, திருச்சி மாநாடு அமையும்.
மாநில கட்சிகளை முடித்துக் கட்ட காங்கிரஸ் முயற்சிக்கிறது. மாநில கட்சிகளின் தயவின்றி, மத்தியில், யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அதேநேரம், தி.மு.க., கைகாட்டும் ஒருவர்தான் பிரதமராக முடியும்.
நாற்பதும் நமதே : காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததால் அடைந்த பலனைவிட, காயங்களும், பழிகளும் தான் அதிகம். 2ஜி, இலங்கை தமிழர் பிரச்னை ஆகியவற்றில், திட்டமிட்டு, தி.மு.க., மீது பழிச் சொல்லை உருவாக்கினர். அவர்களின் செயலால், இன்று, நாம் பேச முடியாத நிலையில் உள்ளோம். நம் மீது, ஈழத்தமிழர் பிரச்னையில் விமர்சனங்கள் வந்துள்ளன. ஏற்காட்டில் கூட, 30 சதவீதம் ஓட்டுகளை, தி.மு.க., பெற்றுள்ளது. அந்த தேர்தலில் பங்கேற்காத கட்சிகளின் ஓட்டுகளும் உள்ளது. ஆகையால், வரும் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும், தி.மு.க., வெற்றி பெறும். தி.மு.க., தான் அடுத்த மத்திய அரசை தீர்மானிக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE