சாலையில் பறிக்கும் ரூவா... சாமிக்கு போகுது பூவா!| Dinamalar

சாலையில் பறிக்கும் ரூவா... சாமிக்கு போகுது பூவா!

Added : டிச 31, 2013
Share
( நாட்டு நடப்பை அலசும் சித்ரா... மித்ரா என்ற இந்த புதிய பகுதி வாரந்தோறும் செவ்வாய் கிழமை வெளிவரும்)நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்புவதற்கு இன்னும் நேரம் இருந்தது; ஜன்னலோர இருக்கையில் மித்ரா உட்கார்ந்திருந்தாள்."என்னடி! சென்னைக்கு நீ போற விஷயமாவது "சக்சஸ்'சா முடியுமா?,'' வெளியில் நின்றபடி கிண்டலாய்க் கேட்டாள் சித்ரா."நம்ம கவுன்சிலர்கள் முயற்சியைச்
சாலையில் பறிக்கும் ரூவா... சாமிக்கு போகுது பூவா!

( நாட்டு நடப்பை அலசும் சித்ரா... மித்ரா என்ற இந்த புதிய பகுதி வாரந்தோறும் செவ்வாய் கிழமை வெளிவரும்)
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்புவதற்கு இன்னும் நேரம் இருந்தது; ஜன்னலோர இருக்கையில் மித்ரா உட்கார்ந்திருந்தாள்.
"என்னடி! சென்னைக்கு நீ போற விஷயமாவது "சக்சஸ்'சா முடியுமா?,'' வெளியில் நின்றபடி கிண்டலாய்க் கேட்டாள் சித்ரா.
"நம்ம கவுன்சிலர்கள் முயற்சியைச் சொல்றியா...?,''
"ஆமா! கடைசி வரைக்கும் சி.எம்.ட்ட நேரடியா பெட்டிஷன் கொடுக்க முடியலை; ஏதோ சி.ஐ.டி., போலீஸ் ஆபீசர்ட்ட கொடுத்தாங்களாம். எப்படியும் கொஞ்ச நாள்ல அது கோயம்புத்தூர் வி.ஐ.பி.,க்கு வந்துரும்,''
"நீலகிரி மாவட்டச் செயலாளரை அஞ்சே நாள்ல காலி பண்ணுனதும் "பெட்டிஷன்'தான்...ஆனா, கோயம்புத்தூர்ல இருந்து போறது மட்டும் ஏன் அந்தம்மாட்ட போறதில்லேன்னுதான் கட்சிக்காரங்களுக்கே புரியலை. கடும் விரக்தியில இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
"ஆளும்கட்சிக்காரங்க மட்டுமா, புலம்புறாங்க. உடன் பிறப்புகளும்தான்!,'' என்றாள் சித்ரா.
"அவுங்களுக்கு என்னாச்சாம்? அதுதான், ஆளும்கட்சிக்காரங்களோட நல்லா "டை-அப்' போட்டு, சத்தமில்லாம சம்பாதிச்சிட்டு இருக்காங்களே!,''
"தி.மு.க., பொதுக்குழுவுக்கு, கவுன்சிலர் மீனா லோகுவுக்கும் அழைப்பு வந்துருக்கு. அவுங்க, பொதுக்குழு உறுப்பினரே கிடையாது. ஆனா, கருணாநிதி, ஸ்டாலினைப் பத்தி பாட்டுப் போட்டு, எப்படியோ பேரு வாங்கிட்டாங்க; அதனாலதான் கூப்பிட்டுருக்காங்க. அங்க கூப்பிட்டது மட்டுமில்லாம, பொதுக்குழு தீர்மானத்தை விளக்கி, திருப்பூர்ல நடக்கப்போற கூட்டத்துக்கு அவுங்களையே தலைமையா போட்டுட்டாங்க. அதுலதான், கட்சி சீனியர்கள் எல்லாம் புலம்பிட்டுத் திரியுறாங்க,''
"பொம்பளைங்க முன்னேறுனா, சிலருக்குப் பிடிக்காதே!,'' என்றாள் மித்ரா.
"யாருக்குப் பிடிக்காட்டாலும், வர்ற எலக்ஷன்ல, கோயம்புத்தூர்ல பெண் வேட்பாளருக்குதான் வாய்ப்பிருக்கும் போலிருக்கே!,'' என்று புதிர் போட்டாள் சித்ரா.
"எனக்குத் தெரிய, திராவிடக் கட்சிகள்ல அதுக்கு வாய்ப்பேயில்லை!,''
"நீ சொல்றது கரெக்ட்தான்; நான் சொன்னது, தேசியக் கட்சியைப் பத்தி. கோயம்புத்தூர் தொகுதியில, "சீட்' வாங்க பா.ஜ.,வுல பயங்கர போட்டி இருக்கு; ஆனா, வானதி சீனிவாசனுக்குதான் அதிக வாய்ப்புன்னு கட்சியில பேசிக்கிறாங்க; அந்தம்மா ஜெயிச்சா, கண்டிப்பா மினிஸ்டராயிருவாங்களாம்,''
"அரசியலை விடுக்கா! சிட்டிக்குள்ள டிராபிக் போலீஸ் வசூல், ரொம்ப மோசமாயிருச்சுன்னு எல்லாரும் சொல்றாங்க!,'' என்றாள் மித்ரா.
"உண்மைதான்டி! சிட்டி டிராபிக்கைக் கவனிச்சிக்கிற முக்கியமான போலீஸ் ஆபீசருக்கு "வசூல்ராஜா'ன்னு பேரு வக்கிற அளவுக்கு, வசூல்ல பட்டையைக் கிளப்புறாரு. நிறையா தகவல் வருது. லேட்டஸ்ட்டா கேள்விப்பட்டது இது. அந்த ஆபீசர், டிராபிக் இன்ஸ்பெக்டர் ஒருத்தரைக் கூப்பிட்டு, புதுசா "டிராக்சூட்' வேணும்னு கேட்ருக்காரு. அவரும், ஏகப்பட்ட "டிராக்சூட்'டைக் கொண்டு வந்து, "உங்களுக்குப் பிடிச்சதை எடுத்துக்கோங்க சார்!'ன்னு சொல்லி இருக்காரு. ஒடனே, அந்த ஆபீசர், வீட்டுக்காரம்மாவைக் கூப்பிட்டு, "எல்லாத்தையும் எடுத்து பீரோவுல வை'ன்னு சொல்லிட்டாராம். மொத்த அமவுன்ட், 35 ஆயிரம் ரூபா. அதை வசூல் பண்றதுக்காக அந்த டிராபிக் இன்ஸ்பெக்டர், ரோடு ரோடா அலையுறாரு,'' என்றாள் சித்ரா.
"அடக்கொடுமையே!,'' என்றாள் மித்ரா.
"இதுக்கே அசந்தா எப்புடி? அதே ஆபீசர், அடிக்கடி குடும்பத்தோட தியேட்டருக்குப் போவாரு; டிக்கெட் எடுத்துக் கொடுக்குற பொறுப்பு, அந்தந்த ஏரியா டிராபிக் எஸ்.ஐ.,யோடது; இன்டர்வெல்ல "ஸ்நாக்ஸ்' வாங்கியும் கொடுக்கணும்; சமீபத்துல, 450 ரூபாய்க்கு "ஸ்நாக்ஸ்' வாங்கிக் கொடுத்து, நொந்திருக்காரு ஒரு டிரைவர். இதெல்லாம் பரவாயில்லடி...அவர் தினமும் சாமி கும்பிடுறதுக்கு, ராமநாதபுரத்துல இருக்கிற ஒரு பூக்கடையில இருந்துதான் பூ வருது. அதுக்கு மாசம் ரெண்டாயிரம் ரூபா கொடுக்கிறதும் ஒரு டிராபிக் எஸ்.ஐ.,தான்!,'' என்றாள் சித்ரா.
"அய்யே...இதென்னக்கா கேவலமா இருக்கு? அந்த சாமியாவது, வசூல்ராஜாட்ட இருந்து, டிராபிக் போலீஸ்காரங்களைக் காப்பாத்துமா?,'' என்றாள் மித்ரா.
"இவரையெல்லாம் தூக்கி சாப்பிடுறாரு ஒரு இன்ஸ்பெக்டர். சிட்டிக்குள்ள ராத்திரி முழுக்க சரக்கு விக்கிறதுக்கு, ஒரு "பார்'க்கு மாசம் 5 ஆயிரம் ரூபா மாமூல் கேட்ருக்காரு. "பார்' நடத்துறவுங்க, கூட்டத்தைப் போட்டு, கமிஷனர்ட்ட "கம்பிளைன்ட்' கொடுக்கலாம்னு கௌம்பி இருக்காங்க. இந்த தகவலை மோப்பம் பிடிச்ச அவரு, ஏதோ பேரம் பேசி, 3ஆயிரம் ரூபாய்க்கு ஒத்துட்டு இருக்காருன்னு தகவல்,'' என்றாள் சித்ரா.
"நீ சொல்ற ஆபீசர், பணம் கொடுக்கலைன்னு "ரெக்கார்டு பீரோ'வுல இருந்து சில ஆவணங்களை எடுத்துக் கிழிச்சவராச்சே. அவர் மேலதான், எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கிறாங்க. என்ன மாயம்னே தெரியலை,'' என்று சித்ரா சொல்லவும், விசில் சத்தம் கேட்டது.
"உங்க அண்ணன் பையன் ரஞ்சித்தை ரொம்பக் கேட்டதாச் சொல்லுடி என்று சித்ரா கைகாட்ட, மெதுவாய் நகர்ந்தது ரயில்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X