இந்தியாவைத் தாக்க ஆயத்தம்| Dinamalar

இந்தியாவைத் தாக்க ஆயத்தம்

Added : டிச 31, 2013
Advertisement
இந்தியாவைத் தாக்க ஆயத்தம்

சொந்த கிராமத்தில் ஒரு வாரம் தங்கியபின்னர், 2008 ஜூலை இறுதியில் கசாப் பைல் முஜாஹிதீன் அலுவலகத்தில், ஹபீஸ் முகமது, தலைவர் முவாலியா ஆகியோரைச் சந்தித்தான். சேவை நளா என்னுமிடத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு அவனைத் தலைவர் அழைத்துச்சென்றார். அங்கு சுமார் 20/22 முஜாஹிதீன்கள் இருந்தனர். மேலும் முன்னணியாளர்கள் எனப்படும் அமீர் ஹபீஸ் முகமது சயீத், முகாம்மி, அபு ஹம்ஸா, தலைவர் முவாபியா, காஃபா, அபு அல்காமா என்போரும் அங்கிருந்தனர். ஒரு குறுந்தகடு - சிடி - மூலம் கலாலுதீன் காஷ்மீரில் எவ்வாறு ஃபிடாயீன் தாக்குதல் நடத்தினான் என்று கம்ப்யூட்டர் மூலமாக இவர்களுக்கு விளக்கப்பட்டது. இதை அபு அல்-காமா இவர்களுக்கு மேலும் விளக்கிக்கூறினான்.
இவர்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் இவர்களுக்கு அமீர் ஹபீஸ் சையத் புதிய பெயர்களைச் சூட்டினான். யார் யாருக்குப் பழைய பெயர்களுக்குப் பின் என்ன புதிய பெயர் சூட்டப்பட்டதென்பதை கசாப் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான். பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கும் இவ்வாறு புனைப்பெயர்கள் தரப்பட்டன. அன்று மாலை இவர்கள் பைதுல் முஜாஹிதீன் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.பிடிபடாமல் நழுவத் தந்திரம்:

தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரும் முரிட்கே, மார்கஸ்-இ-தோய்பா பயிற்சி நிலையத்துக்குப் புறப்பட்டனர். இங்கு ஒரு மாதம் பயிற்சி நடந்தது. இலக்குகளைப் பற்றிச் செய்தி சேகரித்து அறிதல், கண்காணித்தல், குறிப்பிட்டவரைப் பின்பற்றிச் செல்லுதல், தன்னை யாராவது பின்பற்றினால் அவர்களை ஏமாற்றி நழுவுதல் போன்ற உளவு அறிவுப் பயிற்சிகள் இங்கு நடந்தன. உதாரணமாகத் தங்களை யாராவது பின்பற்றுவதாகத் தெரிந்தால், தமது வாகனத்தில் வலப்புறத் திருப்ப விளக்கைப் போட்டு, பின்பற்றுவோர் அந்தத் திசையில் திரும்பும்போது இடப்புறம் நழுவி விடுவோமென்று கசாப் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான். இந்தப் பயிற்சியின் பொறுப்பாளர் அபுசயீத். அடிக்கடி இவர்களைச் சந்தித்து கேள்விகள் கேட்டுப் பயிற்சியின் போக்கு பற்றி விசாரிப்பான்.


இந்தப் பயிற்சிக்காலத்தில் கசாப்-ன் கூட்டாளிகள் நசாத் மற்றும் அபுமுவாயியா இருவரும் முகாமை விட்டுப் போய்விட்டனர்.கடலில் பயிற்சி:

இந்த தவுவாரா பயிற்சியின் தலைவர்கள் அபுகாஃபா மற்றும் இம்ரான் (தேடப்படும் குற்றவாளி 12). அவன் இவர்களை உற்சாகப்படுத்தி வந்தான். மேஜர் ஜெனரல் அதிகாரி இருமுறை முகாமுக்கு வந்தார். 2008 ஆகஸ்டில் இந்தப் பயிற்சி முடிந்தது. பிற பெரியவர்களும் வந்தார்கள். உங்களுக்கு நீச்சல் தெரியுமா என்று மேஜர் கேட்டதற்கு இவர்கள் தெரியுமென்று பதில் கூறினார்கள். இவர்களுக்குக் கடல் பயிற்சி - மெரைன் டிரெயினிங் - தருமாறு மேஜர் கூறினார்.


செப்டம்பர் 2008. இவர்கள் ரயில் மூலம் கராச்சி வந்தனர். அஸீஸாபாத் மொகல்லா என்ற இடத்தில் ஒரு வீட்டில் தங்கினார்கள். அப்போது ரம்ஜான் நோன்பும் தொடங்கியது. இவர்கள் 13 பேர். இரண்டு சிறிய படகுகளில் இவர்களுக்குக் கடல் பயிற்சி தொடங்கியது. ஒரு படகில் சிறிய இஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. ஹகீம் ஸாப் (தேடப்படும் குற்றவாளி 14) என்பவன் பயிற்சி அளித்தான். கடலின் ஆழத்தை அறிந்துகொள்ள வரைபடங்களைப் பயன்படுத்தும் முறை, திசைகளை அறியும் ஜிபிஎஸ் முறை, மீன்பிடி வலைகளை வீசும் பயிற்சிகள் தரப்பட்டன. (மீன்பிடி வலை வீச்சு ஏன் என்று மாஜிஸ்திரேட் கேட்டதற்கு பகை நாட்டு அதிகாரிகளிடம் தாங்கள் மீனவர்கள் என்று காட்டி ஏமாற்றவே இந்த நடிப்பு என்று கசாப் கூறினான்).


கடற்பயிற்சி முடிந்ததும் இவர்கள் மீதும் பைதுல் முஜாஹிதீன் என்ற இடத்துக்குத் திரும்பினார்கள். அங்கிருந்த பெருந்தலைகள் இவர்களது கடற்பயிற்சி பற்றி விசாரித்தனர்.


மூன்று நாட்களுக்குப் பின்னர் இவர்களுடன் 6 முஜாஹிதீன்கள் சேர்ந்தனர். இவர்களது பெயர்கள், நிகழ்ந்த பெயர் மாற்றங்கள், இந்துஸ்தான் தாக்குதல் இலக்குகள் பற்றி விளக்கப்பட்டன.மும்பை குறிவைக்கப்பட்டதேன்:

13வதுநாள் 7 தலைவர்கள் (இவர்களது பெயர்களை கசாப் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளான்) இவர்களை பைதுல் முஜாஹித் அலுவலகத்துக்கு அழைத்து, தனது நீண்ட பிரசங்கத்தில் இந்துஸ்தான் தாக்குதல் பற்றியும் அதற்கான தருணம் வந்துவிட்டதாகவும், இந்துஸ்தானத்தில் பொருளாதார முதுகெலும்பு மும்பையில் உள்ளதாகவும், எனவே நேரடியாக மும்பை நகரைத் தாக்க வேண்டிய அவசியம், நேரம் வந்துவிட்டதாகவும் இவர்கள் வலியுறுத்தினார்கள்.


""உங்களுக்கு நல்ல கடற்பயிற்சி கிடைத்துள்ளது, கடல் வழியாக மும்பைö சன்று தாக்குதல் நடத்துங்கள்'' என்று தலைவர்களில் ஒருவன் கூறினான். இந்தக் கூட்டத்துக்கு மேஜர் ஜெனரல் ஸாப் வந்திருந்தார்.


இந்தப் பெருந்தலைகள் சிறிதுநேரம் தனியாக உரையாடினார்கள். இவர்களில் ஒருவனான ஸாகி-யுர்-ரகிமான் இவர்களிடம் வந்து, மேஜர் ஜெனரல் இவர்களது தயார் நிலையை நேரடியாகக் காண விரும்புவதாகக்கூறி, ஒவ்வொருவருக்கும் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியைக் கொடுத்தான். இவர்களுக்கு 10 இலக்குகள் காட்டப்பட்டன. அனைவரும் தக்க இடங்களில் நின்றுகொண்டு தயாராக நின்றனர். மேஜர் "பையர்' என்று கூவ, அனைவரும் இலக்கை நோக்கிச் சுடவேண்டும், இருமுறை கூவினால் 2 தரம் சுடவேண்டும்.


இவர்களில் இம்ரான் பாபர் தவிர எல்லோருமே இலக்கைச் சரியாகச் சுட்டு வீழ்த்தினார்கள். மேஜர் ஜெனரல் இம்ரான் பாபர்-ஐக் கடுமையாகப் பேசினார். கடுமையாகப் பயிற்சி மேற்கொள்ளும்படி கூறினார். இரண்டாவது பரீட்சை நடந்தது. அவரவர்களின் இலக்கை முற்றிலும் அழிக்க வேண்டும். நான்காவது இலக்குக்கு உரியவனான கசாப் அதை முற்றிலும் அழித்துப் பாராட்டுப் பெற்றான். குறைந்த எண்ணிக்கை புல்லட்டுகளைக் கொண்டு அழித்தான்.

( அடுத்து வருவது... தாக்குதலுக்கு தேதி நிர்ணயம் )
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X