குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, தேர்தல் களம் இறங்கியுள்ளது, பா.ஜ., கட்சி. அதை, 'இங்கே என்ன அதிபர் ஆட்சி முறையா நடக்கிறது?' என, கிண்டலடிக்கிறது காங்கிரஸ். அதற்கு பதிலடியாக, 'ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்க தயாரா?' என, அம்பு வீசுகிறது பா.ஜ., இந்த அறிக்கைப் போர் தொடர்பாக, காங்கிரஸ் தரப்பிலும், அதற்குப் போட்டியாக, பா.ஜ., தரப்பிலும், இரு தலைவர்கள், நம்மிடம் நடத்திய வார்த்தை வீச்சுக்கள் இதோ:
நம்நாட்டில், எம்.பி.,க்களை மக்கள் தேர்வு செய்கின்றனர். தேர்தலில், அதிக எம்.பி.,க்களை பெறும் கட்சி, பிரதமரை தேர்வு செய்கிறது. இந்த நடைமுறையை, தனிப்பட்ட ஒரு கட்சி மாற்றி விட முடியாது. லோக்சபாவில், மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, மாற்ற முடியும். எனவே, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, இல்லாத தேர்தல் நடைமுறையை, ஜனாதிபதி ஆட்சி முறையை, நாங்கள் கொண்டு வர முயற்சிக்கிறோம் என, கூறுவதை ஏற்க முடியாது. இதற்கு முன், வாஜ்பாயை முன்னிறுத்தி, வெற்றி பெற்றுள்ளோம். நம், லோக்சபா தேர்தல் வரலாற்றில், பிரதமர் வேட்பாளராக, பல தலைவர்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். எனவே, பிரதமர் வேட்பாளராக, ஒருவரை அறிவித்து, லோக்சபா தேர்தலை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. மக்கள் ஏற்றுக் கொள்ளும் தலைவராக, மோடி உள்ளார். அவர், குஜராத் மாநிலத்தில் செய்த பணிகள், அதனால், அங்கு ஏற்பட்ட வளர்ச்சியை முன்னிறுத்தி, பிரதமர் வேட்பாளராக, அவரை அறிவித்துள்ளோம். அது போன்றதொரு வேட்பாளர், காங்கிரசிடமோ, வேறு கட்சிகளிடமோ இருந்தால் முன் நிறுத்தட்டும். காங்கிரசில், மக்கள் ஏற்றுக் கொள்ளும் தலைவர்கள் யாரும் இல்லை. அதனால், மோடிக்கு இணையாக, ராகுலை முன்னிறுத்த, அந்தக் கட்சியினர் துடிக்கின்றனர். இருந்தாலும், மக்களின் கோப அலையை சமாளிக்க, ராகுலைத் தவிர வேறு தலைவர்கள் அவர்களிடம் இல்லை. இப்படியொரு நெருக்கடி, காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. என்ன தான், காங்கிரஸ் முயற்சி செய்தாலும், தேர்தலில், வெற்றி பெற முடியாது.
- இல.கணேசன், தேசியக் குழு செயலர், பா.ஜ.,
'எங்கள் கட்சி லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால், இவரை பிரதமராக்குவோம்' எனக்கூறி, தேர்தலை சந்திப்பது ஒரு முறை. 'இவரே பிரதமர்... இவருக்கு வாக்களியுங்கள்' என, பிரசாரம் செய்வது மற்றொரு முறை. 'இவரே பிரதமர் எனக்கூறி, தேர்தல் நடத்தும் முறை, நம்நாட்டின் பார்லிமென்ட் ஜனநாயகத்தில் இல்லை. ஆனால், பா.ஜ., இதைத் செய்கிறது. அதற்கு, மோடியை முன்னிறுத்துகிறது. மோடியை முன்னிறுத்தி, விளம்பர ஜாலங்களை செய்து, வாக்காளர்களை ஏமாற்ற, பா.ஜ., முனைகிறது. தனி நபருக்கு விளம்பரம் செய்து, தேர்தல் முறையை திசை திருப்பும், பா.ஜ.,வின் போக்கையே, காங்கிரஸ் கண்டிக்கிறது. எங்களைப் பொறுத்தவரை, 'பிரதமர் வேட்பாளருக்கு ராகுல் பொருத்தமானவர்' என, கருத்துக் கூறுகிறோம். ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தான், அவரை பிரதமராக்க வேண்டும் என்ற, அவசியம் காங்கிரசுக்கு இல்லை. பிரதமர் பதவி ராகுலின் சட்டைப் பாக்கெட்டில் தான் ஐந்தாண்டுகள் இருந்தது. அவர் நினைத்திருந்தால், எப்போதோ பிரதமராகி இருக்கலாம். ஆனால், அதை வேண்டாம் என, ஒதுக்கி விட்டார். இப்போதும், 'காங்கிரஸ் வெற்றி பெற்றால், ராகுலை பிரதமராக்க வேண்டும்' என, கட்சி தலைமைக்கு சொல்கிறோம். இதை, தேர்தல் பிரசாரமாக்கவில்லை. எங்களது தேர்தல் பிரசாரத்துக்கு, 10 ஆண்டு கால சாதனை, எதிர் வரும் காலத்தில் செய்ய உள்ள பணிகள் போன்றவற்றை முன்னிறுத்தியே, லோக்சபா தேர்தலை சந்திக்கவிருக்கிறோம். எனவே, மோடியையும், ராகுலையும் ஒப்பிட வேண்டிய அவசியம் எங்களுக்கு எழவில்லை.
- பீட்டர் அல்போன்ஸ், நிர்வாகக் குழு உறுப்பினர், காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE