புதுடில்லி : பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, லோக்சபா தேர்தல் நெருங்குவதால் தற்போது கட்சியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்தே ஆக வேண்டிய நிலையில் உள்ளது. இதற்கான பட்டியலை காங்கிரஸ் தயாரித்து வருகிறது. இந்த பட்டியலில் ராகுல் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் பிரதமர் வேட்பாளர் குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் தலைவர் சோனியா எடுக்க உள்ளார்.
குழப்பத்தில் காங்கிரஸ் :
பிரதமர் வேட்பாளர் பட்டியலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் பெயர் முன்னிலையில் இருந்தாலும், தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவரை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறுபான்மை இனத்தவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்யும் பட்சத்தில் அதற்கான பட்டியலில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார், மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோனி, சல்மான் குர்ஷித் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் இவர்களில் எவருக்கும் எதிர்பார்க்கும் அளவிற்கு கட்சிக்குள் ஆதரவு இல்லாததால் காங்கிரசின் குழப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, காங்கிரசிற்கு மற்றுமொரு சவாலாக உள்ளது. கூட்டணி அமைக்கும் போது, அக்கட்சியில் யாராவது ஒருவருக்கு பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு தர வேண்டிய கட்டாயத்திற்கும் காங்கிரஸ் தள்ளப்படும். சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற பெரும் தோல்வி காரணமாக கூட்டணி மற்றும் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது.
பின்வாங்கும் எம்.பி.,க்கள் :
காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்கள் பலர் லோக்சபா தேர்தலில் போட்டியிடவும், தாங்கள் போட்டியிடும் இடங்களை மாற்றிக் கொள்ளவும் தயக்கமும், மறுப்பும் காட்டி வருகின்றனர். ராஜஸ்தான் மற்றம் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலான காங்கிரஸ் எம்.பி.,க்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் ராகுல், ராஜஸ்தானைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பலரை சமாதானம் செய்து தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவிக்க வைத்துள்ளார். நிதியமைச்சர் சிதம்பரம் தான் போட்டியிடும் தொகுதியை சிவகங்கையில் இருந்து புதுச்சேரிக்கு மாற்ற முடிவு செய்துள்ளார். கடந்த முறை சிவகங்கை தொகுதியில் கடைசி நேர வெற்றியை பெற்றதால் இந்த முடிவை சிதம்பரம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிதம்பரத்தை போன்ற பல முக்கிய அமைச்சர்களும் தங்களின் தொகுதிகளை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனால் தொகுதி தேர்வில் காங்கிரசிற்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.
பா.ஜ., விறுவிறுப்பு :
லோக்சபா தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளையே காங்கிரஸ் துவக்காத நிலையில் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியின் உற்சாகத்தால் தேர்தல் பணிகளில் பா.ஜ., தீவிர முனைப்பு காட்டி வருகிறது. சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின் பொதுச் செயலாளர்களை கூட்டி ஆலோசனை நடத்தி உள்ள கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், டிசம்பர் 24ம் தேதி தேர்தல் பிரசாரம் குறித்த கூட்டத்தையும் நடத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து பா.ஜ., முதல்வர்களும் பங்கேற்றனர். கூட்டணி குறித்தும், பிரச்சார வியூகம் குறித்தும் பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த பட்டியலையும் மோடி மற்றும் ராஜ்நாத் சிங் தலைமையிலான கமிட்டி தயாரித்து வருகிறது. வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஜனவரி 15ம் தேதி வெளியிடப்பட உள்ளது. டில்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவாலான ஆம் ஆத்மி :
சிறும்பான்மை இன மக்களின் ஓட்டுக்களை பெற்று உத்திர பிரதேசத்தில் வெற்றி பெறலாம் என நம்பிக்கையில் இருந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி போன்றோருக்கு ஆம் ஆத்மி கட்சி பெரும் சவாலாக உள்ளது. டில்லியில் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றி, மாயாவதி போன்றோரின் பிரதமர் கனவை தகர்த்தெறிந்துள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் சிறையில் இருந்து வெளியானதால் புதிய கூட்டணி அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. காங்கிரசில் இருந்து கூட்டணியை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள கட்சி, தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறது. லாலுவை கூட்டணியில் இருந்து விலக்குவதில் இருந்து ராகுல் தனது நிலையை மாற்றிக் கொண்டாலும் திக்விஜய் சிங், கபில் சிபில் போன்ற முக்கிய தலைவர்கள் லாலுவை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. இதனால் காங்கிரசிற்குள் பிரதமர் வேட்பாளர், தொகுதிக்கான வேட்பாளர்கள், கூட்டணி என குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE