சென்னை: ஆங்கில புத்தாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்கள் நேற்று, வாழ்த்து தெரிவித்தனர். தன்னை சந்திக்க வந்த காங்கிரஸ், இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு, 100 ரூபாயை, புத்தாண்டு பரிசாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வழங்கி, பரபரப்பை ஏற்படுத்தினார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், நேற்று முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர். அப்போது கருணாநிதிக்கு, ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு, புத்தகங்கள், மலர் கொத்துக்களை வழங்கினர்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மு.க.தமிழரசு, முரசொலி செல்வம், செல்வி, டி.ஆர்.பாலு, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, நடிகை குஷ்பு உட்பட பலர், கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள், எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ், 'தேசிய முரசு' ஆசிரியர் கோபண்ணா ஆகியோரும், கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சி.ஐ.டி., நகர் இல்லத்திற்கு சென்ற கருணாநிதிக்கு, கனிமொழி வாழ்த்து தெரிவித்தார். ஆழ்வார்பேட்டை இல்லத்தில், ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த, பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா ஆகியோருக்கு, 100 ரூபாயை ஸ்டாலின் வழங்கினார்.மேலும் தன்னை சந்தித்த கட்சியினர் அனைவருக்கும், 100 ரூபாயை, புத்தாண்டு பரிசாக ஸ்டாலின் வழங்கினார்.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க., தலைவர்களை, காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி சந்திப்பது, கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE