புதுடில்லி :டில்லியை தொடர்ந்து, அரியானா மாநிலத்துக்கு, 'ஆம் ஆத்மி' கட்சியினர் குறி வைத்துள்ளனர். அங்கு, காங்., தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவின் நில முறைகேடு பிரச்னையை முன் வைத்து, பிரசாரம் செய்ய, திட்டமிட்டுள்ளனர்.
ஆட்சியை பிடித்தது:அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, டில்லியில், ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்., ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களை பிரசாரம் செய்து, ஆட்சியை பிடித்துள்ளது.இதையடுத்து, அருகில் உள்ள, அரியானா மாநிலத்தின் மீது, அந்த கட்சியினரின் கவனம் திரும்பியுள்ளது. அரியானாவிலும், காங்., ஆட்சி தான் நடக்கிறது. பூபிந்தர் சிங் ஹூடா, முதல்வராக பதவி வகிக்கிறார்.இங்கு, காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, நில முறைகேட்டில் ஈடுபட்டதாக, சில மாதங்களுக்கு முன், பரபரப்பு புகார் வெளியானது. அரவிந்த் கெஜ்ரிவால் தான், இந்த விஷயத்தை அம்பலப்படுத்தினார்.
சட்டசபை தேர்தல்:அரியானாவில், இன்னும் சில மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ராபர்ட் வாத்ரா மீதான குற்றச்சாட்டை, தீவிரமாக பிரசாரம் செய்து, அங்கும், ஆட்சியை பிடிக்க, ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, யோகேந்திர யாதவ் கூறியதாவது: டில்லி சட்டசபை தேர்தலில், பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அருகில் உள்ள அரியானா மாநில மக்களிடமும், எங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எங்களின் பிரசாரங்களில், அரியானாவைச் சேர்ந்த ஏராளமானோர், ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதுதான், அரியானா மீது, நாங்கள் குறிவைத்துள்ளதற்கு காரணம்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, டில்லி சட்டசபையில், அரவிந்த் கெஜ்ரிவால் அரசு, இன்று நம்பிக்கை ஓட்டு கோருகிறது.
தணிக்கை :அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், '' டில்லியில் செயல்படும் மூன்று தனியார் மின் நிறுவனங்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்படவுள்ளன. தணிக்கை பணி இன்று துவங்கும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE