அடித்தால் எதிர்த்து அடிப்போம்| Will beat if beaten | Dinamalar

'அடித்தால் எதிர்த்து அடிப்போம்'

Updated : ஜன 04, 2014 | Added : ஜன 03, 2014 | கருத்துகள் (80)
Share
சென்னையில், நேற்று நடந்த, பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், 'காடுவெட்டி குரு பேசுவார்' என, அறிவிக்கப்பட்டதும், கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினர். கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது. அப்போது, குரு பேசியதாவது: மரக்காணம் சம்பவம் தொடர்பாக, 8,000 பேர் கைது செய்யப்பட்டனர். 134 பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. என் மீது, தேசிய பாதுகாப்பு
beat, Kaduvetti guru,

சென்னையில், நேற்று நடந்த, பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில், 'காடுவெட்டி குரு பேசுவார்' என, அறிவிக்கப்பட்டதும், கூட்டத்தில் கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் கரவொலி எழுப்பினர். கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது.அப்போது, குரு பேசியதாவது:

மரக்காணம் சம்பவம் தொடர்பாக, 8,000 பேர் கைது செய்யப்பட்டனர். 134 பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. என் மீது, தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் பாய்ந்தது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. சம்பவம் நடந்த இடத்தில், போலீஸ் பாதுகாப்பு அதிகமாக கொடுக்காதது தான், பிரச்னைக்கு காரணம். வன்னியர்கள் போராட்டத்தில் இறந்த, வட மாநிலத்தைச் சேர்ந்த டிரைவரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வன்னியர்கள் இருவர் இறந்ததற்கு, அரசு எந்த உதவியும் செய்யவில்லை. அன்புமணி, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார். 'மகாமகம் குளத்தில் நீராடினால், சொர்க்கத்திற்கு செல்லலாம்' என்ற நம்பிக்கையில், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடினர். முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தவர்கள், நெரிசலில் சிக்கி இறந்தனர்; இந்த மரண சம்பவம் நடக்க யார் காரணம்? முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது, தர்மபுரியில், கல்லூரி பஸ்சை அ.தி.மு.க.,வினர் எரித்தனர்; அதில், மூன்று மாணவியர் தீயில் கருகி இறந்தனர்; இந்த மரணத்திற்கு யார் காரணம்?


சென்னையில், கார் விபத்தில், தெரு நாய் ஒன்று அடிப்பட்டு ரோட்டில் இறந்து கிடந்தது. அந்த வழியாக சென்ற, 'புளுகிராஸ்' அமைப்பைச் சேர்ந்தவர், அந்த நாயை, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, வழக்கு பதிவு செய்ய சொல்கின்றனர். போலீசாரும் அந்த நாயை, 'போஸ்ட்மார்ட்டம்' செய்து விடுகின்றனர். ஆனால், நாய் மீது காரை ஏற்றியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசில் புகார் கொடுத்தவர், டில்லி, 'புளுகிராஸ்' அமைப்பிடம் முறையிட்டார். டில்லியில் இருந்து, சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, நாய் மீது கார் ஏற்றிய நபரை பிடித்து, கோர்ட்டில் ஒப்படைத்தனர். கோர்ட்டில் அந்த நபருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இப்படி ஒரு தெரு நாயின் உயிருக்கு உள்ள மரியாதை கூட, எங்களுக்கு கிடையாதா?


அ.தி.மு.க., ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டுவேன்; இந்த ஆட்சி இருக்கும் வரை, என்னை சிறையில் அடைத்தாலும் கவலைப்பட மாட்டேன்; என் மீது, எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டேன். வன்னியர்களின் ஓட்டுக்கள் மட்டும் இனிக்கிறது; உரிமை கேட்டால் கசக்கிறது. ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் வன்னியர்களை அழிக்க பார்க்கின்றன. 'எரிகிற கொள்ளியில், எந்த கொள்ளி நல்ல கொள்ளி' என்பதை கணக்கு பார்க்க முடியாது. அதை போல அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளன. நம் மீது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பயம். மாமல்லபுரம் விழாவில், 50 லட்சம் வன்னியர்கள் கலந்து கொண்டதை, அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வன்னியர்களை அடக்கி, ஒடுக்கி விட முடியாது. எங்களை அடித்தால் எதிர்த்து அடிப்போம். வன்னியர்களின் குலத்தொழில், போர்புரிவதும், விவசாயம் பார்ப்பதும் தான். நாம் யார் கதவையும் தட்டப் போவது இல்லை; நம் கதவை தான் தட்டுகின்றனர். எங்களை அடக்கி வைக்க நினைத்தால், காட்டாற்று வெள்ளமாக பாய்வோம்; அணைகள் போட்டு தடுக்க முடியாது. மீண்டும் எங்களை சோதித்து பார்க்க விரும்பினால், தேதியை முன் கூட்டியே அறிவியுங்கள்; நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு, காடுவெட்டி குரு பேசினார்.


- நமது சிறப்பு நிருபர் -


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X