மதுரை: புத்தாண்டு பிறந்ததுமே லோக்சபா தேர்தல் வியூகங்களில் அரசியல் கட்சிகள் மும்முரமாகி விட்டன. மத்தியில் இழந்த அதிகாரத்தை பெறும் நோக்கத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரை அறிவித்து சில மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலை காட்டி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் பிரதிநித்துவம் கிடைக்கும் முயற்சியில் தி.மு.க., அ.தி.மு.க., காங்., கம்யூ., கட்சிகளை தவிர்த்து பிராந்திய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே ம.தி.மு.க., பா.ம.க., போன்ற கட்சிகள் பா.ஜ., தலைமையில் கூட்டணியில் இணைய முடிவு செய்து விட்டன. தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக இந்த இரு கட்சிகளும் தேர்வு செய்து மறைமுக பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ., கூட்டணியில் தங்களுக்கு இந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என மிகுந்த நம்பிக்கையில் உள்ளன. கடந்தாண்டு இதுகுறித்து பா.ஜ., தலைவர்களுடன் முறைமுகமாக பேசிய பிறகே பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் எழுந்துள்ளன. விருதுநகரில் வைகோ, வட தொகுதிகளில் பா.ம.க., மாஜி மத்தியமைச்சர்கள் மூர்த்தி, வேலு மற்றும் மாநில தலைவர் ஜி.கே.மணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டணியில் அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு அடுத்தபடியாக கணிசமான ஓட்டு வங்கியை வைத்திருக்கும் தே.மு.தி.க.,வை இழுத்திட வேண்டும் என்பதில் பா.ஜ.,வினர் பல மாதங்களாகவே முயற்சித்து வருகின்றனர். புத்தாண்டு தினத்தன்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துடன் பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அ.தி.மு.க.,வை தோற்கடிக்க வைக்க வேண்டும் என்பது தான் தே.மு.தி.க.,வின் தற்போதைய லட்சியம். இதற்காக லோக்சபா தேர்தலுக்கு வலுவான கூட்டணியில் இடம் பெற வேண்டும் என கட்சி தலைமை கருதுகிறது. தி.மு.க., காங்., அல்லது பா.ஜ.,வுடன் இணையலாமா என பலவிதமாக ஆய்வு செய்தது. காங்கிரசை கழற்றி விட்ட தி.மு.க.,வுடன் தற்போது புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற உதிரி கட்சிகளே உள்ளன. மேலும் ஓட்டு வங்கியை கணக்கிட்டு அதிக தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்டு பெற முடியுமா எனவும் தே.மு.தி.க., தலைமை யோசிக்கிறது.
இலங்கை பிரச்னை, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விஷயங்களில் தி.மு.க., காங்., இரு கட்சிகள் மீதும் தமிழகத்தில் பயங்கர அதிருப்தி நிலவுகிறது. இப்பிரச்னைகளே தி.மு.க.,விற்கு கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை பெற்று தந்ததாக தே.மு.தி.க., தலைமை கருதுகிறது. இதனால் பா.ஜ,, பக்கம் சாய்வதே பலன் தரும் எனவும் யோசிக்கிறது.
தே.மு.தி.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
நடக்க இருப்பது லோக்சபாவுக்கான தேர்தல். அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்றாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறுவது இயலாத காரியம். காங்., தி.மு.க., கூட்டணி போல மத்தியில் பா.ஜ., மாநிலத்தில் தே.மு.தி.க., ஆட்சி அமைக்கலாம் என தலைமை விரும்புகிறது. இதற்கு ம.தி.மு.க., பா.ம.க., போன்றவை சம்மதிக்கலாம். எலியும் புலியுமான காங்., கம்யூ., வெளி மாநிலங்களில் பா.ஜ.,வை தோற்கடிக்க அணி சேருவதை போல தே.மு.தி.க.,வை இக்கட்சிகள் ஏற்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிக லோக்சபா தொகுதிகளை பா.ஜ.,விடம் கேட்டு பெறலாம். மத்தியில் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால், அதில் பிரதிநிதித்துவம் பெறவும் வாய்ப்புள்ளது. காங்., தி.மு.க.,வை விட பா.ஜ., அணியில் இணைவதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்பதை அலசி ஆராய்ந்து, அந்த அணி பக்கம் சாய தலைமை முடிவு செய்துள்ளது, என்றார். எனவே பா.ஜ., அணியில் தே.மு.தி.க., இடம் பெற வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் கூட லோக்சபா தேர்தல் நெருக்கத்தில் தான் போட்டியிடும் தொகுதிகளை குறைத்து கொண்டாவது, தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுத்து விட வேண்டும் என தி.மு.க., கங்கணம் கட்சி கொண்டு திரிவதையும் மறுப்பதற்கு இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE