திருச்சி: ""பா.ஜ., அணிக்கு, தே.மு.தி.க., வரும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். திருச்சியில் பா.ஜ., லோக்சபா தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, பா.ஜ., மாநிலத்தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
பா.ஜ., சார்பில் தேர்தல் பயிற்சி முகாம், திருச்சியில் துவங்கியுள்ளது. ஜனவரி, 12ம் தேதியுடன், "வீடு தோறும் மோடி; இல்லம் தோறும் தாமரை' திட்டம் முடிகிறது. ஜன., 12 முதல், 15ம் தேதிக்குள் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க, மாவட்டந்தோறும் இரும்பு சேகரித்து, 28ம் தேதி சென்னையில் ஒப்படைக்கப்படும்.
தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜன., 31ம் தேதி ராமநாதபுரம் பாம்பனில் நடக்கும் கடல் தாமரை போராட்டத்தில், கட்சியின் அகில இந்திய நிர்வாகி சுஸ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.
பிப். 15ம் தேதிக்குள், மோடி மீண்டும் தமிழகம் வருவார். ஜன., 20 முதல் பிப்., 28க்குள், 39 லோக்சபா தொகுதிகளில் மாநாடு நடத்தப்படும். தேர்தல் அறிவிப்பு வெளிவரும் சமயத்தில், அதை எதிர்கொள்ள, பா.ஜ., 100 சதவீதம் தயாராக இருக்கும். இளைய தலைமுறைக்கு வழிவிட்டு விலகுவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததால், நாட்டுக்கு நன்மை ஏற்படும். 100 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாத காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க அவர் தயாராக இல்லை. மன்மோகன் சிங் திறமையானவர் என்றாலும், அவர் பொம்மையாக வைக்கப்பட்டிருந்தார். எதிர்ப்பு ஓட்டுக்கள் ஒன்றாக குவிந்துவிடக்கூடாது என்பதால், கெஜ்ரிவாலை காங்கிரஸ் தூண்டி விட்டது. பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அவர்களே இரையாகிவிட்டனர். பா.ஜ.,வில் எதிர்ப்பு பிரச்சாரம் தான் கெஜ்ரிவால் வெற்றிக்கு காரணம்.
கூட்டணிக்காக, தி.மு.க.,விடம் கையேந்தவில்லை. "கேள்வியும் நானே, பதிலும் நானே' என, கருணாநிதி இருப்பார். அதுபோல தான், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, அவரே கூறிக் கொண்டார். கூட்டணிக்காக, ம.தி.மு.க.,-- பா.ம.க., கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஒவ்வொரு கட்சிக்கும் முடிவு எடுக்கும் சுதந்திரம் உள்ளது. காங்கிரசுக்கு எதிராக ஓட்டுப்போட பல காரணங்கள் இருந்தாலும், இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு, ஒவ்வொரு தமிழனும், காங்கிரஸூக்கு தண்டனை வழங்க வேண்டிய கடமை உள்ளது.
தமிழகத்தில், பா.ஜ., தனித்து போட்டியிட அஞ்சவில்லை. அதேசமயம் தனியாக போட்டியிடுவோம் என, கூறவில்லை. நாடு முழுவதும் மோடி அலை வீசுவதால், 1967ம் ஆண்டுக்கு பிறகு, கல்லூரி மாணவர்கள் வரும் தேர்தலில் மத்திய அரசுக்கு எதிராக போராடவுள்ளனர். பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழர்களின் உணர்வுகளை மதித்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான முடிவை விஜயகாந்த் எடுப்பார். தை பிறந்தால் வழி பிறக்கும். சமையல் காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த பயனும் இல்லை. தேர்தலுக்காக மான்ய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை, 12 ஆக உயர்த்தப்படலாம். மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், தமிழ் சமுதாயத்துக்கு எதிரானவர். அவரால் தமிழகத்துக்கு சிறு நன்மை கூட நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE