கனிமொழிக்கு மட்டும் கனிவா? மதுரை கொந்தளிப்பு; தி.மு.க.,வில் எதிரொலிப்பு| Alagiri supporters anger | Dinamalar

கனிமொழிக்கு மட்டும் கனிவா? மதுரை கொந்தளிப்பு; தி.மு.க.,வில் எதிரொலிப்பு

Updated : ஜன 04, 2014 | Added : ஜன 03, 2014 | கருத்துகள் (44)
மதுரை போஸ்டர் விவகாரம், தி.மு.க.,வில் திடீர் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், கட்சித் தலைமையின் கண்டனக் கணைகள், அழகிரி மீது மட்டுமே பாய்ந்துள்ளதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 'கனிமொழியை வாழ்த்தி, ஊர் ஊராய் ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு எந்த கண்டிப்பும் கிடையாதா? அழகிரிக்கு மட்டும் எச்சரிக்கை; கனிமொழிக்கு கனிவா?' என, போர்க்குரல்
கனிமொழிக்கு மட்டும் கனிவா? மதுரை கொந்தளிப்பு; தி.மு.க.,வில் எதிரொலிப்பு

மதுரை போஸ்டர் விவகாரம், தி.மு.க.,வில் திடீர் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், கட்சித் தலைமையின் கண்டனக் கணைகள், அழகிரி மீது மட்டுமே பாய்ந்துள்ளதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 'கனிமொழியை வாழ்த்தி, ஊர் ஊராய் ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு எந்த கண்டிப்பும் கிடையாதா? அழகிரிக்கு மட்டும் எச்சரிக்கை; கனிமொழிக்கு கனிவா?' என, போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.
தி.மு.க., தலைமையின் வாரிசுகளான, கனிமொழிக்கு, நாளை, 46வது பிறந்த நாள்; அழகிரிக்கு, வரும், 30ம் தேதி, 63வது பிறந்த நாள். தேர்தல் நேரம் என்பதால், இருவரது ஆதரவாளர்களும், பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். கனிமொழியின் பிறந்த நாளை, கருணாநிதியின் பிறந்த நாள் விழா போல நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அறிவாலயத்தில், கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, வரிசை கட்டி தொண்டர்கள் நிற்பார்களே, அதுபோல், சி.ஐ.டி., காலனி வீட்டில், கனிமொழிக்கு வாழ்த்து சொல்ல பெரும் கூட்டம் திரள வேண்டும் என்பதே, கனிமொழி ஆதரவாளர்கள் போட்டுள்ள திட்டம். இதையடுத்து, கனிமொழியை வாழ்த்தி, சென்னை உட்பட பல நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 'தி.மு.க.,வின் இலக்கியமே, இலக்கணமே, எங்கள் தலைவியே, ஜான்சி ராணியே...' என, ஏராளமான புகழாரங்கள், போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.
இதை பார்த்ததும், அழகிரி ஆதரவாளர்கள் அதிரடியில் இறங்கினர். பிறந்த நாளுக்கு இன்னும், 30 நாட்கள் இருக்கும் நிலையில், மதுரை எங்கும், வாழ்த்து போஸ்டர்கள் சுவரை ஆக்கிரமித்து விட்டன. அதிலும் குறிப்பாக, 'கிங் ஆப் தமிழ்நாடு' என்ற அடைமொழியுடன், 'தேவர் மகன்' திரைப்படத்தில், நடிகர் கமல், நாற்காலியில் உட்கார்ந்திருந்த மாதிரியான போசில், அழகிரியை சித்தரித்து, ஊரெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆர்வமிகுந்த ஆதரவாளர்கள் சிலர், அதிரடியாக, 'இனி ஒரு விதி செய்வோம்' என்ற தலைப்பில், 'ஜனவரி, 30ல், தி.மு.க., பொதுக்குழு கூட்டம்; கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது' என, போஸ்டர் அடித்து ஒட்டி விட்டனர். இந்த போஸ்டர் தான், கட்சி தலைமையை கடும் அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. தி.மு.க., பொதுக்குழு முடிந்து விட்ட நிலையில், போட்டி பொதுக்குழு நடப்பது போல், அழகிரி ஆதரவாளர்கள் செய்த செயலை கண்டித்து, கருணாநிதி நேற்று முன்தினம் இரவு, அறிக்கை வெளியிட்டார். 'இப்படி விஷமத்தனம் செய்தவர்கள், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அவர் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை, அழகிரி ஆதரவாளர்களை, அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'கனிமொழி பிறந்த நாளுக்காக, ஏராளமான போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அது தலைமை கண்ணுக்கு தெரியவில்லையா? அண்ணனுக்காக நாங்கள் போஸ்டர் ஒட்டினால் மட்டும், எச்சரிக்கை விடுவதா? அண்ணனுக்கு எச்சரிக்கை; கனிமொழிக்கு மட்டும் கனிவா' என, கேள்வி எழுப்பினர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X