சென்னை: இலவச மிக்சி, கிரைண்டர்,மின் விசிறி சப்ளை செய்தநிறுவனங்களுக்கு, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், பாக்கி தொகையான, 450 கோடி ரூபாயை வழங்காமல்,இழுத்தடித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது. இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள், பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த ஆண்டு இலவச பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பொதுமக்களுக்கு இலவசமாக, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மின் அடுப்பை வழங்கி வருகிறது. இவற்றை கொள்முதல் செய்யும் பணியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொண்டு வருகிறது.நடப்பாண்டில், 1,500 கோடி ரூபாய் செலவில், 35 லட்சம் மிக்சி, கிரைண்டர்; 34 லட்சம் மின் விசிறி; 56 ஆயிரம் மின் அடுப்பு கொள்முதல் செய்ய திட்டமிட்டுஉள்ளது.இலவச
பொருட்கள் கொள்முதலுக்கான அரசாணை வெளியீடு தாமதம், 'டெண்டர்' ரத்து
செய்யப்பட்டு, மறு, 'டெண்டர்' நடத்தியது போன்ற காரணங்களால், குறித்த
காலத்திற்குள் பொருட்கள் கொள்முதல் செய்ய முடியவில்லை.இதையடுத்து,
கொள்முதல் காலம், 210 நாட்களில் இருந்து, 150 நாட்களாக குறைக்கப்பட்டது.
'டெண்டர்' மூலம் தேர்வுசெய்யப்பட்ட நிறுவனங்கள், அக்., 15 முதல், பிப்.,
13ம் தேதிக்குள், 100 சதவீத பொருட்களையும், படிப்படியாக சப்ளை செய்ய
காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போதையநிலவரப்படி, 12 நிறுவனங்கள், 400 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 லட்சம் கிரைண்டர்களை சப்ளை செய்துஉள்ளன. இதற்கு, அரசு சார்பில், 100 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது; இன்னும், 300 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.இதேபோல், 175 கோடி ரூபாய் மதிப்பிலான, 18 லட்சம் மிக்சிகளை சப்ளை செய்த,
ஆறு நிறுவனங்களுக்கு, 120 கோடி ரூபாய்; 10 லட்சம் மின் விசிறிகளை சப்ளை
செய்த, 8 நிறுவனங்களுக்கு, 30 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.இதன்படி, 675
கோடி ரூபாய் மதிப்பிற்கு, இலவச பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு,
பாக்கி தொகையான, 450 கோடி ரூபாய் வழங்க வேண்டி உள்ளதால், பல
தயாரிப்புநிறுவனங்கள், தமிழக அரசு மீது, கடும் அதிருப்தியில் உள்ளன.
மேற்கொண்டு பொருட்களை சப்ளை செய்ய தயக்கம் காட்டி வருகின்றன.இதனால், இலவச
பொருட்கள் கொள்முதல் செய்யும் பணிபாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இலவசங்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன், பொதுமக்களுக்கு, இலவச பொருட்கள் வினியோகம்செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் அடுப்பு மட்டுமே முழுவதுமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம், நிதி ஒதுக்கீடு செய்வதில், காலதாமதம்ஏற்படுத்தி வருகிறது. இதனால்தான், இலவச பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, குறித்த காலத்திற்குள், பணத்தை வழங்க முடியவில்லை' என்றார்.