'நாற்பதும் நமக்கே; பிரதமர் பதவியும் நமக்கே' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில், அறைகூவல் விடுத்துள்ளார் ஜெயலலிதா. 'மோடியே அடுத்த பிரதமர்' என்ற துடிப்போடு செயல்பட்டு வருகிறது, பா.ஜ., கட்சி. 'ஜெயலலிதாவின் கனவு, பகல் கனவு' என்கின்றனர், பா.ஜ., பிரமுகர்கள். 'மக்களின் எண்ணத்தை புரியாமல் பேசுகின்றனர் அவர்கள்' என்கிறார், அ.தி.மு.க., பேச்சாளர். இருவரும், வார்த்தை ஜாலங்களில், போட்டுக் கொண்ட, 'டிஷ்யூம்' இது:
மத்தியில் உள்ள, காங்கிரஸ் அரசு அகற்றப்பட வேண்டும். பா.ஜ., -- ம.தி.மு.க., - - பா.ம.க., - ஐ.ஜே.கே., கட்சிகளும், கொங்கு அமைப்புகளும் ஒரே நேர்கோட்டில் இணைந்துள்ளன. இந்தக் கூட்டணியில், தே.மு.தி.க.,வும் சேர வேண்டும். லோக்சபா தேர்தலுக்கு மட்டுமல்ல, 2016 சட்டசபை தேர்தலிலும், இக்கூட்டணி தொடர வேண்டும் என்பதே, என் விருப்பம். கடந்த, 1996ல், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, வைகோ பேசப்பட்டார். ஆனால், ஜி.கே.மூப்பனாரால் துவங்கப்பட்ட, தமிழ் மாநில காங்கிரசும், ஜெயலலிதாவுக்கு எதிரான அலையும், வைகோவை பின்னுக்கு தள்ளியது. ஆனால், தமிழகத்தில் இன்று நிலவும் அரசியல் நிலை, எந்தக் கட்சிக்கும் சாதகமாக இல்லை. மாநிலத்தின் ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வுக்கு எதிரான அலையும் வீசவில்லை. இந்நிலையில், தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரும், காங்கிரஸ், தி.மு.க., - அ.தி.மு.க.,வை புறக்கணிக்க வேண்டும். 'தமிழகத்தில் பா.ஜ., தனித்து நின்றால் வெற்றி பெறாது. கூட்டணி பலம் இருந்தால், தமிழகத்தில், 10 முதல், 15 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெறலாம். நாற்பது தொகுதிகளை பிடித்து விட்டால், ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என, அக்கட்சியினர் விரும்புகின்றனர். கனவு காண்பது அவர்களின் உரிமை. நடக்காத ஒன்றுக்கு ஆசைப்படுவது, கனவாகவே இருக்கும். ஒருவேளை, காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், மாநில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், யார் பிரதமர் என, அவர்களுக்குள் போட்டி ஏற்படும். அப்போது, ஜெயலலிதா பிரதமராவதை, இந்திய அரசியல் ஒரு போதும் அனுமதிக்காது.
தமிழருவி மணியன், தலைவர், காந்தி மக்கள் இயக்கம்
இந்தியாவில், 1989 முதல், ஒரு கட்சி ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது. இனிமேல், ஒரு கட்சி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. தேசிய கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., போன்றவை தனித்து ஆட்சி அமைக்க முடியாமல், மாநில கட்சிகளின் ஆதரவுடனே, கூட்டணி ஆட்சியை கடந்த, 20 ஆண்டுகளில் அமைத்துள்ளன. 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற ஈ.வே.ரா., அண்ணாதுரை போன்ற தமிழக தலைவர்களின் முழக்கம் நடைமுறைக்கு வந்து உள்ளது. வரும், லோக்சபா தேர்தலில், இந்த முழக்கம் எதிரொலிக்கும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகளுக்கு, தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு, பெரும்பான்மை கிடைக்காது. இந்த சூழ்நிலையில், அவ்விரு கட்சிகளுக்கும், அடுத்தபடியாக அதிக, எம்.பி.,க்களை உடைய மாநில கட்சியை, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டிய கட்டாயம், ஜனாதிபதிக்கு ஏற்படும். தமிழகம் மற்றும் புதுவையில், 40 லோக்சபா தொகுதிகளை வெல்லும், அ.தி.மு.க.,வை ஆட்சி அமைக்க, ஜனாதிபதி அழைப்பார். பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையில், மத்தியில் ஆட்சி அமையும்; இதில், மாற்றமில்லை. தமிழருவி மணியன் போன்றோர், நாட்டு மக்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ளாமலும், தெளிவு பெறாமலும், தனக்கு ஒரு மேடை கிடைக்காத என்ற ஏக்கத்தில், தரகு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நாடெல்லாம் பதற்றம் நிலவியது. அப்போது, தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. மசூதி இடிப்பால், தமிழகத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல், அமைதி நிலவியது. அந்த நிலைமையை ஏற்படுத்தியவர், முதல்வர் ஜெயலலிதாவே.
நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE