வரும், லோக்சபா தேர்தலில் போட்டியிட, மூன்று, 'சீட்' கேட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திடீர் முரண்டு பிடிப்பதால், தி.மு.க., கூட்டணியில், திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2009 லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., கூட்டணியில், வி.சி., கட்சிக்கு, விழுப்புரம் மற்றும் சிதம்பரம் என, இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில், அந்தக் கட்சியின் தலைவர், திருமாவளவன் வெற்றி பெற்று, எம்.பி.,யானார். கடந்தாண்டு நிகழ்ந்த, பா.ம.க.,வினரின் சித்திரை விழா கலவரம் உட்பட, விவகாரங்களில், வி.சி., கட்சிக்கு ஆதரவாக, தி.மு.க., தலைமை செயல்படவில்லை என்ற, கருத்து எழுந்தது. இருப்பினும், திருமாவளவன் அதை வெளிக்காட்டவில்லை. வரும் லோக்சபா தேர்தலில், 'தி.மு.க., கூட்டணியில், வி.சி.,க்கு நிச்சயம், மூன்று சீட்கள் கிடைக்கும்' என, அந்த கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அக்கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்கப்படும் என, தி.மு.க., தலைமை கூறியுள்ளதாக, தகவல் வெளியாகிஉள்ளது. அதனால், அதிர்ச்சி அடைந்த, வி.சி., நிர்வாகிகள், மூன்று 'சீட்' கேட்டு முரண்டு பிடிக்க துவங்கிஉள்ளனர். இந்தப் பிரச்னையால், தி.மு.க., கூட்டணியில், திடீர் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணி இன்னும் முழுமை பெறாத நிலையில், இப்போதுள்ள, தி.மு.க., அணியில் பிளவு ஏற்படும் என்ற, தகவல் பரப்பப் படுவதால், அக்கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, திருமாவளவனை, கடந்த வியாழன்று, சென்னையில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சந்தித்து, அரை மணி நேரம் பேசினார். வரும், பிப்ரவரியில், திருச்சியில் நடக்கவுள்ள, தி.மு.க., மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கவே, இந்தச் சந்திப்பு என, வெளியில் கூறப்பட்டாலும், திருமாவளவனை சமரசம் செய்ய நடந்த ஏற்பாடே என, கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., தலைமையிலான கூட்டணி பலமாக அமைந்தால் மட்டுமே, லோக்சபா தேர்தலில், வெற்றி பெற முடியும். கூட்டணியில் இணைய, தே.மு.தி.க., சம்மதம் தெரிவித்தாலும், அதிக 'சீட்'கள் கேட்கிறது. அதனால், கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுக்கு, ராஜ்யசபா தேர்தலின் போது, ஒரு 'சீட்' வழங்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, வி.சி.,க்கு மூன்று 'சீட்'கள் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இம்முறை வி.சி., ஒரு இடத்தில் போட்டியிட்டால், சட்டசபை தேர்தலின் போது, கடந்த முறையைவிட கூடுதல் 'சீட்'கள் வழங்கப்படும். இந்த விவரத்தை, திருமாவளவனை சந்தித்தபோது, ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், 'மூன்று ஆண்டுகளில், வி.சி., கட்சி வளர்ச்சி அடைந்து உள்ளதோடு, ஓட்டு வங்கியும் கணிசமாக அதிகரித்துள்ளது. மூன்று 'சீட்'கள் வழங்கினால் மட்டுமே, கட்சி நிர்வாகிகளை சமாதானப் படுத்த முடியும். அதனால், அவர்களுடன் பேசிய பின், பதில் அளிக்கிறேன்' என, கூறிஉள்ளார். இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE