இதுவரை நடந்த, லோக்சபா தேர்தல்களில், தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக திகழும், அ.தி.மு.க., - தி.மு.க.,வும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ., உடன் இணைந்து, தேர்தல் களத்தை சந்தித்தன. அப்போது, பிரதமர் வேட்பாளராக, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., யாரை அறிவிக்கிறதோ, அவர்களுக்காக, இந்த திராவிட கட்சிகள், ஓட்டுக் கேட்கும். மக்களும், 'மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்' என, விரும்புகின்றனரோ, அந்த கட்சி கூட்டணிக்கு, ஓட்டு போட்டு வந்தனர்.
ஆனால், இம்முறை, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க.,வுக்கு, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும், ஆசை எழுந்துள்ளது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளிலும், தனித்துப் போட்டி என, அறிவித்துள்ளது.அதேநேரத்தில், இதுவரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த, தி.மு.க.,வும், தற்போது, அந்தக் கட்சி உடனான உறவை துண்டித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் இணைந்து, தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.முதன் முறையாக, தமிழகத்தின் முக்கிய திராவிட கட்சிகள் இரண்டும், தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல், போட்டியிட உள்ளன. அதனால், காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும், சிறிய கட்சிகளை சார்ந்திருக்க வேண்டிய அல்லது தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மாநில கட்சிகளின் முதுகில் ஏறி பயணிக்காமல், தனியாக தேர்தல் களத்தில் இறங்கி, மக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளன.
மேலும், லோக்சபா தேர்தலுக்காக, பா.ஜ., கட்சியினர், 'வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை' என்ற கோஷத்துடன், மக்களை சந்தித்து வருகின்றனர். அவர்களை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினரும், 'கிராமம் தோறும் காங்கிரஸ், இல்லம் தோறும் கை' என்ற கோஷத்துடன், மக்களை சந்திக்க ஆயத்தமாகி உள்ளனர்.தேசிய கட்சிகளின் இந்த அதிரடி காரணமாக, அ.தி.மு.க.,வும், தனி கோஷத்தை உருவாக்கியுள்ளது. முந்தைய லோக்சபா தேர்தல்களில், காங்கிரஸ் மற்றும், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளருக்கு, ஓட்டு கேட்டு வந்த, அ.தி.மு.க., இம்முறை சொந்த கட்சி தலைவருக்கு ஓட்டுக் கேட்கிறது. அதாவது, முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, பிரசாரத்தை துவக்கியுள்ளது.
இதற்காக, 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற கோஷத்தை, முதல்வர், ஜெ., அறிவித்து, அதை மக்களிடம் விளம்பரப்படுத்தும்படி, கட்சியினருக்கு உத்தர விட்டுள்ளார். அதை ஏற்று, கட்சி நிர்வாகிகளும், தேர்தல் பேனர்கள் மற்றும் தலைவர்களின் வரவேற்பு பேனர்களில், அமைதி, வளம், வளர்ச்சி என்ற வார்த்தைகளை, பயன்படுத்த துவங்கி விட்டனர்.ஆனால், தி.மு.க.,விற்கு, பிரதமர் வேட்பாளராக, யாரை முன்னிறுத்தி, ஓட்டு கேட்பது என்ற சிக்கல் உள்ளது. எனினும், அதை பொருட்படுத்தாமல், அ.தி.மு.க.,வை பின்பற்றி, புதிய கோஷத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. அதேபோல், பிற கட்சிகளும், புதிய கோஷங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.'மக்களை கவர்ந்திழுக்கும் வாசகங்களை, தயாரித்து தாருங்கள்' என, கட்சி நிர்வாகிகளை கேட்டுள்ளதோடு, அவர்களும் தேடி வருகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE