''கூட்டணி அமைப்பது தொடர்பாக, என் மனதில் பல ரகசியங்கள் உள்ளன; அதற்காக என்னிடம் ரகசிய குழுவும் உள்ளது. ஆனாலும், அதை யாரும் கண்டு பிடிக்க முடியாது,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பேசினார்.
தே.மு.தி.க., பொதுக்குழு கூட்டத்தில், நேற்று அவர் பேசியதாவது:தே.மு.தி.க.,வில் இருப்பவர்கள் பலரும், கட்சியை விட்டு வெளியே போவதாக சொல்கின்றனர். லோக்சபா தேர்தலுக்குப் பின், மற்ற கட்சியில் உள்ள வர்களை ஓடவைக்க முடியும் என்ற, நம்பிக்கை எனக்கு உள்ளது.மக்களுக்கு எதுவும் செய்யாமல், '40 தொகுதிகளிலும், வெற்றி பெறுவோம்' என, ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். மக்களை ஏமாற்றும், சதி வேலையை இவர்கள் செய்கின்றனர்.பால் விலையை உயர்த்தியதை கண்டித்தே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., வெளியேறியது. மத்திய அரசும், எரிபொருள் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. யாரோ ஒரு முதலாளி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, இவ்வாறு விலையை உயர்த்துகின்றனர். மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தினாலும், வரியை குறைத்து, ஏழை மக்களின் செலவை, முதல்வர் ஜெ., கட்டுப்படுத்தி இருக்கலாம்.
சட்டசபை தேர்தலின்போது, மின்வெட்டை தீர்ப்பதாக சொல்லியே,ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.இப்போது, மின் பிரச்னையில் மத்திய அரசு மீது, பழிபோடுகிறார். ஆனால், மின் திட்டத்திற்காக, அவர் என்ன செய்தார் என்பதை சொல்லவில்லை.இடைத்தேர்தலில், வெற்றி பெற்றதை எல்லாம் பெருமையாக கூறுகின்றனர்.இடைத்தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த ஆட்சியில், பென்னாகரம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., 'டிபாசிட்' கூட பெற முடியவில்லை.என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும், நான் பயப்பட மாட்டேன்; போலீசாரின் கைது மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும், தே.மு.தி.க., தொண்டர்கள் மட்டுமே, கட்சி கரைவேட்டியுடன் திரிகின்றனர். தி.மு.க., ஆட்சியில், அ.தி.மு.க.,வினரும், அ.தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினரும் கரைவேட்டியை கழற்றி, வீட்டில் வைத்து விடுவர். அடுத்த முறை, இரண்டு கட்சிக்காரர்களும் கரைவேட்டி கட்டமாட்டார்கள்.
அழகிரி பேட்டி கொடுத்ததால் தான், அ.தி.மு.க.,வுடன், நான் கூட்டணி வைத்தேன். கூட்டணி அமைப்பது தொடர்பாக, என் மனதில் பல ரகசியங்கள் உள்ளன. அதற்காக என்னிடம், ரகசிய குழுவும் உள்ளது. ஆனாலும், இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது.தற்போது கூட்டணி தொடர்பாக, அமைக்கப்பட்டுள்ள குழுவினர், அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவர். அதன்பிறகு, நான் இறுதி முடிவெடுப்பேன்.பிப்., 2ம் தேதி விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டையில், எங்கள் கட்சி மாநாடு நடக்கிறது. அதில், கூட்டணி தொடர்பாக, நல்ல முடிவை அறிவிப்பேன்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE