தி.மு.க., தலைவர், கருணா நிதியின் மூத்த மகனும், தி.மு.க., தென்மண்டல அமைப்புச்செயலருமான, அழகிரிக்கு, வரும், 30ம் தேதி, 63வது பிறந்த நாள். இதையொட்டி, அவரது ஆதரவாளர்கள், மதுரையில், சமீபத்தில்ஒட்டிய போஸ்டர்கள், பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பின. அதிருப்தி அடைந்த கட்சி மேலிடம், அழகிரி ஆதரவாளர்கள், அதிகம் இடம் பெற்றிருந்த, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.,வை அடியோடு கலைத்து, ஸ்டாலின் ஆதரவாளர்கள் அடங்கிய புதிய பொறுப்புக் குழுவை அறிவித்தது.
இதுகுறித்து அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:ராமாயணத்தில், மூத்த மகன் ராமனை, வனவாசத்திற்கு அனுப்பி விட்டு, இளைய மகன் பரதனுக்கு மகுடம் சூட்டினார், தந்தை தசரதன். ராமன் காட்டிற்கு சென்ற போது, அவருடன், மற்றொரு தம்பி லட்சுமணனும், உடன் சென்றது போல, அண்ணன் அழகிரியின் பின்னால், தம்பிகளாகிய நாங்கள் செல்ல உள்ளோம்.கட்சித் தலைவர் அதிருப்தி அடையும் வகையிலான போஸ்டர்களை, மதுரையில் ஒட்டியவர்கள் இரண்டு பேர்; அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், எந்தத் தவறும் செய்யாத, 165 பேர் பதவிகளை பறித்தது வருத்தம் அளிக்கிறது.
தற்போது சென்னையில் உள்ள அழகிரியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்டோம். அவர், எங்களை பொறுமையாக இருக்கும்படி கூறியுள்ளார். அவரின் பேச்சில், பல ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.கட்சி பதவிகள் இல்லாவிட்டால், அழகிரியோடு சேர்ந்து இருக்கிறார்களா என, எங்களை சோதித்துப் பார்க்க, அக்னி பரீட்சை வைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சோதனையில், நாங்கள் வெற்றி பெறுவோம்; அழகிரியை விட்டு ஓட மாட்டோம்.கருணாநிதி தன் அறிக்கையில், 'மதுரை மாநகர் மாவட்டத்திற்கு முறைப்படி அமைப்பு தேர்தல்கள் நடைபெற்று, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, பொறுப்புக்குழு தற்காலிகமாக நியமிக்கப்படுகிறது' என, தெரிவித்துள்ளார். அதன்படி, உட்கட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிட தயாராகி விட்டோம்; தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் பதவிகளை கைப்பற்றுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE