அரசு நலத்திட்டங்களில், முதல்வர் படத்தை பதிப்பது மற்றும் கட்சி சின்னம் வரைவதை, அனைத்து மாநிலங்களிலும், ஆளும் கட்சியினர் வழக்கமாக வைத்துள்ளனர். தமிழகத்தில், புதிதாக விடப்பட்ட, மினி பஸ், போக்குவரத்துக் கழகம் சார்பில், விற்பனை செய்யப்படும், குடிநீர் பாட்டில்கள் போன்றவற்றில், முதல்வர் ஜெ.,யின் படம் இடம் பெற்றுள்ளது. கடந்த, 2013ல், உத்தர பிரதேச மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடந்த போது, மாயாவதி ஆட்சியில், அம்மாநிலங்களில், பல இடங்களில் நிறுவப்பட்ட, அவரது கட்சியின் சின்னமான, யானை சிலைகளும், தலைவர்கள் சிலரின் சிலைகளையும், தேர்தல் முடியும் வரை, துணியால் மூடும்படி, தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டது. அதேபோல், தமிழகத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், ரேஷன் கடைகளில் வழங்கப்படும், உணவுப் பொருட்கள் மீது, முதல்வர் உருவப்படம் பொறிக்கக் கூடாது என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
ஆணையத்தின் இந்த உத்தரவு சரியா, தவறா என, வார்த்தைகளில், பொரிந்து தள்ளுகின்றனர் இரு தலைவர்கள்: மத்திய அரசு திட்டங்களிலும், ஆளும் கட்சி தலைவர்களின் படம் இடம் பெறுகிறது. அதேபோல், மாநில அரசின் பல நலத்திட்டங்களில், முதல்வரின் படம் இடம் பெறுகிறது. ராஜஸ்தானில் சமீபத்தில், முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் படத்துடன், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால், இதை தேர்தல் நேரத்தில், சில கட்சியினர் பெரிதுபடுத்துவது சரியல்ல. அரசு திட்டங்களில், முதல்வர் படத்தை போடும் கலாசாரத்தை, முதலில் துவக்கி வைத்தவர் கருணாநிதி. முன்பெல்லாம், நிதி நிலை அறிக்கை மீது, யாருடைய படமும் இருக்காது. முதலில், தன் படத்தை போடச் செய்தவர் கருணாநிதி. மேலும், உதடுகள் ஒட்டாது என, அவர் நினைத்ததை எல்லாம், பஸ்களில் எழுதி வைத்தார். இன்று, அவர், முதல்வரை குறை கூறுகிறார். தேர்தலின்போது, அரசு நலத்திட்ட உதவிகள் எதுவும் வழங்கப்படாது. எனவே, அதில், முதல்வர் படம் இடம் பெறுகிறது என்ற சர்ச்சையே தேவையற்றது. போக்குவரத்து கழகம், கம்பெனி சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது. எனவே, பஸ் மற்றும் குடிநீர் பாட்டிலில், முதல்வர் படம் இடம் பெறுவதற்கு, அரசு பொறுப்பாகாது. முதல்வர் படம் இடம் பெறுவதால், தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, அவற்றை மறைக்க வேண்டிய தேவை இல்லை.
செ.கு.தமிழரசன்,தலைவர், இந்திய குடியரசு கட்சி
மக்களின் வரிப்பணத்தில், ஒரு கட்சி, விளம்பரம் தேடுவது, அயோக்கியத்தனம். எனவே, இதை எதிர்க்கிறோம். அனைத்து மாநிலங்களிலுமே, அரசு திட்டங்களில், முதல்வர் படம் இடம் பெற, எதிர்ப்பு
உள்ளது. உத்திர பிரதேசத்தில், மாயாவதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. போக்குவரத்துக் கழகம், கம்பெனி
சட்டத்தின் கீழ் வந்தாலும், அதில், அரசு முதலீடு உள்ளது. அரசு பணம் எதுவாக இருந்தாலும், அது மக்கள் பணம். அதை ஒரு கட்சி விளம்பரத்திற்காக, செலவழிப்பதை ஏற்க முடியாது. அரசு பஸ்களில், கருணாநிதியின் பழமொழிகள் மட்டுமே எழுதப்பட்டது. அவரின் படம் இடம்பெறவில்லை. ஜெயலலிதாவிற்கு, அதுபோல் எதுவும் தெரியாது என்பதால், அவரது படத்தை போட்டுக் கொள்கிறார். படம் இடம் பெற்றால், அதை தேர்தலின்போது மூட வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, முதல்வர் படத்தை
மூடுவதற்கு, தனியே செலவிட வேண்டியிருக்கும். இதனால், மக்கள் பணம் விரயமாகும். எனவே, அரசு
நலத்திட்டங்களில், முதல்வர் படம், அ.தி.மு.க., சின்னம் இடம் பெறுவதை, முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க., சட்டத்துறை செயலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE