தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின், 46வது பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் முன்னணி தலைவர்கள் பலர், நேரில் வாழ்த்து தெரிவித்தனர். கேரள புகழ் செண்டை மேளம் முழங்க, கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் பிறந்த நாள் விழா, கோலாகலமாக நடந்தது.
விமரிசையாக தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாளை, அந்தக் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடுவர். அதுபோல, கருணாநிதியின் மகள், கனிமொழியின் பிறந்த நாளும், சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டில், நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அந்தப் பகுதி முழுவதும், கனிமொழியை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வாழை மரத்தோரணங்கள் மற்றும் மாவிலைகளும் கட்டப்பட்டிருந்தன. லயன்ஸ் கிளப் ரத்த வங்கி நடத்திய, ரத்ததான முகாமில், 50க்கும் மேற்பட்ட, கனிமொழியின் ஆதரவாளர்கள் ரத்ததானம் வழங்கினர்.
ராக்கெட் பரிசு : கேரள மாநிலம், திருச்சூர் செண்டை மேளம், தஞ்சாவூர் தப்பாட்டம், திண்டுக்கல் மேளம், கரகாட்டம் மற்றும் ஒயிலாட்டத்துடன் கட்சியினர் பலர் வந்த, கனிமொழிக்கு பல பரிசுகளை வழங்கினர்.
குலசேகரப்பட்டினத்தில், ராக்கெட் ஏவுகணைத் தளம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து முயற்சித்து வரும் கனிமொழிக்கு, ராமாபுரத்தைச் சேர்ந்த சிலர், ராக்கெட் போல வடிவமைக்கப்பட்ட நினைவு பரிசை வழங்கினர். கனிமொழிக்கு, நேற்று காலையிலேயே, தி.மு.க., தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.
பின், குடும்பத்தினருடன் கனிமொழி, கேக் வெட்டினார். இந்நிகழ்ச்சியில், ராஜாத்தி, கனிமொழியின் கணவர் அரவிந்த் உட்பட, பலர் உடன் இருந்தனர்.
வாழ்த்து அட்டை : புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ராஜா, ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுமான்கான், தங்கம் தென்னரசு, கே.பி.பி.சாமி, பூங்கோதை, இந்திரகுமாரி, எம்.பி.,க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கே.பி.ராமலிங்கம், வசந்தி ஸ்டான்லி, ஜெயதுரை, ஹெலன் டேவிட்சன் மற்றும் கிள்ளை ரவிச்சந்திரன், அகரம் ரவி, பெப்சி முரளி, ருக்மாங்கதன் உட்பட, பலர் கனிமொழியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தார். தொலைபேசி மூலமாக, மத்திய அமைச்சர் வாசன் வாழ்த்து தெரிவித்தார்.
முன்தினமே... : கோவையில், நேற்று நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் பங்கேற்றதால், நேற்று முன்தினமே, அவர் கனிமொழியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரின் ஆதரவு மாவட்டச் செயலர்கள் சிலர், தங்களின் ஆதரவாளர்களை அனுப்பி, வாழ்த்து தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE