டில்லியில் நடந்த சட்டசபை தேர்த லில், அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சி, 28 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் மற்றும் டில்லி முதல்வராக இருந்த, ஷீலா தீட்சித்திற்கு எதிராகவே, பெரிய அளவில் பிரசாரம் செய்து, அவரது அரசுக்கு எதிரான அலையை, தங்களுக்கு சாதகமாக்கி, இந்த அளவுக்கு இடங்களைப் பிடித்தது. இருந்தாலும், 28 இடங்கள், பெரும்பான்மைக்கு குறைவு என்ப தால், எட்டு இடங்களைப் பிடித்த, காங்கிரஸ் ஆதரவுடனே ஆட்சி அமைத்துள்ளார் கெஜ்ரிவால்.
டில்லி தேர்தலில் வெற்றி பெற்ற, ஆம் ஆத்மி, அடுத்த கட்டமாக, லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, தயாராகி வருகிறது. இதுபற்றி விவாதிக்க, அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டம், டில்லியில், கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. அப்போது, ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்குள்ள, தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் உட்பட, 20 மாநிலங் களில், 300 இடங்களில் லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்களை நிறுத்துவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது.ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும் வலியுறுத்தியும், காந்தியவாதி, அன்னா ஹசாரே, டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால். போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே பற்றி, மீடியாக்கள் அதிக அளவில் செய்தி வெளியிட்ட போது, ஹசாரேயுடன் சேர்ந்து பிரபலமானார், கெஜ்ரிவால்.
இதையடுத்தே, ஆம் ஆத்மி கட்சியை துவக்கி, டில்லி தேர்தலை சந்தித்து, முதல்வராகி உள்ளார். அடுத்ததாக, லோக்சபா தேர்தலில், ஆம் ஆத்மி களமிறங்க தீர்மானித்துள்ளதால், தங்கள் கட்சிக்கு செல்வாக்குள்ள மாநிலங்கள் அனைத்திலும், பிரபலமான நபர்களை, கட்சிக்கு இழுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், அதேநேரத்தில், தங்களின் நேர்மையான செயல்பாட்டால் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள், செல்வாக்குள்ள திரைப்பட நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோரை அணுகி, அவர்களை தங்கள் கட்சியில் சேரும்படி வலியுறுத்தவும் தீர்மானித்துள்ளது. இதன்மூலம், கட்சிக்கு குறுகிய காலத்தில், பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்றும், செல்வாக்குள்ள அந்த நபர்கள் மூலம், கட்சி அமைப்புகளை விரிவுபடுத்தலாம் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் நம்புகின்றனர்.
ஏற்கனவே, நாட்டின் நலன் கருதி நல்லவர்கள், நேர்மையானவர்கள் பலரால், பல மாநிலங்களில் துவக்கப்பட்ட கட்சிகள், அந்தந்த மாநிலங்களில், ஏற்கனவே கோலோச்சி வரும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் அவற்றுடன் சேர்ந்த கூட்டணி கட்சிகளை மீறி, பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்பதால், பிரபலமான நபர்களை களமிறக்குவதன் மூலம், டில்லி சட்டசபை தேர்தலில் சாதித்ததை போல, குறுகிய காலத்தில், தேர்தல்களில் சாதனை படைக்கலாம் என்றும், கெஜ்ரிவால் உட்பட, பலரும் நம்புகின்றனர்.இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு மாற்றாக, பலமான தேசிய கட்சியாக, ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கி விடலாம் என, கெஜ்ரிவால் கணக்குப் போடுகிறார். அவர் போடும் மனக்கணக்கு, தப்புக்கணக்காகுமா; சரியான கணக்காகுமா என்பது, அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE