மோடியுடன் ஒரே மேடையில் விஜயகாந்த்; தமிழக பா.ஜ., திட்டம்| Tamil nadu BJP plans for Modi and vijayakanth shares stage | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மோடியுடன் ஒரே மேடையில் விஜயகாந்த்; தமிழக பா.ஜ., திட்டம்

Updated : ஜன 07, 2014 | Added : ஜன 07, 2014 | கருத்துகள் (129)
Share
சென்னை : திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடந்த, இளந்தாமரை மாநாடு போல், சென்னையில், பிப்ரவரி முதல் வாரத்தில், பா.ஜ., மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்கும், அம்மாநாட்டு மேடையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., தலைவர் ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க., தலைவர் வைகோ ஆகியோரும் இடம்பெறும் வகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க, தமிழக பா.ஜ.,
மோடியுடன் ஒரே மேடையில் விஜயகாந்த்; தமிழக பா.ஜ., திட்டம்

சென்னை : திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடந்த, இளந்தாமரை மாநாடு போல், சென்னையில், பிப்ரவரி முதல் வாரத்தில், பா.ஜ., மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமர் வேட்பாளர் மோடி பங்கேற்கும், அம்மாநாட்டு மேடையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., தலைவர் ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க., தலைவர் வைகோ ஆகியோரும் இடம்பெறும் வகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தமிழகத்தில் பா.ஜ., தலைமையில், ஓர் அணியை ஏற்படுத்தும் திட்டத்தில், முதற்கட்டமாக, தே.மு.தி.க., பா.ம.க., மற்றும் ம.தி.மு.க., கட்சிகளின் தலைமையுடன், பா.ஜ., தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதி்ல், ம,தி.மு.க., தலைவர் வைகோ, வெளிப்படையாக, பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித் துள்ளார்.
கூட்டணி குறித்து முடிவு செய்ய, பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் பொதுக்குழுவை கூட்டி விவாதித்தன. ஏற்கனவே உள்ள சமுதாய கூட்டணியை தொடரப் போவதாக, பா.ம.க., பொதுக்குழுவில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும், அக்கட்சியின் முடிவு இறுதியானது அல்ல என்றும், பா.ஜ., கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியல் வட்டாரம் ஆவலோடு எதிர்பார்த்த, தே.மு.தி.க., பொதுக்குழு, நேற்று முன்தினம், சென்னை அருகே நடந்தது. அதில், தி.மு.க.,வா, பா.ஜ.,வா என, முடிவு எடுக்க, கூட்டப்பட்ட கூட்டம் என்பதால், இரு கட்சிகளும், பொதுக்குழு விவாதத்தை அறிய ஆர்வமாக இருந்தன.

இப்பின்னணியில், தே.மு.தி.க., பொதுக்குழுவில் பேசப்பட்ட விவரம், வெளியாகி உள்ளது. அதன்படி, தி.மு.க.,வை விட, பா.ஜ., கூட்டணியில் சேர்வதற்கே, பலரும் ஆதரவாக பேசியுள்ளனர். குறிப்பாக, அக்கட்சி தலைவர், விஜயகாந்தின் மனைவி, பிரேமலதாவின் பேச்சு, தி.மு.க., எதிர்ப்பு நிலையை படம் பிடித்துக் காட்டியதுடன், கட்சியின் கூட்டணி திட்டத்தையும், வெளிப்படுத்தி விட்டது என, தே.மு.தி.க.,வினர் தெரிவித்தனர்.பொதுவாக, கூட்டணி பற்றி பேசியவர்களில் பலர், பா.ஜ., அணிக்கு ஆதரவாக இருந்த போதிலும், ஒரு தரப்பினர், தி.மு.க., கூட்டணிக்கு கொடி பிடித்தனர். சிறுபான்மையினர் அதிகம் உள்ள மாவட்டம்,தொகுதி யை சேர்ந்த நிர்வாகிகள் மட்டுமே, தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர். 'கணிசமான ஓட்டு வங்கியை கொண்டுள்ள கட்சி என்பதால், அதனுடன் கூட்டு சேர்வதே நல்லது; சிறுபான்மையினர் ஆதரவும் நமக்கு தொடரும்; மேலும், பா.ஜ., அணியில் போடப்படும் ஓட்டு கணக்கு, ஊர்ஜிதமற்ற ஒன்று' என, அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனாலும், இறுதியாக, தே.மு.தி.க.,வின் அதிகார வட்டத்தில் இருக்கும் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரின் முடிவே, கட்சியில் மேலோங்கும் என்பதால், பா.ஜ.,வுடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு தான் அதிகம் என்கின்றனர், அக்கட்சி
நிர்வாகிகள்.

தே.மு.தி.க., பொதுக்குழு விவாதம், பா.ஜ., தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ., வட்டாரம் கூறியதாவது:எங்கள் கட்சி தலைவர்கள், விஜயகாந்தை சந்தித்தபோது, உடனிருந்தவர்கள் பிரேமலதாவும், சுதீஷும் தான். அப்போதே, இருவரும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக உறுதியளித்துள்ளனர். அந்த நம்பிக்கையில் தான், பா.ஜ., மேலிடமும், தே.மு.தி.க.,வுடன் தொடர்ந்து பேச்சு நடத்த விரும்புகிறது.ஆனால், அடுத்தகட்ட பேச்சை, தை மாதம் பிறந்த பின், வைத்துக் கொள்ளலாம் என, விஜயகாந்த் கூறி விட்டார். ஜனவரி, 30க்குள் பேச்சுவார்த்தையை முடித்து விடுவோம். பிப்ரவரி 2ல், உளுந்தூர்பேட்டையில் நடக்கும் மாநாட்டில், பா.ஜ., கூட்டணியை விஜயகாந்த் அறிவிப்பார் என, எதிர்பார்க்கிறோம்.இந்நிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியை, சென்னைக்கு அழைத்துள்ளோம். அவரும் வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். திருச்சியி்ல் நடந்த இளந்தாமரை மாநாடு போல், சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.அந்த மாநாடும், மோடிக்கு ஆதரவாக, சென்னையில் திரளும் கூட்டமும் பேசப்படும் விதமாக இருக்க வேண்டும் என்பதே நோக்கம். பிப்ரவரி முதல் வாரத்தில், சென்னை மாநாடு நடத்தப்படும். அதில், ஒரே மேடையில், மோடியுடன் விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோரையும் பேச வைப்பது தான், தமிழக பா.ஜ.,வின் திட்டம்.இவ்வாறு, பா.ஜ., வட்டாரம் தெரிவித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X