அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் விவகாரமும், அதையொட்டி நடந்த, மதுரை தி.மு.க., கலைப்பு நடவடிக்கையும், தி.மு.க.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த ஒரு வாரமாக அறிவாலயம் வரவில்லை.
இதற்கிடையில், சென்னையில் இரண்டு நாட்களாக தங்கியிருந்த அழகிரியை, கட்சி தலைமை அழைத்துப் பேச விரும்பாததால், கடும் கோபத்தில், குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டார். மதுரை தி.மு.க.,வினர், அழகிரியை வாழ்த்தி, ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டினர். அந்தப் போஸ்டர்களில், அவரது பிறந்த நாளான, 30ம் தேதி, பொதுக்குழு கூடுவதாக, அச்சிடப்பட்ட போஸ்டர், கட்சித் தலைமை வட்டாரத்தில், கடும் சர்ச்சையை கிளப்பியது.இதையடுத்து நடந்த அவசர ஆலோசனைக்கு பின், அதிரடியாக, மதுரை மாநகர் கட்சி அமைப்பு, அடியோடு கலைக்கப்பட்டது. அதனால், அழகிரி ஆதரவாளர்கள், 165 பேர் பதவி இழந்துள்ளனர். வழக்கமாக, இதுபோன்ற விவகாரம் வெடிக்கும்போது, அழகிரியை சமாதானப்படுத்த, தலைமையிடம் இருந்து தூதும், அழைப்பும் வருவது உண்டு. கட்சி தலைமையும், குடும்பத்தினரும் பேசியதும், அழகிரி சமாதானமாகி விடுவதும் உண்டு.இதற்கு உதாரணமாக, 2001ல் நடந்த நடவடிக்கையை, தி.மு.க.,வினர் சுட்டிக் காட்டுகின்றனர். அந்த ஆண்டில், அழகிரிக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவரை கட்சியை விட்டு, 'சஸ்பெண்ட்' செய்தது, தி.மு.க., தலைமை. சட்டசபைத் தேர்தலில், எதிர்த்து வேலை செய்ததாகவும, குறிப்பாக, இவரது உள்ளடி வேலையால் தான், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் போன்றோர் தோற்றனர் என்றும், குற்றம் சாட்டப்பட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்படியொரு கடுமையான நடவடிக்கைக்கு பிறகும், அழகிரிக்கு கட்சியில், மறுபிரவேசம் கிடைத்தது. ஆனால், இந்த முறை, அவரது ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கை ரத்தாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், கட்சியில் அவருக்கான ஆதரவு வட்டம் சுருங்கியது தான். மொத்தத்தில், கட்சி முழுக்க, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது என, அறிவாலய வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
இதற்கிடையில், அழகிரி அளித்த, 'டிவி' பேட்டியும், கட்சித் தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, கூட்டணி பலம் அவசியம் என்ற நிலையில், தே.மு.தி.க.,வை இழுக்க, கருணாநிதி காய் நகர்த்தி வருகிறார். இதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் நோக்கில், பேட்டி அளித்துள்ளதாக, அடுத்த புகார் அழகிரி மீது பாய்ந்துள்ளது. இதனால், கடும் கவலை அடைந்த, கருணாநிதி, அறிவாலயம் வராமல் வீட்டில் இருக்கிறார். இந்த பிரச்னையால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுஉள்ளதாகவும், தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE