சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள, பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு, மருத்துவ பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, மருத்துவ பணி நியமனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணி நியமனங்களில், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றப் போவதில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., உட்பட, பல கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 'அரசின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது' என்றும் கூறி வருகின்றனர். இது தொடர்பாக, இரு கட்சிகளின் பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள்:
உயிரை பாதுகாக்கும் மருத்துவம், எதிர்கால தலைமுறையை உருவாக்கும் கல்வி ஆகியவற்றில், இட ஒதுக்கீடு அடிப்படையில், மருத்துவர்களையும், ஆசிரியர்களையும் நியமிக்க முடியாது. பல, 100 பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானம், ரயில் போன்றவற்றின் ஓட்டுனர்களை தேர்வு செய்யும்போது, திறன் வாய்ந்த, அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்கள் தேவையே தவிர, இட ஒதுக்கீட்டில் ஆள் எடுப்பதில்லை. அதேபோல, மூன்றாம் நபரின் உயிரை காப்பாற்றும் மருத்துவர்களில், அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களையே மக்கள் தேடி செல்கின்றனர். அரசு மருத்துவ மனைகளிலும், அனுபவம் வாய்ந்த, திறன் மிக்க மருத்துவர்களை நியமிக்க வேண்டியது அரசின் கடமை.அதேபோல், நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது. அவர்களுக்கு, செம்மையான கல்வியைத் தரும் ஆசிரியர்கள் மிக அவசியம். அவர்களை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கும்போது, கல்வியின் தரம் குறைந்துவிடும். எதிர்காலம் சூனியமாகிவிடும். மேலும், தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், பிற்பட்டோருக்கான ஒதுக்கீடுகளை, ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் பயன்பெற்றவர்கள் தான் அனுபவிக்கின்றனர். அந்த சமூகத்தில் இருப்பவர்களுக்குக் கூட, இட ஒதுக்கீடு கிடைப்பதில்லை. இதனால், தான் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இப்போது, மிகவும் பிற்பட்டோர் ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கோருகின்றனர். வன்னியர் சமூகம் வளர்ந்துள்ள அளவுக்கு, மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ள பிற இனத்தவர்கள் வளரவில்லை. எனவே, ஒரு குடும்பத்தில், ஒருவர் மட்டுமே, இட ஒதுக்கீட்டில் பயன்பெற வேண்டும் என்ற முறையை அமல்படுத்த வேண்டும்.
கு.ப.கிருஷ்ணன், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
கல்வி, வேலைவாய்ப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு, வாய்ப்பு அளிக்க உருவாக்கப்பட்டதே இட ஒதுக்கீடு. இதை சலுகையாகப் பார்க்க முடியாது. இட ஒதுக்கீட்டை, பல தலைமுறைகளுக்கு அமல்படுத்தினால் மட்டுமே, சமூகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். உள் ஒதுக்கீடும், ஒரே சமூகத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, அளிக்கப்படும் உரிமை. இட ஒதுக்கீட்டில் படித்த பொறியாளர்கள், மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தான், நாடு வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்துள்ளனர். நாட்டின் சட்ட ஒழுங்கு, இட ஓதுக்கீட்டில் படித்து வந்த கலெக்டர், எஸ்.பி.,களால் தான் பேணப்படுகிறது. வசதிபடைத்தவர்கள் பயணம் செய்யும் விமான ஓட்டிக்கு, இட ஒதுக்கீடில்லை என, கூறுகின்றனர். அப்படியானால், சாதாரண டவுன் பஸ்சுக்கு ஓட்டுனரும், நடத்துனரும் இட ஒதுக்கீட்டில் தான் நியமிக்கப் படுகின்றனர். இவர்களால், மக்களின் உயிர் பாதிக்கப்படுகிறதா? இட ஒதுக்கீட்டினால், தரம் குறையும் என்ற வாதம், இட ஒதுக்கீட்டில் பயனடையாத மேல் தட்டு வகுப்பினரின் சொத்தையான வாதம். இட ஒதுக்கீட்டை சலுகை என சொல்லாமல், சமூக நீதி என அழைப்பதற்கு காரணமே, வாய்ப்பு மறுக்கப்பட்ட, கீழ் தட்டு மக்களை கைதூக்கிவிடும் பணியாகும். வாய்ப்பே அளிக்கப்படாமல், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என, கூற முடியாது. புளி ஏப்பம் விடுபவர்களையும், பசி ஏப்பம் விடுபவர்களையும், சமமாக பாவிக்க முடியாது. புளி ஏப்பம் விடுபவருக்கு சிகிச்சை தேவை. பசி ஏப்பம் விடுபவருக்கு உணவு தேவை. இட ஒதுக்கீடு உணவை தருகிறது.
தங்கம் தென்னரசு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE