''கடந்த தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட ரணங்கள், இன்னும் ஆறவில்லை. லோக்சபா தேர்தலில், விஜயகாந்த் நிச்சயம் நல்ல கூட்டணி அமைப்பார்,'' என, பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
தே.மு.தி.க., பொதுக்குழு கூட்டம், நேற்று முன் தினம் நடந்தது. இக்கூட்டத்தில், விஜயகாந்த் மனைவி, பிரேமலதா பேசியதாவது:கடந்த தி.மு.க., ஆட்சியில், எங்கள் திருமண மண்டபத்தை இடித்தனர்; வருமான வரி சோதனை நடத்த தூண்டினர். இதையெல்லாம் விட, இத்து போன நடிகர் ஒருவரை, விஜயகாந்திற்கு எதிராக எவ்வளவு கொச்சையாக பேச வைக்க முடியுமோ, அவ்வளவு கொச்சையாக பேச வைத்தனர். அதை, தங்களின், 'டிவி'யில் நேரடியாக ஒளிபரப்பும் செய்து, அசிங்கப்படுத்தினர். தி.மு.க.,வினரால் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆறவில்லை. ஜெயலலிதாவும், இப்போது வழக்கு மேல் வழக்கு போட்டு வருகிறார். ஆனால், தே.மு.தி.க., ஒன்பது ஆண்டு கால கட்சியாக இல்லாமல், 40 ஆண்டு கட்சி போல் எழுச்சியாகவும், கட்டுக்கோப்பாகவும் உள்ளது. கட்சியை விட்டு எட்டு பேர் போனாலும், 80 லட்சம் தொண்டர்கள் இருக்கின்றனர். எட்டு கோடி தமிழக மக்கள் மனதில், தே.மு.தி.க., உள்ளது. இந்த தேர்தலில் நிச்சயம் நல்ல கூட்டணி அமையும். இவ்வாறு பிரேமலதா பேசினார்.
தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர், சுதீஷ் பேசியதாவது: எட்டு ஆண்டுகளுக்கு முன், மத்திய அமைச்சர் மகன் ஒருவரை, நான் சந்தித்தேன். அப்போது அவர், 'உங்கள் கட்சியின் பெயர் என்ன?' என்று கேட்டு, என்னை கிண்டல் செய்தார். அதே நபரை, சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்தேன். இருக்கையில் இருந்து எழுந்து ஓடி வந்த அவர், 'எப்படி இருக்கிறீர்கள்; விஜயகாந்தை கேட்டதாகச் சொல்லுங்கள்' என்றார். இதையெல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொண்டர்கள் மகிழ்ச்சியை தக்கவைக்க, விஜயகாந்த் நல்ல கூட்டணியை அமைப்பார். இவ்வாறு சுதீஷ் பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE