"பொங்கல் பரிசு வாங்கிட்டீயாடீ...'' என்று கேட்டவாறு, குஷியாக வந்தமர்ந்தாள் மித்ரா.
"நாளைக்கு தான் வாங்கணும்... நீ வாங்கிட்டீயா?'' என்று எதிர் கேள்வி கேட்டாள் சித்ரா.
"கூட்டம் இல்லாம இருக்குன்னு கேள்விப்பட்டதும், ரேஷன் கடைக்கு போயிட்டேன். முதல் நாள்ல வாங்கினாத்தானே. பரிசு பொருட்களை தனியா பையில் போட்டு கொடுப்பாங்க. அதுக்கப்புறம் கொடுக்க மாட்டாங்க. போன வருஷம், டி.எஸ்.ஓ., ஆபீசுல மூட்டை மூட்டையா பையை ஓரங்கட்டி வச்சுட்டாங்க. கலெக்டர் ஆபீஸ் காம்பவுன்ட்ல இருக்கற எல்லா ஆபீசிலயும், அதை, ஒன் இயருக்கு யூஸ் பண்ணுனாங்க. இந்த வருஷமாவது, அச்சடிச்ச பைய மக்களுக்கு கொடுத்தா பரவாயில்லை,'' என்றாள் மித்ரா.
"ஒங்க கடையில், ஜெராக்ஸ் வாங்கினாங்களா?'' என்று புதிராக கேள்வி எழுப்பினாள் சித்ரா.
"இல்லையே. கார்டு கொண்டு வந்து, கையெழுத்து போடுறவங்களுக்கு பொருட்களும், 100 ரூபாயும் கொடுத்தாங்க. போன வருஷம், கடைசி நேரத்தில் ஆயிரக்கணக்கானவங்க வாங்கலை. இருந்தாலும், சில "சேல்ஸ்மேன்'களே கையெழுத்து போட்டு, பொருட்களையும், ரொக்கத்தையும் அமுக்கிட்டாங்களாம். இந்தாண்டு அதிகாரிகள் உஷாராகி, தீவிரமா கண்காணிக்கிறாங்களாம். அது சரி, ஜெராக்ஸ் ன்னு சொன்னீங்களே, அதென்ன விஷயம்,'' என்று ஆர்வமாய் கேட்டாள் மித்ரா.
"அதுவா, சிவில் சப்ளை ஆர்.ஐ.,கள், ஒவ்வொரு கார்டுதாரரிடமும் ஜெராக்ஸ் வாங்கி, என்ன ஜாதின்னு எழுதி வாங்கச் சொல்லியிருக்காங்க. சேல்ஸ்மேன்ஸ் அதற்கு தயாராகி, சில எடத்துல வாங்கிட்டாங்களாம். அப்புறமா, கோ-ஆப்ரேட்டிவ் பி.டி.எஸ்., அதிகாரிங்க சிலர், "நீங்க எங்க கன்ட்ரோல இருக்குறீங்க. எங்களை கேட்காம வேற வேலை செய்யக்கூடாதுன்னு தடுத்துட்டாங்களாம்,'' என்று கூறியவாறு, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
"பார்க் ரோடு மேட்டர்ல நடந்த உண்மை உனக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். சொல்றேன் கேளுடீ, பார்க் ரோட்டுல "பிளை ஆஸ்' கற்களை எடுத்துட்டு தார்ரோடு போடுறாங்க. முன்னாடி, "கல்வெர்ட்' போட்டு "பிளை ஆஸ்' கற்களை பதிச்சதுக்கு, இதுவரைக்கும் "பில்' கொடுக்கலையாம். இப்ப கற்களை எடுத்துட்டு ரோடு போடுறதால, பழைய கற்களை நீங்களே எடுத்துக்கிட்டு, பார்க் ரோட்டில் தார்ரோடு வேலையை செஞ்சு "பில்' வாங்கிக்கிங்கன்னு அதிகாரிகள் சொல்றாங்களாம். இதே மாதிரிதான், பல வேலைகளுக்கு "பில்' கொடுக்காம இழுத்தடிக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
இன்னோரு விஷயம் நான் சொல்றேன் கேளு என்ற மித்ரா, ""திருப்பூர் யூனியன்ல என்ன நடக்குதுன்னே தெரியலையாம். யூனியன் லெவல்ல எந்த வேலையா இருந்தாலும், அங்க இருக்கிறவரு கை காட்டுற நாலஞ்சு பேருக்குதான் கெடைக்குதாம். வேலை கொடுக்கிறதுக்கு முன்னாடியே "கவனி'க்கனும்னு சொன்னா எப்படிங்க? எல்லாரும் அப்படி செய்ய முடியுமான்னு ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் ஆதரவாளர்ககிட்ட புலம்பிட்டு இருக்காங்களாம்,'' என்றாள்.
எங்க வார்டுக்கு கவுன்சிலர் வந்து பல வருஷமாச்சுன்னு மக்கள் புலம்பி பார்த்திருக்கோம். ஆனா, 59வது வார்டு கவுன் சிலர் வீடு வீடா போய் மக்களை சந்திச்சாங்க தெரியுமா,'' என்று அடுத்த விஷயத்துக்குள் நுழைந்தாள் சித்ரா.
"என்ன விஷயம். எலக்ஷன் பிரசாரத்தை இப்பவே துவக்கிட்டாங்களா,'' என்று, அரசியல் நியூஸ் கேட்க ஆர்வமானாள் மித்ரா.
"இது, வேற விஷயம். ரெண்டு வருஷத்துக்கு முன்னால, பட்டா வாங்கித் தர்றதா சொல்லி, அவரோட அசிஸ்டெண்ட்டுக சிலர், பல பேரிடம் ஆயிரக்கணக்குல பணம் வாங்கினாங்க. பணம் கொடுத்ததுல 12 பேர் போலீசுல கம்ப்ளைன்ட் கொடுத்து, பணத்தை திரும்ப வாங்கிட்டாங்க. பணம் கொடுத்த மத்தவங்களும் போலீசுக்கு போக வேண்டாம். வாங்குன பணத்த செட்டில் செய்றோமுன்னு கவுன்சிலர் நேரடியா வீடு வீடாப் போய் சொல்லியிருக்காங்க. சொன்ன மாதிரியே, பணம் வசூலிச்ச அசிஸ்டெண்ட்டுக மூலமாவே கொஞ்சம் கொஞ்சமா செட்டில் செஞ்சுட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE